Wednesday, December 22, 2010

Un Bandit Corse : கோர்சிப் போராளி


மூலம் :  கய் தே மாப்பசான்
தமிழில் : மா. புகழேந்தி


ஐத்தோன் காடு வழியாக சாலை மெல்ல முன்னேறியது. எங்களது தலைக்கும் மேல் பைன்
 மரங்கள் கூடாரமிட்டு இருந்தன. வீசிய காற்று   எதோ ஓர் இசைக் கருவியை இசைப்பது  போல் வித்தியாசமான  லியை எழுப்பிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர நடைக்குப் பின் ஒரு வெட்ட வெளி தென்பட்டது, சிறிது இடைவெளிக்குப் பிறகு ஒரு பெரும் பைன் மரம் பெரிய கூடையைப் போல் கிளை பரப்பி இருந்தது, காட்டின் முடிவுக்கே வந்து விட்டோம், சில நூறு அடிகள் கீழே, நியோலோ பள்ளத்தாக்கை நோக்கி ஒரு கணவாய் சென்றது.

கணவாய்க்கு இரு புறமும் துருத்திக் கொண்டு இருந்த குன்றுகளின் மேல், மிகப் பெரும் மரங்கள், திருகியவாறு வளர்ந்திருந்தன, பார்வைக்கு முதுகில் பொருட்களைக் கட்டிக்கொண்டு  மலை ஏறுபவர்களைப் போலவும் எதோ கடும் முயற்சிக்குப்பின் அங்கு ஏறியவைகளைப் போலவும் தெரிந்தது. நாங்கள் திரும்பிப் பார்த்த  போது முழுக் காடும் நீட்டிவிடப் பட்டது போல் எங்கள் கால்களுக்குக் கீழ் மாபெரும் செழிப்பான பசுமையான காடு வானை முட்டும் மலைகளுக்கிடையில் தெரிந்தது.

நாங்கள் நடக்கத் தொடங்கினோம், பத்து நிமிடம் கழித்து கணவாயில் இருந்தோம்.

அங்கு நான் குறிப்பிடத்தகுந்த நிலப்பரப்பினைக் கண்டேன். அதற்கும் பின்னால் காடு பள்ளத்தாக்கு வரை நீண்டு இருந்தது, இதற்கும் முன்னர் நான் கண்டிராத பள்ளத்தாக்காக  இருந்தது. ஒற்றைக் கல் இரண்டு மலைகளுக்கும் நடுவில் இணைப்பு போல் பல அடி நீளத்துக்குக் கிடந்தது, எந்த ஒரு வயலையோ மரத்தையோ பார்க்க முடியாமல் இருந்தது. இது தான் நியோலோப் பள்ளத்தாக்கு, கோர்சித் தந்தையகம், அடைய முடியாத கோட்டை, ஊடுரவல் காரர்களால் மலையகத்தோரை விரட்டவே முடியாத இடம்.

என்னுடன் வந்தவர் சொன்னார், "இங்கு தான் நமது போராளிகள் பதுங்கி  இருக்கும் இடமா? "

விரைந்து நாங்கள் கணவாயின் குறுகிய வாயினை அடைந்தோம், அது விவரிக்க முடியாத காட்டு அழகுடன் விளங்கியது.

ஒரு புல் பூண்டு கூட இல்லை. எல்லாம் கருங்கற்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை, தகிக்கும் கற் பாலைவனமாக இருந்தது சூரியனால் அடுப்பு போல வெம்மையூட்டப் பட்டு இருந்தது, சூரியன் தலைக்கும் மேலாக அந்த வேலைக்காகத் தான் இருப்பது போலத் தோன்றியது. எங்கள் கண்களை மலை முகத்தினை நோக்கி உயர்த்திய போது, நாங்கள் கண்டது கண்களைக் கூசச் செய்யவதாகவும்  செயலை  மறக்கச் செய்வதாகவும் இருந்தது. மலை உச்சிகள் பவழ மாலை போல, மின்னும் கற்களைக் கொண்டிருந்தது. தலைக்கும் மேலிருந்த வானம் நீலமாகவும்  ஊதா நிறத்துடனும்  மலைகளின் பின் புலத்தில் கண்டிராத காட்சியைக் கட்டியவாறு  இருந்தது. கீழே கருங்கற்கள் மின்னும் சாம்பல் வண்ணத்தில் இருந்தது. காலுக்குக் கீழ் உள்ள தரை சாம்பலோ என்று எண்ணுமாறு இருந்தது. வலது புறத்தில் சிற்றாரொன்று ஒழுங்கற்று ஒலி எழுப்பிக்  கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் தடுமாறியபடி எரிச்சலூட்டும் வெப்பத்திலும் முன்னேறினோம்.

இந்த வெய்யிலில், இந்தப் புழுக்கத்தில், இந்த வறண்ட பள்ளத்தாக்கில், ஓடும் இச் சிற்றாறு, எப்போதும் வேகமாக ஓடிக்கொண்டு, பாறைகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தது. அவ் வெள்ளத்தை  எல்லாம் சூளை போலக் காய்ந்திருந்த பாறைகள் பேராசையுடன் பருகி புத்துணர்ச்சியற்று தாகத்துடனேயே இருந்தன.

 மரத்தாலான சிலுவை ஒன்று கற்களுக்கிடையில் செருகப் பட்டிருந்தது எங்கள் கண்களில் பட்டது. ஒரு மனிதன் இங்கே கொல்லப் பட்டு இருக்க வேண்டும்; என்னுடன் வந்தவரிடம் சொன்னேன். 

"உங்கள் போராளிகளை பற்றிச் சொல்லுங்கள்."

அவர் பதிலளித்தார்:

"எனக்குத் தெரிந்த புகழ் பெற்ற ஒரு போராளியைப் பற்றிச் சொல்கிறேன். அவன் செயின்ட்  லூசீ"

"இந்த மாவட்டத்தில் இருந்த ஒரு இளைஞனால் அவனது தந்தை கொல்லப் பட்டார்  என்று சொல்வார்கள், செயின்ட் லூசீ அவனது சகோதரியுடன் அனாதையாக விடப்பட்டான். அவன் சிறுத்த நோஞ்சானான இளைஞன், சக்தி யற்று அடிக்கடி நோயுறுபவன். அவன் தந்தையைக் கொன்றவன் மீது சூளுரைக்க வில்லை. அவனது உறவினர்களெல்லாம் அவனைப் பழிவாங்கத் தூண்டினர், ஆனால் அவன் அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ள வில்லை. "

இருப்பினும் பழைமையான கோர்சி நடைமுறையின் படி அவனது சகோதரி பழிவாங்கும் ஆத்திரத்துடன், கொல்லப்பட்டவனுக்காக பழிவாங்கப்படவில்லை துக்கப் படவில்லை என்பதை நினைவூட்ட  அவனது கருப்பு உடையைக் கொண்டு சென்றாள்.

அவன் அதையெல்லாம் பொருட் படுத்த   வில்லை , வேண்டு மென்றே அவமதிப்பதைப் போல குண்டுகளால் நிரப்பப் பட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த  தனது தந்தையின் துப்பாக்கியினைக் கூட அவன் கண்டுகொள்ளவில்லை , மாவட்டத்தில் இருந்த மற்ற இளைஞர்களைப் பார்க்கக் கூசி வெளியில் செல்லாமல்   ஒளிந்து   கொண்டிருந்தான்  .

அவன் அந்தக்  குற்றத்தை  மறந்து விட்டான்  என்றே  தோன்றியது. தனது சகோதரியுடன் தனிமையில் வாழ்ந்தான்.
ஆனால் ஒரு நாள் அவன் தந்தையைக்  கொன்றதாகக்  கருதப் பட்ட இளைஞனுக்குத் திருமண  ஏற்பாடு நடந்தது.
செயின்ட் லூசீவை இச்செய்தி பாதிக்க வில்லை. ஆனால் மாப்பிள்ளைப் பையன் சுற்றிக் கொண்டு சர்ச்சுக்குப் போகாமல், எந்தக் கவலையுமில்லாமல், இரண்டு அனாதைகள் இருந்த வீட்டின் வழியாகப் போனான்.

அந்தத் திருமண ஊர்வலம் பயறுகளை உண்டுகொண்டு ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த இருவரின் கண்களில் பட்டது.
செயின்ட் லூசீ நடுங்கினான், ஒரு வார்த்தை கூட பேசாமல் திடீரென எழுந்தான், கைகளால் சிலுவை இட்டுக் கொண்டான், சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த துப்பாக்கியினை எடுத்தான், வெளியில் வந்தான். 

"இதைப் பற்றி பிற்பாடு பேசும் போது அவன் சொன்னான்,' எனக்குள்ள என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது, என் ரத்தத்தில் தீப்பிடிச்சது போல இருந்தது, இத செஞ்சே ஆகணும்னு தோணிச்சு, என்னென்னவோ செஞ்சாலும் என்னால் தடுக்க முடியலை, கோர்த் போகும் சாலையில் இருந்த ஒரு குகையில் துப்பாக்கியை மறைச்சு வச்சேன்….. "

ஒரு மணி நேரம் கழிச்சு மனதில் எந்தக்  கவலையும்  இல்லாமல் அவன் திரும்பினான், எப்போதும் போல சோகமான முகத்துடன் இருந்தான்.   அவனுக்கு வேறு சிந்தனை இனிமேல் இல்லை என்று அவன் சகோதரி நம்பினாள்.

பொழுது விழுந்ததும் அவன் காணாமல் போனான்.

அவனது எதிரி மாப்பிள்ளைத் தோழர்கள் இருவருடன்  அன்று மாலை கோர்திற்கு நடந்து புறப்பட்டான்.
பாட்டுப் பாடிக்கொண்டே மாப்பிள்ளை நடந்தான், அப்போது செயின்ட் லூசீ அவன் முன் வந்து நின்றான். கொலைகாரன் முகத்தை நேருக்கு நேராய்ப் பார்த்தான். வியப்புடன் சொன்னான் 'இது தான் சரியான நேரம்' , அப்புறம் மாப்பிள்ளையின் நெஞ்சில் சுட்டான்.

துணைக்கு வந்ததில் ஒருவன் ஓடிவிட்டான்; அடுத்தவன் செயின்ட் லூசீவைப் பார்த்து
"நீ என்ன செஞ்சிட்ட தெரியுமா?", என்று சொல்லி உதவிக்கு கோர்த்தை நோக்கிச் செல்ல முற்பட்டான், அப்போது செயின்ட் லூசீ கடுமையான குரலில் எச்சரித்தான் 'இன்னொரு அடி எட்டு வச்ச, கால்ல சுடுவேன்'
இது வரை பொறுமையாக இருந்த செயின்ட் லூசீவை அறிந்திருந்த இன்னொருவன் 'உனக்கு அவ்வளவு தைரியம் இல்லை என்று சொல்லி ஓட முற்பட்டான், ஆனால் அலறியபடி விழுந்தான், அவனது தொடை குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது.

அவன் விழுந்த இடத்துக்கு வந்து செயின்ட் லூசீ அவனைப்  பார்த்துச் சொன்னான் ,' நான் காயத்தைப் பார்ப்பேன், கொஞ்சமா இருந்தா விட்டுட்டுப் போவேன், இல்லை பலமா இருந்துதுன்னா கொன்னுருவேன்'

காயத்தை ஆராய்ந்தான், பலமாக இருந்தது, மெல்ல அவனது துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பினான், காயம் பட்டவனை கடவுளிடம் வேண்டிக்கச் சொன்னான், பிறகு தலையில் சுட்டான்.
அடுத்த நாள் அவன் மலையில் இருந்தான்.
'உங்களுக்குத் தெரியுமா அதற்கப்புறம் அவன் என்ன செய்தான் என்று?"

"காவல் துறையால் அவனது குடும்பத்தார் அனைவரும் கைது செய்யப் பட்டனர். இறந்து போனவனின் உறவினர்களால் குற்றம் சாட்டப் பட்டவரும்  அவனைக் கொலை செய்யத் தூண்டியதாக சந்தேகத்துக்குட்பட்டவருமான அவனது மாமா     சிறையில் போடப்பட்டார். ஆனால் அவர் சிறையிலிருந்து தப்பித்தார், போகும் போது துப்பாக்கி ஒன்றையும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். காட்டுக்குள் சென்று தனது மருமகனுடன் சேர்ந்து கொண்டார்.

அடுத்ததாக செயின்ட் லூசீ தனது மாமாவைக் காட்டிக் கொடுத்தவர்கள், ஒவ்வொருத்தரையாகக் கொல்ல ஆரம்பித்தான், மற்றவர்களை எச்சரிப் பதற்காக இறந்தவர்களது  கண்களைப் பிடுங்கினான், அது பார்த்தவற்றைச்  சொல்லாதே என்பதாக இருந்தது.

தனது எதிரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் கொன்று போட்டான். தனது வாழ்வில் பதிநான்கு காவலர்களை அவன் கொன்றிருக்கிறான். அவனுக்குப் பிடிக்காத எதிரிகளது வீடுகளைக் கொளுத்தி இருக்கிறான், அவனது இறப்பு வரை அவனது செயல்கள் மிகக் கொடுமையானவை, மற்ற   போராளிகளை விட அவனைப் பற்றிய நினைவுகளை  எங்களது மனதில்  நாங்கள் காத்து வைத்திருக்கிறோம்.

சூரியன், மாண்டி  சிந்தோ மலை முகட்டுக்குப் பின் மறைந்தது , உயர்ந்த கருங்கல் மலையின் நிழல் பள்ளத்தாக்கில் தூங்கச் சென்றது.  இரவுக்குள் ஆல்பர்ட்ஆச்சியோ கிராமத்தை அடைய வேண்டும் என்று நாங்கள் வேகமாக எட்டு வைத்தோம், கூரான கற்களே பாதை முழுக்க நிறைந்திருந்தன.

அந்தக்   போராளியை நினைத்துக் கொண்டு நான் கேட்டேன்

"என்ன கொடுமை உங்களது பழிவாங்கும் உணர்ச்சி"

என்னுடன் வந்தவர் பொறுமை யற்றுத்    திருப்பிச் சொன்னார்
"பிறகு நீங்க என்ன செய்வீங்களாம்? ஓர்  ஆண் தனது கடமையைச் செய்தே ஆக  வேண்டும்."
 ***

Sunday, December 19, 2010

Революционер : புரட்சியாளன்


மூலம் : மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ்
தமிழில்: மா. புகழேந்தி

1

கேப்ரியல்  ஆண்டர்சன், ஆசிரியர், பள்ளித் தோட்டத்தின் எல்லை வரை நடந்து வந்தவர் அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தார். சற்று தூரத்தில், இரண்டு மைல்களுக்கு அப்பால், பனி நிறைந்திருந்த காட்டில் மரங்கள் நீல நிறமாகத தென்பட்டன.  அது ஒளிமிகுந்த நாளாக இருந்தது. தோட்டத்து வேலிகளில் உள்ள இரும்புப் பட்டைகளில் வெண்மையான ஒளி பட்டு ஒளிர்ந்து கொண்டு இருந்தது. வசந்த காலத்தின் ஆரம்பத்தினை சொல்வது போல வானம் தூய்மையாகவும் சுடராகவும் தெரிந்தது. கேப்ரியல்  ஆண்டர்சன் காட்டுக்குள் நடக்கத் திரும்பினார். ஆழமாக மூச்சினை இழுத்து விட்டுக்கொண்டு தனது மூக்குக் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டு சொன்னார், "என் வாழ்வில் இன்னொரு வசந்த காலம்." அவர் உணர்ச்சிமிகுந்த கவிதைகளை எழுதுவார். பின்னால் கைகளைக் கோர்த்துக் கொண்டு கைத்தடியைச் சுழற்றிக் கொண்டு மெல்ல நடந்தார். 

சில அடிகள் அவர் நடந்திருந்த  போது, தோட்டத்துக்கு வெளியே சில படை வீரர்கள் குதிரைகளில் வந்து கொண்டு இருந்ததைக்  கவனித்தார். அவர்களது பழுப்பு மஞ்சள் சீருடைகள் பனியின் பின்புலத்தில் எடுப்பாக இல்லாமல் இருந்தது, ஆனால் அவர்களது வாள்களும் குதிரைகளின் சேணங்களும் சுடராக எதிரொளித்துக் கொண்டு இருந்தது.   பனி படர்ந்த தரையின் மேல் அவர்கள் ஒழுங்கற்று நடந்து போனார்கள். ஆண்டர்சன் இவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள் என்று ஆச்சரியப் பட்டார்.  அவர்கள் எதற்கு வந்தார்கள் என்று திடீரென புரிந்துகொண்டார். வெறுக்கத் தக்க வேலை ஒன்றுக்காக அவர்கள் அங்கு வந்துள்ளார்கள் என்று அவரது உள்ளுணர்வு சொல்லியது. அசாதாரணமான பயங்கரமான ஒன்று அங்கு நடக்கப் போகிறது. அதே உள்ளுணர்வு அவரை படை வீரர்களின் கண்களில் படாமல் ஒளிந்து கொள்ளச் சொல்லியது. விரைவாக இடது புறம் திரும்பினார், மண்டியிட்டு, ஊர்ந்து பனியில் வைக்கோல் போருக்குள்  முன்னேறினார், பனி உருகி நீரானது, பின்னால் திரும்பி படை வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தார். 

அவர்கள் பன்னிரண்டு பேர், அதில் ஒரு தடித்த இளம் அலுவலர், அவர்களது  தலைவன் தனது உடையை அழகான வெள்ளி பெல்டால் இறுக்கிக் கட்டி இருந்தான். அவனது முகம் சிவந்து இருந்ததுஅவனது வித்தியாசமான நிறம் கொண்ட  முகத்தில் முளைத்திருந்த மீசையும் புருவ முடியும்    தூரத்திலிருந்து ஆண்டர்சனால் கவனிக்க முடிந்தது
அவனது முரட்டுக் குரல் ஒளிந்து  கவனித்துக் கொண்டு இருந்த ஆண்டர்சனுக்கு  தெளிவாகக் கேட்டது
"நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத்தெரியும். யாரும் எனக்கு ஆலோசனை சொல்லத் தேவை இல்லை." அவன் கத்தினான். இடுப்பில் கை வைத்து நின்று கொண்டு கூட்டத்திலிருந்த ஒருவனைப் பார்த்துச் சொன்னான், "எப்படிப் புரட்சி செய்ய வேண்டும் என்று நான் உனக்குக் காட்டுகிறேன்" என்றான். 

ஆண்டர்சனின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. "ஐயோ இது நடக்குமா?" அவரது தலை குளிர் அலையால் தாக்கப் பட்டது போல குளிர ஆரம்பித்தது. 

"அய்யா  " ஒரு வீரனின் குரல் மென்மையாகக் கேட்டது, "உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும். அவர்கள் தான் தண்டனை அளிக்க வேண்டும். விசாரணை இல்லாமல் தண்டிப்பது கொலைக்குச் சமம். "

"மூடு வாயை" ஆத்திரத்தில் வெடித்தான். " நான் உனக்குக் காட்டுகிறேன் நீதி மன்றத்தை.இவானோவ் சொன்னதைச் செய்! "

காலால் தனது குதிரையை உதைத்து ஓட்டிச்சென்றான்.  குதிரை எதோ நடனத்துக்கு தயாராவதைப் போல எப்படி கவனமுடன் எட்டு வைத்தது என்று ஆண்டர்சன் இயந்திரத்தனமாகக் கவனித்தார்.ஒவ்வொரு சத்தத்தையும் அதன் காதுகள் உள்வாங்கின. இப்போது படை வீரர்கள் ஆர்வமுடன்  நகர ஆரம்பித்தனர்,  அவர்கள் நகரும் போது சரசர வென்று ஒலி கிளம்பியது. மூன்று பேரைத்  தனியாக விட்டு விட்டு அவர்கள் வெவ்வேறு திசைகளில் நகர்ந்தார்கள். . இரண்டு உயரமான ஆட்கள், மற்றும் ஒரு சிறுவன். சிறுவனது புடைத்திருந்த இளஞ்சிவப்புக் காதுகளை ஆண்டர்சன் கவனித்தார் 

அவருக்கு இப்போது என்ன நடக்கப் போகும் என்று முழுமையாக விளங்கியது . இது அசாதாரணமானது, கொடுமையானது, எதோ கற்பனையில் நடக்கப் போவதாக நினைத்துக் கொண்டார். 
"இங்கே ஒளிமயமாக இருக்கிறது, அழகாக இருக்கிறது, -- பனி, வயல்கள், காடுகள் மற்றும் வானம். வசந்தத்தின் மணம் எல்லா இடத்திலும் படர்ந்து இருக்கிறது. இருந்தாலும் மக்கள் கொல்லப் படப்போகிறார்கள்.  எப்படி நடக்கும் இது? இருக்காது!". அவரது மனம் குழம்பியது. எதைப்  பார்க்கவே  கூடாதோ, எதைக் கேட்கவே  கூடாதோ  எதை உணரவே கூடாதோ அவற்றை  எல்லாம் பார்க்க நேர்ந்ததால்  திடீரென பைத்தியம் பிடித்தவர் போல ஆனார்.

மூன்று  பேரும்  கருப்பு உடையில் அருகருகே இருந்தார்கள், இருவர் மிக 
அருகிலும் சிறுவன் சற்று விலகியும் இருந்தார்கள். 
"அய்யா " ஒருவன் பரிதாப மான குரலில் சொன்னான், ஆண்டர்சனால் யார் சொன்னது என்று அறிய முடியவில்லை- "கடவுள் எங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்!"

எட்டு வீரர்கள் குதிரையிலிருந்து இறங்கினார்கள். அவர்களது துப்பாக்கிகளை அச்சமூட்டும் அளவுக்கு நீட்டிக்கொண்டு நின்றார்கள். அவர்களது அவசரம் எதோ திருட்டு வேலை செய்யப் போவது போல் இருந்தது. 

சற்று நேரம் அமைதியாகக் கழிந்தது. வீரர்கள் கருப்பு உருவங்களுக்கு சில அடிகள் முன் வரிசையாக  தங்களது துப்பாக்கிகளை நீட்டியபடி நின்றார்கள்.

அப்படிச் செய்யும் போது ஒரு வீரன் தனது தொப்பியைத் தவற விட்டான். உடனே கீழே விழுந்த தொப்பியை அவசரமாக எடுத்து ஒட்டிக் கொண்டு இருந்த பனியைத் தட்டிக்கூட விடாமல் தலையில் வைத்துக் கொண்டான். 

தலைவன்  குதிரை ஒரே இடத்தில் அசைந்தவாறு நின்று கொண்டு இருந்தது, மற்றவர்களின் குதிரைகளும் எந்த ஓசையையும் தவறவிடாமல் காதுகளைத் தீட்டிக் கொண்டு கவனித்தவாறு  தலைகளைச் சற்றே சாய்த்து கருப்பு உருவங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தது. 

"சிறுவனையாவது விட்டு விடுங்கள். " காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு குரல் வந்தது. "ஏன் ஒரு குழந்தையைக் கொல்கிறீர்கள் ? அவன் என்ன பாவம் செய்தான்?"

"இவானோவ், என்ன சொன்னேனோ அதைச்  செய்!" தலைவன் வெடித்தான் .

அவனது சத்தம் இன்னொருவனின் குரலை கேட்காமல் செய்தது. அவன் முகம் சிவப்பேறி இருந்தது. அதன் பின்னர் காட்டு மிராண்டித் தனமான கொடூரமான காட்சி அரங்கேறியது. சிறிய கருப்பு உருவம்அளவான தலைமுடியுடனும் சிவப்புக் காதுகளுடனும் இருந்தது , குழந்தைக் குரலில் அலறியபடி ஒரு பக்கம் சாய்ந்து விழுந்தது.  இரண்டு மூன்று வீரர்களால் அது பிடிக்கப் பட்டது. ஆனால் அந்தச் சிறுவன் போராடினான், மேலும் இரண்டு வீரர்கள் பிடிப்பதற்குப் போனார்கள். 

"ஐயோ என்னைப் போக விடுங்கள். ஐயோ என்னைப் போக விடுங்கள். " சிறுவன் கதறினான். 

அவன் இட்ட ஓலம் பலியிடப்படும் பன்றியின் அலறலைப்  போல கொடுமையாக இருந்தது. திடீரென அவன் அமைதியானான். யாரோ அவனை அடித்து இருக்க வேண்டும். எதிர்பாராத வேண்டாத ஒடுக்கப்பட்ட அமைதி நிலவியது. சிறுவன் முன்னே நெட்டித் தள்ளப்பட்டான். மூன்று செவிடாக்கும் ஓசைகள்   கேட்டது. ஆண்டர்சன் அதிர்ச்சியுடன் பின் வாங்கினார். கனவு காண்பதைப் போல அவர் கண்டார், இரண்டு கருப்பு உடல்கள் விழுந்தது, சுத்தமான அந்த இடத்தில் வெடியினால் உண்டான ஒளிகளும் புகையும் கண்டார். அவர் பார்த்தார்,  வீரர்கள் அவசரமாக குதிரையின் மேலேறிப் புறப்பட்டார்கள், கீழே கிடக்கும் உடல்களைப் பார்க்கக் கூட இல்லை அவர்கள். சேறு படிந்திருந்த அந்தச் சாலையில் குதிரைகளின் சேணங்களும் வீரர்களின் ஆயுதங்களும் உராய்ந்து ஒலி எழுப்பியபடி போவதையும் பார்த்தார். 

அவர் அனைத்தையும் நேரில் பார்த்தார். இப்போது சாலையின் நடுவில் நின்று கொண்டு இருந்தார், எப்போது வைக்கோல் போருக்குள் இருந்து வெளியே வந்தார் என்று தெரிய வில்லை. அவர் பேயறைந்ததைப்  போல நின்று கொண்டு இருந்தார். அவருக்கு வேர்த்துக் கொட்டியது, உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது. சோகம் அவரை வாட்டியது, அசதியாகத் இருந்தது. அவரால் அந்த உணர்வைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதீத நோயால் அவதிப்படுவதைப் போல உணர்ந்தார், தலை சுற்றியது, மயக்கம் வருவதைப் போல இருந்தது. 

வீரர்கள் காடுகளுக்குள் மறைந்த பின் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை நோக்கி மக்கள் வந்தனர், அது வரை அங்கு யாரும் இருக்கவில்லை. உடல்கள்  பனி படர்ந்திருந்த சுத்தமான வெளிச்சம் மிகுந்திருந்த சாலையின் அந்த ஓரத்தில் கிடந்தன. அங்கு மூன்று உடல்கள் இரண்டு ஆட்கள் மற்றும் ஒரு சிறுவன், பிணங்களாக.  சிறுவனது கழுத்து பனியில் நீண்டு இழுபட்டுக் கிடந்தது. பையனுக்கு அருகில் கிடந்த ஒருவனது முகம் பார்வைக்குத் தெரியாமல் கிடந்தது.  அவனது முகம் ரத்த வெள்ளத்தில் புதைந்து தரையை நோக்கி இருந்தது, மூன்றாவது ஆள் திடகாத்திரமாகவும் தாடி யுடனும் பெரியதாகவும் கிடந்தான். ரத்தம் சிதறிய பனியின் மேல் கைகளை நீட்டிக் கொண்டு கிடந்தான். 

வெண் பனியின் மேல் சுடப்பட்டுக் கிடந்தவர்களது உடல்கள் அசைவற்று இருந்தது. மக்கள் அங்கு குழுமியிருந்தார்கள். யாருக்கும் என்ன நடந்தது என்று சொல்லத் தேவை இல்லை. 
அன்று இரவு கேப்ரியல் ஆண்டர்சன் வழக்கம் போல் கவிதை எழுத வில்லை. ஜன்னலுக்கு அருகில் நின்று பனி மூட்டமுள்ள வானத்தின் வழியே தட்டு போலத் தெரிந்த நிலவைப் பார்த்து யோசனை செய்து கொண்டு இருந்தார். சிந்தனைகள் குழம்பின, மண்டை கனக்க ஆரம்பித்தது, எதோ அவரது மூளையில் மேகம் கவிழ்ந்ததைப் போல எண்ணினார். நிலவின் குறைந்த வெளிச்சத்தில் தோட்டத்தைக் கவனித்தார்.வேலிகள், மரங்கள்,  வெறுமையான தோட்டம். மூன்றுபேரையும், இரு ஆட்கள் மற்றும்  ஒரு சிறுவன்,  அவர் பார்ப்பதாக நினைத்தார். அவர்கள் இன்னும் அந்த சாலையோரத்தில், அமைதியான வெற்று வயலுக்கு அருகில்,  தூரத்தில்   இருக்கும் குளிர்ந்த நிலவைத் தங்களது இறந்து போன கண்களால்,  எப்படி - தான் தனது கண்களால் பார்க்கிறாரோ அப்படிப் பார்த்துக் கொண்டி இருக்கிறார்கள். 

"காலம் ஒருநாள் வரும் " அவர் நினைத்தார், "மக்களை மக்களே கொல்வது நடக்காமல் போகும். காலம் ஒருநாள் வரும். இந்த வீரர்களும் அவர்களது தலைவனும் என்ன செய்தோம் என்று உணர்வார்கள், என்ன காரணத்துக்காக இவர்களைக் கொன்றோம் என்றும் யாருக்காக யாருடைய தேவைக்காக இவர்களைக் கொன்றோம் என்றும் புரிந்து கொள்வார்கள் " என்றும் சிந்தித்தார். 

"ஆம்" அவர் சத்தமாகவும் உறுதியாகவும்  சொன்னார். "காலம் ஒருநாள் வரும். அவர்கள் புரிந்து கொள்வார்கள்". தட்டு போல் இருந்த நிலவு அவரது கண்ணீரால் அவரது பார்வைக்கு மறைந்து  போனது. 

மிகப் பெரிய சோகம் அவரது மனதை அடைத்துக்  கொண்டது. மூன்று பேர்களது  கண்ணும் நிலவை வெற்றுப் பார்வை பார்க்கிறதே, எண்ணினார். எதோ ஒரு வெறி கத்தி போல் அவரது சிந்தனையை கிழித்துக் கொண்டு அவரை ஆட்கொண்டது. . 

ஆனால் அவர் தனது மனதை சமாதானப் படுத்திக் கொண்டார். "அவர்கள்  என்ன செய்கிறோம் என்று அறிந்து இருக்க வில்லை" இந்த வரிகள் அவரது ஆத்திரத்தையும் ஆற்றாமையையும் சற்றே அமைதிப்  படுத்த வலிமையைக் கொடுத்தது. . 


2

அந்த நாள் வெளிச்ச மாகவும், வெண்மையாகவும் இருந்தது, வசந்த காலம் ஏற்கனவே பாதிமுடிந்து இருந்தது. ஈர மண் வசந்தத்தின் வாசம் கொண்டிருந்தது. தூய குளிர்ந்த நீர் பனிஉருகி  எங்கெங்கும்  ஓடிக்கொண்டு இருந்தது.மரங்களின் அனைத்துக் கிளைகளிலும் வசந்தத்தின் சாரல் தெரிந்தது. நெடுந்தூரத்துக்கு வானத்தின் நீல நிறம் அப்பழுக்கில்லாமல் நாடு முழுக்கத் தெரிந்தது. 

இருந்தாலும் வசந்தத்தின் மகிழ்ச்சி கிராமத்தில் இல்லை. அது வேறெங்கோ இருந்தது, மக்கள் இல்லாத இடத்தில்--வயல்களில் காடுகளில், மலைகளில். கிராமத்தில் காற்று வெம்மையாகவும், கெட்டகனாக்களில் வருவதைப் போல வேகமாகவும் ஊளையிட்டும் வீசிக்கொண்டு இருந்தது. 

கேப்ரியல் ஆண்டர்சன், ஞாபக மறதி கொண்ட  மக்களுக்கு நடுவே சாலையில் நின்று கழுத்தை நீட்டி கசையடி படக் காத்து இருந்த அந்த ஏழு விவசாயிகளைப் பார்த்தார். 

எல்லோரும் உருகும் பனுயின் மேல் நின்று கொண்டு கவனித்துக் கொண்டு இருந்தார்கள், இவர்களை அவர் நீண்ட நாட்களாக அறிவார் புரிந்திருக்கிறார். அதனாலேயே அவரால் தன்னை சமாதானப் படுத்திக்கொள்ள முடியவில்லை. அது அவர்களுக்கு நடக்க இருக்கிறது, வெட்கப்படக்கூடிய கொடூரமான மறக்கவே முடியாத கொடுமை  நடக்க இருக்கிறது, அவர்கள் உலகின் மற்றவர்களிடமிருந்து பிரிந்து இருந்தார்கள், தன்னால் என்ன உணரப்படுகிறது என்று மற்றவர்களால் அறியப்படாமலும், மற்றவர்களால் என்ன உணரப்படுகிறது என்று தன்னால் அறியப் படாமலும் ஆண்டர்சன் நின்று கொண்டு இருந்தார். அவர்களைச் சுற்றி படையினர் நின்று கொண்டு இருந்தார்கள், அவர்கள் கம்பீரமாகவும் நேர்த்தியாகவும் குதிரைகளின் மேல் அமர்ந்து இருந்தார்கள், குதிரைகள் தங்களது தலைகளை மெல்ல ஒருபக்கத்திலிருந்து  மறு பக்கத்துக்கு அசைத்துக் கொண்டு நின்றன. நடக்கப் போகும் கொடுஞ்செயலை காணப் போகும் கேப்ரியல் ஆண்டர்சன் செய்வதறியாது எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நின்றார். நடக்கப் போகும் மன்னிக்கவே முடியாத கொடுமையை எண்ணி வருந்தினார், அவமானம் அவரை வாட்டியது எதோ இரண்டு பனிப் பாறைகளுக்குள் சிக்குண்டது போல  குளிரில் நடுங்கினார்
அங்கிருந்து நகர முடியாமல், நடப்பவற்றை  எல்லாம் பார்த்தார். ஒரு துளி சத்தம கூட அவரால் எழுப்ப  முடியவில்லை. 


அவர்கள் முதல் விவசாயியை   இழுத்துக் கொண்டு போனார்கள். அவனது  நம்பிக்கை இழந்த அந்நியமான பார்வையை அண்டர்சன் கவனித்தார். அவனது உதடுகள் துடித்தன, ஓசை வரவில்லை, கண்கள் அலைபாய்ந்து எதையோ தேடியது. பைத்தியக் காரனது கண்களைப் போல  கண்கள் ஒளிர்ந்து கொண்டு மின்னின. அவரது  மனம் அதற்கும் மேலும் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பவில்லை. 

 ஒரு முறை தெளிவாகவும் மறுமுறை குழப்பமாகவும்கொடூரமாகவும்    அவன் முகம் தெரிந்ததுஅவனைக் குப்புறத் தள்ளினார்கள், அவனது முகம் பனியில் புதைந்தது அவனது அச்சமடைந்த கண்களுக்கு பதில் இப்போது அவனது பின்புறத்தைத் தான் பார்க்க முடிந்தது, ஆண்டர்சன் சற்றே நிம்மதி கொண்டார், ஆனால் அவனது உடையற்ற பின் புறத்தை -- வெட்கப்படவேண்டிய வேதனைப்படவேண்டிய கொடூரமான கட்சியைப் பார்க்க வேண்டி வந்தது. 

சிவப்புத் தொப்பியணிந்த தடித்த சிவப்பு முகம் கொண்ட படைவீரன்  அவன் முன் வந்தான், கீழே கிடப்பவனைப் பார்த்து சந்தோஷமாக தெளிவான குரலில்  கூச்சலிட்டான், "கடவுள் அருளால் அவளைப் போக விடுங்கள்" 

ஆண்டர்சன் படைவீரர்களையோ , வானத்தையோ , குதிரைகளையோகூட்டத்தினரையோ பார்ப்பதைத் தவிர்த்தார். இப்போது அவருக்கு குளிர் விட்டு இருந்தது, அச்சமோ வெட்கமோ இல்லாமல் போனது. சவுக்கின் சுழற்றப் படும் ஓசையோ, வலியால்துடித்து கதறும் விவசாயியின் வேதனைக் குரலையோ அவரால் கேட்க முடியவில்லை. சவுக்கால் அடிபட்டு பின்புறம் துணி இல்லாமல்  கிடந்த அவனது உடலில் ஏற்பட்டு இருந்த காயங்களையும் கரு நீல  நிறத்தில் தடித்து வீங்கியிருந்த  தழும்புகளையும்  பார்த்தார். காயங்களில் இருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாக வழிந்து ஓடி பனியினை  உருக்கிக் கொண்டு  இருந்தது.  அச்சம் ஆண்டர்சனின் மனத்தைக் கவ்வியது, விழுந்து காயம் பட்டு ரத்த வெள்ளத்திலிருக்கும்  இந்த மனிதன் எழுந்து தனது உடையற்ற உடலைப் பார்த்த இந்த மக்களை எந்த முகத்தைக் கொண்டு எதிர்கொள்வான் என்று சிந்தித்தார். கண்களை மூடிக்கொண்டார். அவர் மீண்டும் கண்களைத் திறந்த போது நான்கு படைவீரர்கள் இன்னொரு விவசாயியை கீழே குப்புறத் தள்ளி அவனது உடையை உருவிக்  கொண்டு இருந்தனர்.  அதே போன்ற கொடுமையான வெட்கப் படவேண்டிய நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமான காட்சி. 

அப்புறம் மூன்றாவது ஆள், பிறகு நான்காவது ஆள், அப்படியே கடைசி ஆள் வரை போனது. 

ஆண்டர்சன் உருகும் பனியில்  நடுங்கியபடி கழுத்தை நீட்டியபடி எந்த ஒரு வார்த்தையையும் பேச முடியாமல் நின்று கொண்டிருந்தார். அவரது உடல் முழுக்க வேர்வை ஊற்றெடுத்தது. வெட்க உணர்வு அவரை முழுதாக ஆக்கிரமித்தது. வெளியேறினால் தான் கவனிக்கப் பட்டு துகில் உரியப்பட்டு சவுக்கால் அடிகொடுக்கப்பட்டு விடுவேனோ என்ற அச்சத்தில் உருகும் பனியுள் நின்றிருந்தார், அந்த உணர்வு அவரைக் கொடுமைப் படுத்தியது. 

வீரர்கள் சவுக்கைச் சுழற்றி விளாசினார்கள், குதிரைகள் தலையைச் சுண்டிக்கொண்டன, உடையற்ற உடல்களின் மேல் அடிகள் விழுந்து தசைகள் கிழிக்கப் பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது, அடிபட்டவர்கள் பாம்பினைப் போல சுருண்டு கிடந்தார்கள். 

அந்த வசந்த கால நாளில் தூய காற்றின் நடுவே அந்த கிராமத்தில் உறுதிமொழி மழையாகக் கொட்டியது 
ஆண்டர்சன் இப்போது நகரமன்றப் படிக்கட்டுகளில் நின்று இருந்த ஐந்து வீரர்களைக் கவனித்தார், அவர்கள் வெட்கப்பட வேண்டிய கொடுஞ்செயல் புரிந்தவர்கள், அவர் அறிந்து கொண்டார். அவர் விரைவாகக் கண்களைத் திருப்பிக் கொண்டார். அவர்களைப் பார்த்த பிறகு முடிவு செய்தார் இவர்கள் சாக வேண்டும். 



3

அங்கே பதினேழு பேர் இருந்தார்கள், பதினைந்து வீரர்கள், ஒரு துணைத் தலைவன், அப்புறம் தாடியில்லாத உயர் அலுவலர். நெருப்பின் முன் அமர்ந்து அலுவலர் தீக்காய்ந்து கொண்டு இருந்தார். வீரர்கள் வண்டியிலிருந்து ஆயுதங்களை சோதித்துக் கொண்டு இருந்தனர். 

அவர்களது உருவங்கள் தரையில் அங்குமிங்கும் ஓசையின்றி நகர்ந்து கொண்டு இருந்தது. எரிந்து கொண்டு இருந்த கட்டைகள் எப்போதாவது வெடித்துக் கொண்டு இருந்தன. கேப்ரியல் ஆண்டர்சன், ஓவர்கோட் அணிந்து இருந்தார், கையில் கைத்தடியை பின்னால் வைத்துக் கொண்டு அவர்களிடம் நடந்து சென்றார். மீசை கொண்ட தடித்த துணைத் தலைவன், நெருப்பின் பக்கமிருந்து திரும்பிக் குதித்து முன்னால் வந்து அவரைப் பார்த்தான். 

"யார் நீ? என்ன வேணும்?" கேட்டான். இந்த மாவட்டத்தில் உள்ள மக்களைக் கண்டு வீரர்கள் அச்சம் கொண்டுள்ளது அவனது குரலில் தெரிந்த பரபரப்பிலிருந்து அறிய முடிந்தது, ஏனெனில் அவர்கள் செய்த கொடுமைகளும் கொலைகளும் அழிவுவேலைகளும் அவ்வாறு அச்சப் படவைத்தன. 

"அய்யா இங்கே ஒருத்தன் எனக்குத் தெரியாதவன் வந்திருக்கிறான்"  சொன்னான். 

தலைமை அலுவலர் பேசாமல் ஆண்டர்சனைப் பார்த்தார். 

"அய்யா" ஆண்டர்சன் மெல்லிய குரலில் சொன்னார், "என் பெயர் மிக்கெல்சன், நான் வணிக வேலையாக கிராமத்துக்குப் போகிறேன், நான் பயந்து போய் இருக்கிறேன் உங்களுக்கு தெரியும் என்னை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. " 

"பின்ன எதுக்கு இங்க வந்து மோப்பம் பிடிச்சிட்டு இருக்கிறாய்?" கோபமாகச் சொல்லி விட்டு தலைமை அலுவலர் திரும்பிக் கொண்டார்.
"வணிகனா இவன், இவனை சோதனை போடணும்,எதுக்கு ராத்திரியில வந்து இங்க தட்டிகிட்டு இருக்கிறாய்?,  தாடையில ஒன்னு கொடுத்தா சரியாக  இருக்கும்" ஒரு வீரன் சொன்னான். 

"இவன் மேல எனக்கு சந்தேகமா இருக்கு. இவனை கைது செய்யலாமா? அய்யா?" துணைத்தலைவன் கேட்டான். 
"வேண்டாம்" தலைமை அலுவலர் சோம்பல் முறித்தவாறு சொன்னார், "சலிப்பாக இருக்கிறது" 

ஆண்டர்சன் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார். இருட்டில் அவரது கண்கள் நெருப்பின் வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டு இருந்தது.  இருளில் வீரர்களுக்கு நடுவில் அவரது குள்ள உருவத்தை  ஓவர்கோட் உடனும் கைத்தடி உடனும் மின்னிக் கொண்டு இருக்கும் கண்ணாடியுடனும்  பார்க்க வித்தியாசமாக இருந்தது. 

வீரர்கள் அவரை விட்டு நகர்ந்தனர். ஆண்டர்சன் சிறுது நேரம் அங்கேயே நின்று கொண்டு இருந்தார். பிறகு அங்கிருந்து அவசரமாக வெளியேறி இருளில் மறைந்தார். 

இரவு முடிவுக்கு வந்து கொண்டு இருந்தது. காற்று கடுமையாக குளிரத்தொடங்கியது, புதர்கள் இருளில் தங்களது வடிவத்தை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தன. ஆண்டர்சன் மீண்டும் ராணுவ சாவடிக்குப் போனார். இம்முறை மறைந்து கொண்டார். புதர்களில் மறைந்து கொண்டு  ஊர்ந்து நகர்ந்தார். அவருக்குப் பின் சிலர் புதர்களுக்குள் எச்சரிக்கையாகவும் அமைதியாகவும் நிழல்களைப் போல நகர்ந்தார்கள். ஆண்டர்சனுக்கு வலப்புறத்தில் உயரமான ஒருவன் கைகளில் ரிவால்வருடன் வந்து கொண்டு இருந்தான். 

குன்றின் மேல் ஒரு படை வீரனின் உருவம் தெரிந்தது, அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத இடத்தில் நின்றிருந்தான். அணைந்து  கொண்டிருக்கும் நெருப்பின் மங்கிய வெளிச்சத்தில் அவன் இருப்பது தெரிந்து கொண்டிருந்தது. கேப்ரியல் ஆண்டர்சன்னால் அவனை அடையாளம்  காண முடிந்தது, அவன் தான் அவரைச் சோதனை போடவேண்டும் என்று சொன்னவன். அவருடைய இதயம் கருணை காட்டவில்லை. தூங்குபவனைப் போல அவரது முகம் சலனமற்றும்  குளிர்ச்சியாகவும் இருந்தது. நெருப்பினைச் சுற்றி வீரர்கள் நீட்டிப் படுத்து இருந்தனர், துணைத் தலைவனைத் தவிர, அவன் தனது தலையை முழங்காலின் மேல் சாய்த்து வைத்துக்  கொண்டு இருந்தான் .  

ஆண்டர்சனின் வலது புறம் வந்து கொண்டிருந்த உயரமானவன் தனது துப்பாக்கியின் விசையை இழுத்தான். அடுத்த நொடி கண்கூசும் வெளிச்சத் துடனும் காதைச்  செவிடாக்கும் ஒலியுடனும் துப்பாக்கி வெடித்தது. ஆண்டர்சன் பார்த்தார் காவல் காத்துக் கொண்டு இருந்தவன் கையைத் தூக்கி பிறகு நெஞ்சைப் பிடித்தபடி தரையில் உட்கார்ந்தான். அனைத்துத் திக்குகளில் இருந்தும் வெளிச்சத் துடன் வெடிச் சத்தங்கள் பேரிரைச்சலாய்க் கிளம்பியது. துணைத்  தலைவன் குதித்து எழுந்து நேரே நெருப்பில் விழுந்தான். வீரர்களின் உருவங்கள் எல்லாத் திக்குகளிலும் குழப்பத்துடன் கைகளைக் கண்டபடி அசைத்துக் கொண்டு கருநிற நிலத்தில் திருகிக் கொண்டு விழுந்தன . இளம் படைத்தலைவன் பயந்த பறவையைப் போல கைகளை அடித்தபடி  ஆண்டர்சன் அருகில் ஓடி வந்தான்
ஆண்டர்சன் என்ன நினைத்தாரோ தனது கைத்தடியைத் தூக்கினார். தனது அனைத்து பலத்தையும் திரட்டி படைத்தலைவனின் தலையில் ஓங்கி அடித்தார். ஒவ்வொரு தடவையும்  அறுவறுக்கும் ஒலியுடன் அடி விழுந்தது. இரண்டாவது அடி விழுந்த போது படைத்தலைவன் சுருண்டு புதரில் இடித்துக் கொண்டு உட்கார்ந்தான்குழந்தைகளைப் போல தனது கைகளால் மண்டையை மறைக்கப் பார்த்தான் .  ஆண்டர்சனிடம் இருந்து எடுக்கப் படுவதைப் போல ஒருவன் ஓடிச் சென்று அவனது கைத்துப்பாக்கியைப் பிடுங்கினான். படைத்தலைவன் தலைகுப்புறக் கவிழ்ந்து நிலத்தில் விழுந்தான். அவனது கால்கள் துடித்த பின்பு அமைதியாகச் மடித்துக்  கொண்டது. 

வெடிச் சத்தங்கள் நின்றது. இருளுள் கருப்பு உடையணிந்து  வெண்முகம் கொண்ட மனிதர்கள் இறந்து கிடக்கும் படை வீரர்களது ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் கைப்பற்றினர். இவை அனைத்தையும் ஆண்டர்சன் இமைக்காமல்ப் பார்த்துக் கொண்டு இருந்தார். இதெல்லாம் ஓய்ந்த பிறகு அவர் நெருப்பின் அருகில் சென்று தீயில் கிடக்கும்  துணைத் தலைவனின் உடலைக் கால்களைப் பற்றி இழுத்தார். அது இழுக்க முடியாமல் கனமாக இருந்ததால் அப்படியே விட்டு விட்டு வந்தார். 


4

நகர மன்றத்தின் படிகளில் அமைதியாக ஆண்டர்சன் அமர்ந்திருந்தார். அவர் நினைத்துக் கொண்டார், எப்படி  நான் இந்த ஆண்டர்சன் , மூக்குக் கண்ணாடிபோட்டுக் கொண்டு கைத்தடி வைத்துக்கொண்டு ஓவர்கோட் அணிந்து கவிதைகள் எழுதுபவன் பொய் சொல்லிப் பதினைந்து பேரை ஏமாற்றினேன். கொடுமையாக இருந்தது இருப்பினும் பரிதாபப் படமுடியவில்லை, வெட்கப் படவோ, இதயத்தில் வேதனையோ இல்லை. அவர் எங்கு அமைதி காண முடியும், அவருக்குத் தெரியும் வழக்கம் போல் தன்னால் தனது கண்ணாடியுடனும் கவிதைகளுடனும் மீண்டும் நேரே இணைய முடியும் என்று. தனது மனதுக்குள் என்ன நடக்கிறது என்று  எடை போட்டார். அவரது மனம் கனத்து குழப்பமுற்று இருந்தது. என்ன காரணத்தாலோ தூரத்தில் காய்ந்து கொண்டிருந்த நிலவை நோக்கியபடி திறந்து கிடந்த கண்களுடன்  பனியில் கிடந்த மூன்று பேரின் உடல்களை நினைக்கும் போது  தன்னால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட படைத் தலைவனைப் பற்றி நினைப் பதைவிட  அவருக்கு மிகவும் வலித்தது. அவர் தன்னுடைய சாவைப்பற்றி   பொருட்படுத்த வில்லை.  நீண்ட நாள் முன்பே செத்து விட்டதாகக் கருதினார். வெறுமையாக உணர்ந்தார். இதைப் பற்றி எல்லாம் சிந்திக்க வேண்டாம் என்று நினைத்தார். 

அவர்கள் அவரது தோளைப் பற்றிய போது மெல்ல எழுந்தார். முட்டைக் கோசுகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்  காய்கறித் தோட்டத்தின் வழியே விரைவாக இழுத்துச் சென்றனர். அவரால் நிலையாகச் சிந்திக்க முடியவில்லை. சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டு சாலையோரத்தில் இருந்த இரும்புக் கம்பத்தில் நிறுத்தப் பட்டார்.

கண்ணாடியைச் சரி செய்து கொண்டார். கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டார், பருத்த உடலை நேராக நிறுத்திக் கொண்டார், தலையைச் சற்றே சாய்த்து நின்றார். கடைசித்தடவையாக தன் முன்னால் நடப்பவற்றைக் கவனித்தார். உதடுகள் துடிக்க வெளுத்த முகங்களுடனும் படை வீரர்கள் தங்களது துப்பாக்கிகளை அவரது தலை, மார்பு மற்றும் வயிறு ஆகியவற்றைக் குறிபார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. அவரது நெற்றியை நோக்கிக் கொண்டிருந்த ஒரு துப்பாக்கி முனை சரிந்து கொண்டிருப்பதையும் தனியாக கவனித்தார் . இந்த மண்ணுக்குச் சம்பந்தமே இல்லாத , இந்த உலகத்துக்குச் சம்பந்தமே இல்லாத விளக்க முடியாத எதோ ஒரு சிந்தனை அவர் மனத்தில் ஓடியது. தனது குள்ள உருவத்தை நேராக நிமிர்த்திக் கொண்டார், பெருமையுடன் தனது தலையை  நிமிர்த்தினார். முன்னெப்போதும் இல்லாத உணர்வாக அவரது நெஞ்சில் தூய்மை, வலிமை பெருமை ஆகியவை நிறைந்து குடி கொண்டது. கதிரவனும் வானமும் மக்களும் வயல்களும் பிறப்பும் இறப்பும் அவருக்கு இப்போது ஒன்றுமே இல்லை என்று தோன்றியது.

தோட்டாக்கள் அவரது மார்பில் , இடது கண்ணில், வயிற்றில் , சீராக அணியப் பட்டிருந்த அவரது கோட்டை எல்லாம் துளைத்துக் கொண்டு சென்றது, அணிந்திருந்த கண்ணாடி தூளாகச் சிதறியது. அலறலுடன் சுழன்று இரும்பு கம்பத்தின் மேல் தலையை மோதி விழுந்தார்.  அவரது இன்னொரு கண் அகன்று திறந்து இருந்தது. தரையைத் தன் விரிந்த கைகளால் நகங்களைக் கொண்டு  கீறி ஆதரவுக்காகப் பற்றி நிற்க முயற்சித்தார். படை அலுவலர் ஒருவன் அவர் அருகில் ஓடி வந்து அவரது கழுத்தில் காரணமே இல்லாமல் இரண்டு முறை சுட்டான். ஆண்டர்சன் தரையில் நீண்டு கிடந்தார்.


படையினர் விரைந்து அகன்றனர். ஆண்டர்சன் தரையில் அப்படியே கிடந்தார். அவரது இடது கைச் சுட்டு விரல் பத்து நொடிகள்  தொடர்ந்து  துடித்துக் கொண்டு இருந்தது.

 **********