Friday, March 25, 2011

СУРАТСКАЯ КОФЕЙНАЯ : சூரத் காப்பிக் கடை




மூலம் : லியோ டால்ஸ்டாய்

தமிழில் : மா. புகழேந்தி

ஒரு காலத்தில் சூரத் நகரத்தில் ஒரு காபிக் கடை இருந்தது, அங்கே உலகின் எல்லா மூலையில் இருந்தும் பல வெளி நாட்டு வணிகர்கள் வந்து சந்தித்து தங்களுக்குள்  அளவளாவிக் கொள்வார்கள்.

ஒரு நாள் ஒரு பாரசீக தத்துவ ஞானி அங்கு வந்தான். தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைக் கடவுளைப் பற்றிப் படித்தும் பேசியும் ஆராய்ந்தும் எழுதியும் கழித்திருந்தான். இவ்வாறு அதிகப்படியாகச் செய்ததினால், சிந்திக்கும் திறனில் பிறழ்ந்திருந்தான், குழப்பமுற்றிருந்தான், கடவுள் என்ற ஒன்று இருப்பதையே நம்ப முடியாமல் போனான். இதைக் கேள்விப்பட்ட ஷா பாரசீகத்திலிருந்து அவனைத் துரத்திவிட்டான்.

வாழ்க்கை முழுதும் தர்க்கம் செய்தே களைத்துவிட்ட இந்தத் தத்துவ ஞானி எல்லாவற்றையும் சந்தேகம்   கொள்ளலானான். அவைகளைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக தனது சொந்தக் கருத்தையே மறந்து விட்டான்.
அவன் கருத  ஆரம்பித்தான், இந்தப் பேரண்டத்தினை வேறு எந்தச் சக்தியும் இயக்குவிக்கவில்லை என்று.
அந்தப் பாரசீகன் ஓர் ஆப்பிரிக்க அடிமையைக் கொண்டிருந்தான், அந்த அடிமை அவனது முதலாளியை எல்லா இடத்திற்கும் பின் தொடர்ந்தான்.
தத்துவ ஞானி காப்பிக் கடைக்குள் நுழைந்த போது அடிமை வெயிலில் கடையின் வாயிலில் கதவருகே உள்ள கல்லில் அம்ர்ந்து கொண்டு தன்னருகே பறந்து கொண்டிருந்த ஈக்களை ஓட்டியபடி இருந்தான். பாரசீகன் சாய்வாக அமர்ந்து கொண்டு தனக்கு ஒப்பியம் வெண்டுமென்று கேட்டான்.
அதை அவன் குடித்து முடித்த போது, ஒப்பியம் தனது வேலையைச் செய்ய ஆரம்பித்தது, அவனது மூளையை அது தூண்டிவிட்டது, அவன் தனது அடிமையைப் பார்த்துக் கேட்டான்:
"எனது அடிமையே, இப்போது சொல் , நீ என்ன நினைக்கிறாய் கடவுள் இருக்கிறாரா இல்லையா?"
"ஆமாம் இருக்கிறார் அய்யா ," உடனே  தனது இடுப்புக் கச்சையில் இருந்து மரத்தாலான ஒரு சிறிய கடவுள் சிலையை எடுத்துக் கட்டினான்.
"இது தான்," அவன் சொன்னான் "என் கடவுள், என்னைப் பிறந்ததிலிருந்து காப்பற்றிக்கொண்டு வருகிறார்! எங்கள் நாட்டில் இதைப் போலவே எல்லோரும் புனித மரத்தாலான ஒரு கடவுள் சிலையை வைத்திருப்பார்கள் "
காப்பிக் கடையில் இருந்தவர்கள் எல்லாம் தத்துவஞானிக்கும் அவனது அடிமைக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த இந்த உரையாடலை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பாரசீகனின் கேள்வியையும் அவனது அடிமையின் பதிலையும் கண்டு மிரண்டு போயினர்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் அந்தணன் அடிமையைப் பார்த்து பதிலளித்தான்:
"அட முட்டாளே! கடவுள் என்ன இடுப்புக் கச்சையில் கட்டி எடுத்துச் செல்லப்படும் பொருளா? உலகில் ஒரே ஒரு கடவுள் தான் உண்டு அவர்தான் பிரம்மா. அவர்தான் எல்லாவற்றையும் விட மிகப் பெரியவர், ஏனெனில் அவர் தான் இப்பூமியைப் படைத்தார். அவர்தான் வல்லமை மிக்கவர், அவரைப் போற்றுவதற்காகத் தான் கங்கைக் கரையில் பல கோயில்கள் கட்டப்பட்டிருகின்றன. அவரின் உண்மைச் சேவகர்களான அந்தணர்கள் அவரை அங்கு வழிபடுகிறார்கள். அவர்களுக்குத் தான், அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் உண்மைக் கடவுள் யாரென்று. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது, புரட்சி மேல் புரட்சி வந்தது ஆனாலும் அந்தணர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை, பிரம்மா தான் அவர்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்."
அவ்வாறு அந்த அந்தணன் பேசி எல்லோரையும் சரிக்கட்ட முற்பட்ட போது அங்கிருந்த ஒரு யூத வணிகன் குறுக்கிட்டு பதிலுரைத்தான் :
"இல்லை, கடவுளின் கோவில் இந்தியாவில் இல்லை. அவர் அந்தணர் சாதியினரையும் காப்பவரில்லை. உண்மையான கடவுள் அந்தணர்களின் கடவுள் அல்ல, அவர் அப்ரகாம், ஐசாக் மற்றும் ஜேகோபின் கடவுளாவார்.
"அவர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரேலியர்களைத் தவிர வேறு யாரையும் காக்க மட்டார். உலகம் தோன்றிய நாளில் இருந்து அவர் எங்கள் நாட்டை மட்டுமே விரும்புகிறார். நாங்கள் இப்போது உலகம் முழுவதும் சிதறி இருப்பதும் கடவுளின் திருவிளையாடலே. எங்கள் மக்களை எல்லாம் ஜெருசலத்தில் ஒன்று கூட்டி ஒரு நாட்டை உருவாக்கித் தருகிறேன் என்று கடவுள் உறுதியளித்து இருக்கிறார். பிறகு ஜெருசலக் கோவிலால் பண்டைய பெருமைகள் மீண்டும் நிலைநாட்டப்படும், இஸ்ரேலியர்கள் இந்த உலகை ஆள்வார்கள்."
அந்த யூதன் பேசப்பேசக் கண்ணீர் விட்டு அழுதான். இன்னும் அதிகம் பேச ஆசைப்பட்டான், ஆனால் இத்தாலிய கிறிஸ்தவ ஊழியன் ஒருவன் அவனை இடை மறித்தான்.
"நீ என்னவெல்லாம் சொல்கிறாயோ அதெல்லாம் உண்மையில்லை, " அவன் யூதனிடத்தில் சொன்னான். " நீ கடவுளுக்குக் களங்கம் கற்பிக்கிறாய். அவர் மற்ற நாடுகளை எல்லாம் விட்டு விட்டு உன் நாட்டை மட்டும் நேசிக்க மாட்டார். அப்படியே அது உண்மை என்றாலும் அது பழைய இஸ்ரேலாகத் தான் இருக்கும். இப்போது பத்தொன்பது நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் அவரைக் கோபம் கொள்ள வைத்து விட்டீர்கள். அதனால் தான் உங்கள் நாட்டை அழித்து உலகம் முழுவதும் உங்களைச் சிதற விட்டிருக்கிறார். அதனால் தான் அவர்களது மதத்தில் புதிதாக யாரும் சேர்வதில்லை, இருப்பவர்களும் ஆங்காங்கே செத்துக் கொண்டிருக்கிறார்கள்."
"கடவுள் எந்த ஒரு நாட்டையும் தனியாக விரும்புவதில்லை, அதனால் யாரெல்லாம் காப்பாற்றப்பட வேண்டுமோ அவர்களெல்லாம் ரோமன் கத்தோலிக்கத் திருச் சபைக்கு வாருங்கள், அதற்கு வெளியே யாருக்கும் முக்தி கிடையாது."
இத்தாலியன் அவ்வாறு பேசிக்கொண்டு போனான். ஆனால் அங்கு இருந்த ஒரு ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்த்தவன் கத்தோலிக்கனைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டான் :
"எப்படி நீ உன்னுடைய மதம் மட்டும் முக்தி தரும் என்ரு சொல்லலாம்? கிறிஸ்த்துவே சொல்லியிருக்கிறார் கடவுளுக்கு உண்மையான அன்புடன் ஊழியம் செய்யும் தூய உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே முக்தி அடையமுடியும் என்று."
சூரத்தில் ஒரு சுங்கச் சாவடியில் அலுவலரான ஒரு துருக்கியன் அங்கே அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தான், இரண்டு கிறிஸ்த்தவர்களையும் ஏளனமாகப் பார்த்தபின்பு பேச ஆரம்பித்தான்.
"ரோமன் கத்தோலிக்க மதத்தின் மீது உங்களது நம்பிக்கை வீணானது," அவன் சொன்னான். "அது  முகம்மதுவின் வரவால் ஓராயிரத்து இரு நூறு ஆண்டுகளுக்கும் முன்னரே முறியடிக்கப்பட்டது. உங்களால் அது மறுக்கமுடியாது கவனிக்க வேண்டும், முகம்மதுவின் போதனைகள் இப்போது ஐரோப்பா, ஆசியா மட்டுமல்லாது கற்றரிந்தோர் இருக்கும் சீனாவிலும் பரவிக்கொண்டிருக்கிறது."
நீங்கள் பேசிக்கொண்டீர்கள், கடவுள் யூதர்களை கைவிட்டு விட்டார் என்று; அப்புறம், ஆதாரத்துக்காக, நீங்கள் சொன்னீர்கள் யூதர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் அவர்களது மதம் வளரவில்லை என்றும். ஒத்துக்கொள்ளுங்கள் முகம்மதின் பெருமைகள், இப்போது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருக்கிறது. யாரும் காப்பாற்றப் படமாட்டார்கள், முகம்மதின் தொண்டர்களைத் தவிர. அவர்தான் கடவுளின் தற்போதைய தூதர். அதில் ஒமரைப் பின்பற்றுபவர்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும், அலியைப் பின்பற்றுபவர்களை அல்ல. அலியைப் பின்பற்றுபவர்கள் தவறான வழியில் போகிறவர்கள்."
இதைக்கேட்ட அலியைப் பின்பற்றும் பாரசீகத் தத்துவ ஞானி, பதிலுரைக்க முற்பட்டான்; அதே நேரம் அங்கே இருந்த அனைத்துத் தரப்பு மத நம்பிக்கையாளர்களும் பெரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அங்கே அபிசீனியக் கிறிஸ்தவர்கள், திபெத்திய லாமாக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சவ்ராஷ்டிரர்கள் குழுமியிருந்தனர். அவர்களெல்லாம் கடவுளைப் பற்றியும் அவரை வழிபடும் முறையைப் பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தன்னுடைய நாட்டில் மட்டுமே உண்மையான கடவுள் அறியப்பட்டாரென்றும் சரியாக வழிபடப்படுகிறாரென்றும் கூறிக்கொண்டனர்.
ஒவ்வொருவரும் கூச்சலிட்டு வாதம் செய்துகொண்டு இருந்தனர், ஒரே ஒரு சீனப் பயணியைத்தவிர, அவன் கன்ப்யூசியசின் மாணவன், காப்பிக் கடையின் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து இந்த விவாதங்களில் கலந்து கொள்ளாமல் இருந்தான். அங்கே அமர்ந்து தேனீர் அருந்திக்கொண்டு மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருந்தான், ஆனால் அவனாக எதுவும் பேசவில்லை.
 இதை துருக்கியன் கவனித்து விட்டான், அவனிடம் இவ்வாறு ஒரு வேண்டுகொள் விடுத்தான்:
"நான் சொன்னது சரிதானே, என்னருமை சீனப்பயணியே. நீங்கள் ஏனோ அமைதி காக்கின்றீர்கள், நீங்கள் பேசினால் என்னுடைய கருத்தினை ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் உங்கள் நாட்டு வணிகர்கள், என்னிடம் உதவிக்காக வருவார்கள், சொல்லுங்கள் உங்கள் சீன நாட்டில் எவ்வளவோ மதங்கள் அறிமுகம் செய்யப்பட்டன, ஆனால் சீனர்கள் முகம்மதுவின் வழியை மிகச் சிறந்ததென்று கருதி மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். என் வார்த்தைகளை உறுதிப்படுத்துங்கள், எங்களிடம் உங்களது கருத்தினைச் சொல்லுங்கள் கடவுளையும் அவரது தூதரையும் பற்றி."
"ஆமாம், ஆமாம்," மற்றவர்கள் சொன்னார்கள், சீனப்பயணியைப் பார்த்து, " நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றோம்."
கன்ப்யூசியசின் மாணவனான சீனப்பயணி கண்களை மூடி சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினான். பிறகு கண்களைத் திறந்தான், தனது உடையிலிருந்து கைகளை நீட்டி மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு மென்மையான குரலில் பின்வருமாறு பேச ஆரம்பித்தான்.
"கணவான்களே, எனக்குப்புரிகின்றது என்னவென்றால், கடவுள் நம்பிக்கையை வைத்துப் பார்க்கும் பொழுது, வெறும் வீண் தற்பெருமைதான் ஒவ்வொருவரின் நம்பிக்கையும் மற்றவர்களின் நம்பிக்கையுடன் ஒத்துப்போகாமல் தடுக்கின்றது. நீங்கள், நான் சொல்வதைக் கவனமுடன் கேட்க முடிந்தால், உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போகிறேன் அது எடுத்துக்காட்டுடன் உங்களுக்கு விளங்கும்.
" நான் சீனாவிலிருந்து உலகைச் சுற்றிவரும் ஓர் ஆங்கில நீராவிக்கப்பலின் மூலம் இங்கு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் சுமத்ரா தீவில் நல்ல தண்ணீருக்காக நின்றோம். அது நண்பகல் நேரம், எங்களில் சிலர் கீழே இறங்கினோம், கடற்கரையில் இருந்த தென்னை மரங்களின் நிழலில் இளைப்பாறினோம், அந்த இடமொன்றும் பக்கத்திலுள்ள கிராமத்திலிருந்து ரொம்பத்தூரத்தில் இல்லை. நாங்களெல்லாம் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தோம்.
" நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு கண்பார்வையற்ற ஒருவர் வந்தார். பிற்பாடு அவரைப்பற்றி எங்களுக்குத் தெரியவந்தது என்னவென்றால், அவர் நீண்ட நாட்களாக தீவிரமாக சூரியனை உற்று நோக்கிக் கொண்டு அதிலிருந்து வரும் ஒளியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததால் அவருக்குப் பார்வை பறிபோனது என்று.
"அவர் அதை நீண்ட நெடு நாட்களாக ஆராய்ந்து கொண்டிருந்தார், பார்வை மாறாமல் சூரியனையே கவனித்துக் கொண்டிருந்தார், முடிவில் அந்த ஒளியினால் அவரது கண்கள் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்தார்.
"அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்:"
"கதிரவனின் ஒளி நீர்மம் அல்ல; அப்படி இருந்தால் அதை ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்துக்கு மாற்ற முடியும், அதை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும் அது நெருப்பும் அல்ல அது அப்படி இருந்தால் தண்ணீரைக்கொண்டு அணைத்து விட முடியும்.
"அது அரூபம் அல்ல ஏனென்றால் அதைக் கண்ணால் பார்க்க முடிகிறதே; அது வேறு வகை தின்மப் பொருளும் அல்ல, அதை நகர்த்த முடியவில்லை அல்லவா. எனவே கதிரவனின் ஒளி என்பது நீர்மமோ நெருப்போ அரூபமோ தின்மமோ அல்ல, சொல்லப்போனால் அது எதுவுமே அல்ல!"
"இவ்வாறு அவர் தர்க்கம் செய்தார், முடிவாக சூரியனையே பார்த்துக் கொண்டு அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவர் தனது பார்வையையும் தனது அறிவையும் இழந்தார். அவர் தனது பார்வையை இழந்ததால் முழுதாக நம்பத்தலைப்பட்டார், சூரியன் என்ற ஒன்றே இல்லை என்று.
"இந்த மனிதருடன் ஓர் அடிமையும் வந்தான், தென்னை மரத்தடியில் அவரை அமர வைத்தான், தரையில் கிடந்த தேங்காயை எடுத்தான், இரவுக்கான விளக்கினைச் செய்தான், தேங்காயின் நாரைக்கொண்டு திரி செய்தான், கொப்பறையிலிருந்து எண்ணெயெடுத்தான், திரியை ஊறவைத்துக் கொழுத்தினான்.
" அடிமை இவ்வாறு செய்தபோது பெருமூச்சு விட்டபடி அந்த மனிதர் சொன்னார்:
" நல்லது அடிமையே, நான் சொன்னது சரி தானே சூரியன் என்ற ஒன்றே இல்லை என்று? நீ பார்க்கிறாயா இருள் என்றால் என்ன வென்று? இன்னும் கூட மக்கள் சொல்கிறார்கள் சூரியன் இருக்கிறதென்று...அப்படி இருந்தால், அது என்ன?"
"எனக்குத் தெரியாது சூரியன் என்ன வென்று", அடிமை சொன்னான், "அது என்னுடைய வேலை இல்லை. ஆனால் எனக்குத் தெரியும் ஒளி என்றால் என்னவென்று. இங்கே நான் இரவுக்கான வெளிச்சத்தை உருவாக்கி விட்டேன். இதன் உதவியுடன் உங்களுக்கு நான் சேவை செய்யமுடியும். என்னால் குடிசைக்குள் என்ன இருக்கின்றது என்று இப்போது தெளிவாக கண்டறிய முடியும்.
அடிமை இப்போது தேங்காய்த் தொட்டியை எடுத்துக் கொண்டு சொன்னான் : "இது தான் எனது சூரியன்."
ஊன்றுகோலுடன் அங்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு முடவன் இந்த வார்த்தைகளைக்கேட்டுச் சிரித்தான்: " நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுதும் குருடாகி விட்டீர்கள்," அவன் பார்வை இழந்தவரைப் பார்த்துச் சொன்னான், "சூரியன் என்றால் என்ன வென்று தெரியாமல். நான் உங்களுக்குச் சொல்கிறேன் அது என்னவென்று. சூரியன் ஒரு நெருப்புப் பந்து, ஒவ்வொரு நாள் காலையிலும் கடலில் இருந்து எழுகிறது பிறகு ஒவ்வொரு மாலையிலும் நம் தீவின் மலைகளை எல்லாம் தாண்டிச் சென்று கீழே போய் மறைகிறது. நாங்கள் எல்லாம் அதைப் பார்த்திருக்கிறோம், நீங்கள் கூடக் கண்பார்வை கொண்டிருந்தால் அதைப் பார்த்திருப்பீர்கள்.
இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மீனவன் ஒருவன் சொன்னான்:
" இங்கே தெளிவாகத் தெரிகிறது நீங்கள் இந்தத் தீவை விட்டு வேறு எங்கேயும் போயிருக்க மாட்டீர்கள் என்று ஏனென்றால் நீங்கள் முடமானவர். அவ்வாறு இல்லை என்றால், என்னைப் போல நீங்களும் படகில் சுற்றி இருப்பீர்கள். உங்களுக்கும் தெரிந்திருக்கும் சூரியன் மலைகளுக்கிடையில் மறைவதில்லை என்று. ஆனால் அது காலையில் கடலில் தோன்றி இரவில் கடலில் மறைகின்றது. நான் என்ன சொல்கிறேனோ அது உண்மை. நான் அதை ஒவ்வொரு நாளும் என் கண்களால் காண்கிறேன்.
பிறகு எங்களுடன் வந்திருந்த ஓர் இந்தியன் அவனை இடை மறித்துப் பேசினான்:

" இப்படிப்பட்ட பகுத்தறிவாளன் மூடத்தனமாகப் பேசுவதைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். எப்படி ஒரு நெருப்புக் கோளம் நீரில் மூழ்கி எழுந்து அணைக்கப்படாமல் இருக்க முடியும்? சூரியன் ஒரு நெருப்புக் கோளம் அல்ல, அது சூரியதேவன், ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் தேரில் அமர்ந்திருக்கின்றார், அது மேரு மலையை வலம் வருகின்றது. சில நேரங்களில் கெட்ட பாம்புகளான ராகு கேது போன்றவை அவரைக் கவ்வும், அப்போது பூமி இருளடையும்.

"ஆனால் எங்கள் மத குருக்கள் தேவரை விடச்சொல்லி வேள்வி நடத்தி வேண்டுவார்கள். உங்களைப்போன்ற அறிவற்றவர்கள், இந்தத் தீவை விட்டு வேறு எங்கேயும் போகாதவர்கள் தான், சூரியன் தங்களது நாட்டுக்கு மட்டுமே வெளிச்சம் கொடுக்கிறார் என்று சொல்வார்கள்.
பிறகு அங்கிருந்த ஓர் எகிப்துக் கப்பல் தலைவன்  தன் பங்கிற்குப் பேசினான்
"இல்லை," அவன் சொன்னான், " நீங்களும் தவறாகவே சொல்கிறீர்கள். சூரியன் தேவரல்ல, இந்தியாவையும் மேரு மலையையும் மட்டுமே அவர் சுற்றி வரவில்லை. நான் கருங்கடல் முதல் , அரேபியக் கடல் எல்லைகள் எல்லாம் பார்த்து விட்டு , மடகாஸ்கர் முதல் பிலிப்பைன்ஸ் வரை எல்லாம் சென்றுள்ளேன். சூரியன் அங்கேயும் தான் ஒளிர்கின்றார், இந்தியாவில் மட்டுமல்ல.
"அது ஒரு மலையை மட்டும் சுற்றிவர வில்லை, அது கிழக்கே நெடுந்தொலைவில் எழு கின்றது, அது எழும் இடம் ஜப்பானையும் தாண்டி இருக்கின்றது, அது மேற்கில் ரொம்ப தூரத்தில் , இங்கிலாந்தையும் தாண்டிச் சென்று மறைகின்றது. அதனால் தான் ஜப்பானியர்கள், தங்கள் நாட்டை 'நிப்பான்' என்கிறார்கள், அதன் பொருள் சூரியனின் பிறப்பிடம் என்பதாகும். எனக்கு இது நன்கு தெரியும், நான் என் கண்ணாலேயே இதைப் பல முறை பார்த்திருக்கிறேன், என் தாத்தாவால் பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன், அவர் கடலின் முடிவு வரை சென்று வந்தவராக்கும்."

அவன் அத்ற்கும்மேலே சொல்லியிருப்பான், ஆனால் ஆங்கிலேய கடல்பயணி அவனை இடைமறித்தான்:
"சூரியனின் பயணத்தை இங்கிலாந்து மக்கள் அறிந்ததைப்போல அறிந்தவர்கள் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லை. சூரிய்ன் எங்கும் உத்திப்பதோ மறைவதோ இல்லை. அது பூமியை வலம் வருகின்றது. நாம் இதை உறுதியாகச் சொல்ல முடியும், நாம் உலகை சுற்றி வந்தோமானால், நாம் எங்கேயும் சூரியனை முட்டி நிற்க முடியாது. எங்கெங்கு நாம் சென்றாலும் அறியலாம், இங்கிருப்பதைப்போலவே சூரியன் காலையில் தோன்றி மாலையில் மறைகின்றது."
அந்த ஆங்கிலேயன் ஒரு குச்சியை எடுத்து மணலில் வட்டங்கள் வரைந்து சூரியன் எப்படி வான வீதியில் சுழல் கிறது என்று விளக்க முற்பட்டான். ஆனால் அவனால் சரியாக விளக்க முடியாமல் தடுமாறினான் காப்பலின் தலைவனைச் சுட்டிக்காட்டிச் சொன்னான்:
"இந்த மனிதர் என்னை விட நன்கு தெரிந்தவர். இவர் தெளிவாக அதை விளக்குவார்."

கப்பல் தலைவன் புத்திக்கூர்மையானவன், தன்னைப் பேசச் சொல்லும் வரை அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான். எல்லோரும் அவனை ஆர்வத்துடன் நோக்கினார்கள், அப்போது அவன் பேசலானான்.
"நீங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் தவறாக வழி நடத்துகிறீர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கிறீர்கள். சூரியன் உலகத்தைச் சுற்ற வில்லை, மாறாக உலகம் தான் சூரியனைச் சுற்றுகிறது, பூமி இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவும் செய்கிறது, இது ஜப்பானுக்கு மட்டுமல்ல பிலிப்பைன்சுக்கும் தான் இப்போது நாமிருக்கும் சுமத்ராவுக்கும் தான் ஆப்பிரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் மற்றுமுள்ள எல்லா நாடுகளுக்கும் தான்.
"சூரியன் ஒரு மலைக்கு மட்டும் வெளிச்சம் கொடுக்க வில்லை, ஒரு தீவுக்கு மட்டும் ஒளி கொடுக்காவில்லை, ஓர் உலகத்துக்கு மட்டும் ஒளி கொடுக்கவில்லை, எல்லா கோள்களுக்கும் அதைக் கொடுக்கிறார் நம் உலகத்துக்கு ஒளியை அளிப்பதைப் போலவே. உங்கள் காலடியில் இருக்கும் தரையை விடுங்கள் வானில் உள்ள சொர்க்கத்தைப் பாருங்கள்  நீங்கள் எல்லாம் தெளிவாவீர்கள். பிறகு உணர்வீர்கள் சூரியன் உங்களுக்கு மட்டுமே அல்லது உங்களது நாட்டுக்கு மட்டுமே ஒளி கொடுக்கவில்லை என்று.
கப்பல் தலைவன் அவ்வாறு பேசினான், அவன் கடலிலே நீண்ட தூரம் போயிருக்கிறான், நீண்ட நேரம் வானிலுள்ள கோள்களை எல்லாம் கவனித்திருக்கிறான்.
"அதனால், நம்பிகையை அடிப்படையாகக் கொண்டு பேசுவது," சீனப்பயணி தொடர்ந்தான், "வெறும் தற் பெருமையும் மூட நம்பிக்கையும் தான், மனிதர்களுக்கிடையில் தவறு ஏற்படக் காரணமாகிறது. சூரியனைப் போலவே தான் கடவுளும். ஒவ்வொரு மனிதனும் தனக்கென தனியானதொரு கடவுள் அல்லது தன் நாட்டுக்காவது ஒரு கடவுள் வேண்டுமென விரும்புகிறான். ஒவ்வொரு நாடும் கடவுளின் கோவிலைத் தன் நாட்டில் நிறுவ விரும்புகிறது. அவரது பெருமைக்கு இந்த உலகமே போதாது.
"எந்தக் கோவிலாவது கடவுளால் கட்டப்பட்ட கோவிலைப்போல எல்லா மக்களையும் ஒன்று சேர இணைக்கும் ஒரே நம்பிக்கை கொண்ட ஒரே மதத்தைப் போல இருக்கிறதா? ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வழிபாட்டு முறை, பாதுகாக்கப்பட்ட கூறை, அதன் விளக்குகள், ஓவியங்களும் சிற்பங்களும், கல்வெட்டுகள், அதன் சட்ட திட்டங்கள், தான தருமங்கள், அதன் கோபுரங்கள், அதன் பூசாரிகள். எந்தக் கோவிலாவது கடலைப்போலவோ, சொர்க்கத்தைப் போலவோ சூரியனை, நிலவை விண் மீன்களைப் போலவோ ஒளிர்கிறதா, எந்தச்சிலையாவது வாழும் மனிதர்களுக்கு ஒப்பாகிறதா? இவர்களைப்போல அன்பு காட்டுகிறதா? மனிதர்களுக்கு உதவுகிறதா?
"கடவுளின் கருணையை எளிதில் அறிய முடிகிறதா? மனிதனுக்காக பிற உயிர்களுக்காக அவர் அளித்த ஆசீர்வாதங்களைப் புரிந்து கொள்ள முடிகிறதா? மனிதனின் இதயத்தில் எழும் கருணையை விடத் தெளிவாக எங்காவது சட்டங்கள் எழுதப்பட்டிருக்கிறதா?  அன்பு செலுத்தும் ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் விட்டுக் கொடுக்கும் பேரன்புக்கு ஈடாக எந்த ஒரு தியாகம் இருக்கிறது? ஒரு நல்ல மனிதனின் இதயத்தை விட எந்த கோபுரம் சிறந்தது? கடவுள் இதை விட வேறு எதை விரும்புவார்?
"கடவுளைப்பற்றி எவ்வளவு உயர்வாக ஒருவன் சிந்திக்கிறானோ அவ்வளவு அதிகமாக அவரை அறிகிறான். அவரை அவன் தெளிவாக அறியும் போது அவருக்கு அருகில் அவன் செல்கிறான், அவரது நல்லெண்ணம், கருணை, பிறரிடத்தில் காட்டும் அன்பு ஆகிய நற்குணங்கள் இவனுக்கும் வருகிறது.
"சூரியன் ஒளியால் இந்த உலகம் நிறைகிறது, அதனால் சொல்கிறேன் அறியாத மனிதர்களைத் திட்டாதீர்கள், அவன் தனது மூட நம்பிக்கையால் கதிரவனின் ஒரே ஒரு ஒளிக்கீற்றினை மட்டுமே காண்கிறான். அதே போல ஆத்திகரையும் திட்டாதீர்கள் அவர்களும் பார்வை இழந்தவர்களைப் போல சூரியன் இல்லை என்று சொல்பவர்களே."
அவ்வாறு அந்த சீனப்பயணி சொல்லிமுடித்த போது, அந்த காப்பிக்கடையில் இருந்த அனைவரும் அமைதியானார்கள், அதற்குப் பிறகு அவர்கள் யாருடைய நம்பிக்கை பெரிது என்று தங்களுக்குள் வாதிட்டுக் கொள்ளவில்லை.

******


Friday, March 18, 2011

Злой мальчик : மோசக்காரப் பையன்



மூலம் ; அன்டன்  செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி.

 

வான் லாப்கின், அழகிய தோற்றம் கொண்ட இளைஞன், அனா சாம்ப்ளிட்ச்காயா, நுனி மூக்கு வளைந்த பெண், செங்குத்தான மலைப்பாதையில் ஆற்றங்கரையில் இறங்கி அடிவாரத்தில் இருந்த பலகையில் அமர்ந்தார்கள். பலகை ஆற்றங்கரையின் மிக அருகில் வில்லோ மரக்கூட்டங்களின் நடுவில் அமைந்திருந்தது.  மிக அழகிய இடமாக இருந்தது.  எந்தவித வெளியுலகத் தொடர்பும் இன்றி அங்கே அமர்ந்திருக்கலாம், நீருக்குள் நீந்தும் மீன்களும் நீர்ப்பரப்பில் ஓடும் நீண்ட கால் கொண்ட நீர்ப்பூச்சிகளையும் தவிர யாரும் கவனிக்க மாட்டார்கள். அந்த இளம் நண்பர்கள் மீன்பிடிக்கத் தேவையான தூண்டில், வலைகள், புழுக்கள் மற்றும் இன்ன பிற மீன்பிடி சாதனங்களுடன் இருந்தனர். அந்தப் பலகையில் அமர்ந்ததும் மீன்பிடிக்கத் தூண்டிலிட்டனர்.

"ஒரு வழியா நாம தனிமையில் இருக்கிறது எனக்குச் சந்தோசம்," லாப்கின் தன் பின்னால் பார்த்துக் கொண்டு பேசினான். "நான் உனக்கு ஒன்றைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன், அனா. உன்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே நான் விழுந்துவிட்டேன். நான் பிறந்ததுக்கான அர்த்தம் விளங்கி விட்டது. நீ தான் என் காதல் தெய்வம் என்னுடைய முழு வாழ்க்கையையும் உன் காலடியில் சமர்ப்பிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன்னைப் பார்த்த நொடியே காதலில் விழுந்து விட்டேன், என் வாழ்வில் முதல் முறையாகக் காதல் கொண்டேன். நான் பைத்தியக்காரத்தனமாக உன்னைக் காதலிக்கிறேன். --- உடனே இழுக்காதே, கொஞ்சம் கடிக்க விடு-- சொல்லு என் அன்பே, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், என்னுடைய காதலை நீ திரும்பச் செலுத்த வேண்டும் என்பதில்லை- நான் அதற்குத் தகுதியானவனா என்று எனக்குத் தெரியாது.--ஆனால் நான் அப்படி ஒன்றை விரும்புகிறேன். "
அனா சிறிய கூச்சலுடன் தூண்டிலை வைத்திருந்த கையை காற்றில் சுண்டி இழுத்தாள்.  ஒரு சிறிய வெள்ளி நிற மீன் சூரிய ஒளியில் மின்னியவாறு நீரின் மேல்தளத்தில் தூண்டிலில் இருந்து தொங்கிக்கொண்டிருந்தது.

"ஆகா அற்புதம், இது பெர்ச் வகை மீன்! ஓ ஓ சீக்கிரம் , அது வந்திட்டு இருக்கு!"


மீன் தூண்டிலில் இருந்து தப்பி புற்களை   எல்லாம் தாண்டி அதன் வசிப்பிடமான நீரில் விழுந்தது.

எப்படியோ, அதைப் பிடித்து இழுக்கும் போது மீனைப் பிடிப்பதற்குப் பதிலாக  அனாவின் கையைப்  பற்றினான், எதேச்சையாக அவளது இதழ்களில் தன் உதடுகளைப் பதித்தான். அனா விடுவித்துக் கொண்டாள்,    இருந்தாலும் காலம் கடந்துவிட்டது, அவர்களது உதடுகள் முத்தமிட்டுக் கொண்டன. அதெல்லாம் ஒரு விபத்தினப் போல நடந்து முடிந்து விட்டது. இரண்டாவது முத்தமும் தொடர்ந்தது.

அதற்குப் பிறகு தப்பு நடக்கக் கூடாது என்ற உறுதிமொழிகள் இருவரும் கூறிக்கொண்டனர். மகிழ்ச்சியான தருணங்கள்! ஆனால் பாருங்கள் இதைப்போன்ற மகிழ்சிகள் இந்தப் பூமியில் நிலைப்பதில்லை! அதில் எதோ ஒரு நஞ்சு சேர்ந்து விடுகிறது, தானாகவோ அல்லது வேறு ஏதாவது வெளிச் சக்தியாலோ. இந்த இடத்திலும் அப்படித்தான். அந்த இளம் காதலர்கள் முத்தமிட்டுக் கொண்டபோது திடீரென யாரோ சத்தமிட்டுச் சிரிப்பது கேட்டது. மகிழ்ச்சியைக் கைவிட்டவாறு ஆற்றினைப் பார்த்தனர்; அவர்கள் முன்னே இடுப்பளவுத் தண்ணீரில் ஒரு சிறுவன் துணியில்லாமல் நின்றுகொண்டு இருந்தான்: அவன் தான் கோலியா, அனாவின் தம்பி!  இருவரையும்  வைத்த கண் வைத்தவாறு பார்த்துக் கொண்டு குறும்பாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

"ஆகா, நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் முத்தம் கொடுத்திட்டு இருக்கீங்களா? சரி சரி அம்மா கிட்டச் சொல்றேன்!"

"நீ நல்ல பையனல்லவா-" லாப்கின் வெட்கப் பட்டுக் கொண்டே அவனை சமாளிக்கப் பார்த்தான். "எங்களைப் பின்தொடர்வது, என்ன பேசுறோம்கிறதை  ஒளிஞ்சிருந்து கேட்கிறது எல்லாம் நல்ல பசங்க செய்ய மாட்டாங்க. நீ ரொம்ப நல்ல பையன்..."

"எனக்கு ஒரு ரூபிள் கொடுங்க  அப்புறம் இதை பத்தி ஒன்னும் பேச மாட்டேன்!", நல்ல பையன் சொன்னான். "கொடுக்கலைன்னா நான் சொல்லிவிடுவேன்"


லாப்கின் தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபிளை எடுத்து கோலியாவிடம் கொடுத்தான். சிறுவன் வெடுக்கென்று தன்னுடைய ஈரக்கையால் பிடுங்கினான் , சீட்டியடித்தபடி  நீந்திச் சென்றான். அதற்குப் பிறகு இருவரும் அங்கு முத்தமிட்டுக் கொள்ளவில்லை. 

அடுத்த நாள் லாப்கின் கோயிலாவிற்கு நகரத்திலிருந்து வண்ணம் தீட்ட பெட்டியும்  ஒரு பந்தையும் வாங்கி வந்தான்; அவனது அக்கா  தனது பழைய சிறு பெட்டிகளை எல்லாம் எடுத்துக் கொடுத்திருந்தாள். கோயிலாவிற்கு நிறையப் பரிசுப்பொருட்கள் கிடைத்தது. சிறுவன் விளையாடுவதை எல்லாம் விட்டு விட்டு காதலர்களை வேவு பார்ப்பதிலேயே கவனமாக இருந்தான், இன்னும் நிறையப் பரிசுப்பொருள் கிடைக்குமென்று எண்ணினான். எங்கு அனாவும் லாப்கினும் செல்கிறார்களோ அங்கெல்லாம் பின் தொடர்ந்தான். அவர்களை அவன் ஒரு நொடி கூடப் பிரிந்திருக்கவில்லை.

"குட்டிச் சாத்தான்!" பற்களை நெரித்துக் கொண்டே லாப்கின் பொருமினான். "இத்துனூண்டு இருக்கிற போதே இப்படியெல்லாம் செய்யிறானே, என்னை மாதிரி வளர்ந்தா என்னவெல்லாம் செய்வானோ?"

ஜூன் மாதம் முழுக்க கோயிலா இன்பமில்லாக் காதலர்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தான். காட்டிக் கொடுத்து விடுவதாக அவர்களை மிரட்டினான், வேவு பார்த்தான், பரிசுகள் வேண்டுமென்று கேட்டான், போதுமானது கிடைக்கவில்லை என்ற போது கடிகாரம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தான். கடிகாரமும் அவனுக்குக் கொடுக்கப் பட்டது.

ஒரு நாள் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது , கண்ணடித்தபடி அவன் சிரித்தான், லாப்கினைப் பார்த்துக் கேட்டான்: "அவங்க கிட்ட அதைச் சொல்லட்டுமா?"

லாப்கின் வெட்கப்பட்டுப் போனான் உணவைத் திணிப்பதற்குப் பதிலாக சிறுவனின் வாயில் துணியைத் திணித்தான். அனா துள்ளிக் குதித்து வேறு ஓர்  அறைக்கு ஓடினாள்.

ஆகஸ்ட் மாத இறுதி வரை இளம் காதலர்கள் அந்தத் தவிப்பிலேயே இருந்தார்கள், இறுதியாக லாப்கினுக்கு அணாவை மனம் முடிக்க பேச்சு வார்த்தை தொடங்கியது. என்ன மகிழ்ச்சியான நாள்!

தனது கனவுக்கன்னியின் பெற்றோர்களிடம் பேசி சம்மதம் வாங்கிய உடனேயே லாப்கின் கோலியாவைத் தேடி தோட்டத்துக்குள்  ஓடினான். தேடிக்களைத்து வேர்த்து நனைந்துவிட்ட கடைசியில், இடைஞ்சல் தரும் கோலியாவைக்  கண்டுபிடித்து விட்டான்.   காதைப் பற்றித் திருகினான். அனாவும் அவனைத் தேடிவந்தாள்இன்னொரு காதை அவளும் பற்றிக்கொண்டாள். காதலர்கள் முகத்தில் மகிழ்ச்சி களைகட்டி இருந்ததுகோலியா அழுது கொண்டே  கருணை காட்டுமாறு கெஞ்சினான் அப்போது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

"அன்பானவர்களே, நல்லது, நான் இது மாதிரி இனிமேல் செய்யமாட்டேன், மன்னிச்சுக்கங்க!" கோலியா விண்ணப்பித்தான்.

 கோலியாவின் காதைத் திருகியபோது தங்களுக்குக் கிடைத்த  ஆனந்தத்தைப் போன்ற ஒன்று   அதற்குப் பிறகு  கிடைக்கவில்லை என்று  காதலர்கள் தங்களுக்குள்   பேசும் போதெல்லாம் ஒத்துக் கொண்டார்கள். 

 

******

 

Friday, March 11, 2011

Le Gueux : பிச்சைக்காரன்

Guy de Maupassant


 

மூலம் : கய் தே   மாப்பசான்

தமிழில் : மா. புகழேந்தி.

ற்போது துன்பத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில்  மகிழ்ச்சியான நாட்களையும் அவன் பார்த்திருக்கிறான்.

அவனின் பதினைந்தாவது வயதில்  வார்வில்லி நெடுஞ்சாலையில் எதோ ஒரு வண்டி செய்த விபத்தில் அவனது இரண்டு கால்களும் நசுக்கப்பட்டிருந்தன. அந்த நாள் முதல் அவன் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தான், சாலைகளிலும், வயல்வெளிகளிலும் ஊர்ந்து சென்றான், கைகளுக்கிடையில் ஊன்று கோல்களுடன்  நடப்பான், அவ்வாறு நடந்து நடந்து அவனது தோள்கள் காது வரை வந்துவிட்டன. அவனது தலை இரண்டு மலைகளுக்கு இடையில் சிக்கிய பாறைபோல் தெரிந்தது. 

சாக்கடை ஓரத்தில் கைவிடப்பட்ட குழந்தையாக அவன் இருந்த போது பாதிரியார் ஒருவரால் ஆல் செயின்ட்ஸ்  டே அன்று கண்டெடுக்கப்பட்டு ஞானஸ்நானம் செய்யப்பட்டான், அதனால் நிக்கோலஸ் டூஸ்சைன்ட் என்று பெயரிடப்பட்டு அறக்கட்டளைப் பணத்தால் வளர்க்கப் பட்டான், எந்தக் கல்வியும் அளிக்கப்படாமல் வளர்ந்தான், கடைக்காரன் ஒருவனால் வழங்கப்பட்ட பல கோப்பை பிராண்டி குடித்து முடமானான் (அது தனிக்கதை), அதன் பிறகு யாராலும் வரவேற்கப்படாத அகதியானான், அவனுக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று பிச்சை எடுக்கக் கையேந்துவது தான்.

ஒரு முறை த'அவாரி அம்மையார் தனது அரண்மனைக்கு அருகிலுள்ள கோழிப்பண்ணையின் பக்கத்தில் அவனுக்கு இடம் கொடுத்தாள்,   வைக்கோலால் செய்யப்பட பாயில் அவன் உறங்கினான். அவனுக்கு உணவு கிடைத்தே ஆக வேண்டுமென்ற போது அரண்மனையின் சமையலறையிலிருந்து அவனுக்கு சிறிது பழச்சாறும் கொஞ்சம் ரொட்டித் துண்டுகளும் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அம்மையார் அவனுக்கு தன் ஜன்னல் வழியே கொஞ்சம் காசையும் வீசுவாள். ஆனால் அவள் இப்போது இறந்துவிட்டாள். 

கிராமத்து மக்கள் எப்போதாவது கொஞ்சமாகக் கொடுத்தார்கள். எல்லோருக்கும் அவனை நன்கு தெரிந்திருந்தது. ஒவ்வொருவரும் நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் அவன் தனது ஊன்று கோல்களால்  இழுத்து இழுத்து நடந்து போவதைப் பார்த்துப் பார்த்துச் சலித்திருந்தார்கள். ஆனாலும் அவன் அங்கிருந்து வேறு  ஊருக்குப் போகவேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் அவனுக்கு இந்த உலகத்தில் இதை விட்டால் வேறு ஓர் இடம் தெரியாது. இந்த மூன்று அல்லது நான்கு கிராமங்களைத் தவிர அவன் தனது துயரமான வாழ்வில் வேறு எங்கும் சென்றதில்லை. தனக்குப் பழக்கப்பட்ட இந்த எல்லைக்குள் பிச்சை எடுக்கும் நடவடிக்கைகளை செய்து வந்தான். 

பார்வையை மறைத்து நிற்கும் மரக்கூட்டங்களுக்குப் பின்னரும் உலகம் இருக்கிறதா  என்பதைக் கூட அவன் அறிந்திருக்கவில்லை. அவன் அந்தக் கேள்வியைத் தன்னிடம் கூடக் கேட்டிருக்கவில்லை. வயலிலே வேலை செய்பவர்கள் தொடர்ந்து இவனைப் பார்த்து வெறுப்படைந்து வியந்து கேட்பதுண்டு, "ஏன் நீ இங்கேயே பிச்சைஎடுத்துக் கொண்டிருக்கிறாய்? வேறு எங்காவது போவது தானே?" என்று. ஆனால் அவன் நழுவி விடுவான். உலக அறிவே இல்லாத அவன் ஆயிரம் ஆயிரம் காரணங்களுக்காக அஞ்சினான், புது முகங்கள், தன்னைப்பற்றித் தெரியாதவர்கள், அவமானங்கள் செய்வோர் , கேலிகள் செய்வோர் , கிண்டல்கள் பேசுவோர் சாலையைக் கடக்கும் காவலர்கள், எல்லாரையும் கண்டு அஞ்சினான். இவை எல்லாவற்றையும் அவன் காணக் கூசினான், தவிர்த்தான், காவலர்களைக் காணும் போதெல்லாம் அவன் தேவையில்லாமல் உள்ளுணர்வு ஏற்படுத்தும் அச்சத்தால் புதர்மரைவிலோ தூண்களின் பின்னோ ஒளிந்து கொள்வான்.

தூரத்தில் காவலர்கள் வருவதை அவன் அறிந்தால், பகல் வெளிச்சத்தில் சீருடையில் அவர்களைப்பார்த்தால் தேவையற்ற அச்சத்தால் வளைக்குள் பதுங்கும் சிறு விலங்குபோல் நடுங்குவான். தனது ஊன்று கோல்களை வீசிவிட்டுத் தரையில் சுருண்டு படுத்துக் கொள்வான், எவ்வளவு சிறிதாகச் சுருங்க முடியுமோ அவ்வாறு, அவனது கந்தல் துணியோ  தரையோடு சேர்ந்து அவனை மூடியிருக்கும்.

அவன் காவலர்களுடன் எந்த பிரச்சனையையும் செய்ததில்லை. ஆனால் அவனது பயந்துகொள்ளும் உணர்வு அவனது ரத்தத்தில் ஊறியே இருந்தது. அதை அவன் அனேகமாக அவனது பெற்றோரிடத்திலிருந்து பரம்பரை நோயாகப் பெற்றிருக்க  வேண்டும். 

அவனுக்கு வேறு புகலிடம் இல்லை, தலைக்குமேல் கூரை இல்லை, எந்த உறைவிடமும் இல்லை. கோடையில் அவன் வெட்டவெளியில் தூங்கினான், குளிர்காலத்தில் பண்ணைகளில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து கொள்ளும் அற்புதத் திறமை கொண்டிருப்பான். அவன் தனது இடத்தை பிறர் அறியும் முன்னர் மாற்றிக்கொள்வான்.  அவனுக்கு பண்ணை வீடுகளில் உள்ள சந்து பொந்துகள் எல்லாம் அத்துபடி, ஊன்று கோல்களைப் பற்றிப் பற்றி நடந்து அவனது கைகள் பலம் கொண்டிருந்தன. தனது கைகளின் பலத்தால் தனது உடலை  உயரத்தில் தூக்கி மாடங்களில் ஏற்றிக்கொள்வான் . அங்கே அவன் நான்கு ஐந்து நாட்கள் ஒளிந்து கொள்வான். அதற்கும் முன் போதுமான உணவைச் சேர்த்துக் கொள்வான்.

அவன் வயல்வெளியின் விலங்கினைப் போல வாழ்ந்தான். அவன் மனிதர்களுக்கு நடுவே வாழ்ந்து வந்தான், ஆனால் ஒருவரையும் தெரிந்திருக்கவில்லை, யாரையும் விரும்பியிருக்கவில்லை, விவசாயக் கூலிகள் எல்லாம் இவனைப் பார்க்கும் போதெல்லாம் தங்களது நெஞ்சத்தில் வெறுப்பை உமிழ்ந்தார்கள். அவனை அவர்கள் 'ஆலயமணி' என்று அழைத்தார்கள். அவன் ஊன்று கோல்களால் நிற்பது சர்ச்சில் மணி இரு தூண்களுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருப்பதைப் போல இருக்கும்.

கடந்த இரண்டு நாட்களாக அவன் எதையும் உண்டிருக்கவில்லை. ஒருவரும் அவனுக்கு எதையும் கொடுத்திருக்கவில்லை. ஒவ்வொருவரின் பொறுமையும் தீர்ந்து விட்டிருந்தது. பெண்கள் அவனைத் தங்களது கதவருகே பார்த்தபோதெல்லாம் சத்தமிட்டு விரட்டினர்: "போ போ, அகதியே, நீ எதற்கும் லாயக்கில்லை, ஏன் மூணு நாளைக்கு முன்னால் தானே உனக்கு ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்தேன், இப்போ மறுபடியும் வருகிறாய்"

அவன் தனது ஊன்று கோள்களுடன் வேறு வீட்டுக்குத் திரும்பினாலும் அங்கேயும் இதே மாதிரி வரவேற்பையே பெற்றான்.


பெண்கள் எல்லோரும் தங்கள் வீட்டருகே நின்று கொண்டு தீர்மான மாக முழங்கினார்கள்: "வருஷம் முழுக்க இந்தச் சோம்பேறி நாய்க்கு  சோறு போட முடியாது!"
ஆனால் அந்தச் சோம்பேறி நாய்க்கு  ஒவ்வொரு நாள்ளும் உணவு தேவையாக இருந்ததே.

அவன் சோர்ந்து போனான், செயின்ட்-ஹிலேயிர், வார்வில்லி, லெஸ் பில்லீட்ஸ் ஆகிய எல்லா இடங்களிலும் அலைந்தாலும் ஒற்றைக் காசைக் கூடக் காண முடியவில்லை. அவனது ஒரே நம்பிக்கை டூர்நோலேஸ், ஆனால் அங்கே போக அவன் நெடுஞ்சாலையில் ஐந்து மைல்கல் நடக்க வேண்டும், ஆனால் இன்னொரு அடிக்கு நகரக் கூட முடியாமல் இருந்தான். அவனது வயிறும் சட்டைப்பையும் காலியாகவே இருந்தது, ஆனாலும் அவன் தனது பயணத்தைத் தொடங்கினான்.

அது டிசம்பர் மாதம், குளிர் காற்று வயல்களிலும், இலைகளற்ற கிளைகளிலும் வீசி ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அச்சமூட்டும் கார்முகில்கள் இருண்ட வானில் திரண்டிருந்தன. பிச்சைக்காரன் வலியுடன்   ஒவ்வொரு ஊன்று கோலாய் வைத்து நகர்ந்து மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்துக்கு ஒருமுறை சாக்கடையின் ஓரத்தில் அமர்ந்து ஒய்வு எடுத்தான். பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது, அவனது குழப்பமுற்ற மெல்லச் செயல்படும் மனம் ஒரே ஒரு சிந்தனையை மட்டும் கொண்டிருந்தது, சாப்பிடவேண்டும், ஆனால் எப்படி அவனுக்கு ஒன்றும் தெளிவாகவில்லை. மூன்று மணி நேரமாக அவன் வலிகொண்ட தனது பயணத்தைத் தொடர்ந்தான். கடைசியாக ஒரு கிராமத்தின் வெளியே வளர்ந்திருந்த மரங்களைக் கண்ணுற்றான், அது அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சியை ஊட்டியது.

அவன் அங்கு சந்தித்த முதல் மனிதனிடம் பிச்சை கேட்டான் அதற்கு அம்மனிதன் சொன்னான் :


"
ஒ நீ தானா மறுபடியும், கிழட்டு நாயே? உன்னை நாங்க தொலைக்கவே முடியாதா?"


அப்புறம் 'ஆலயமணி' தன்வழியே நடந்தான்.

ஒவ்வொரு கதவின் முன்னே அவன் நின்றபோதும் இதைப் போலவும் இதைவிடக் கடுமையாகவும் வசவுகளை  கேட்க வேண்டியிருந்தது. ஊர்முழுக்க சுற்றி வந்த பின்னரும் அரைக்காசு கூட அவனுக்குக் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் அவன் அருகிலுள்ள பண்ணைகளுக்குச் சென்றான், சேறான பாதைகளில் வருந்திக்கொண்டு முன்னேறினான், சோர்ந்து போனதால் தன்னுடைய ஊன்று கோல்களை அவனால் நகர்த்தக் கூட முடியவில்லை. ஒரே மாதிரியான வரவேற்பையே அவன் எங்கும் கண்டான். அது  ஒரு கொடுமையான காலம், குளிர் வாட்டிஎடுத்தது, கடுங்குளிரில் அவனது இதயமே உறைந்து விடும்படி இருந்தது. எந்தக் கைகளும் அவனுக்கு பணமோ உணவோ கொடுக்க  முன்வரவில்லை.

தனக்குத் தெரிந்து அனைத்து வீடுகளிலும் கையேந்தி விட்டான், ஒன்றும் கிடைக்கவில்லை, கடைசியாக  சிக்கேவின் பண்ணைக்கு அருகே  செல்லும் சாக்கடைக்கருகில் நின்றான். அவனது ஊன்றுகோல்கள் அவனிடமிருந்து நழுவி விழுந்தன, அவன் அசைவற்று நின்றான், பசிக் கொடுமை அவனை வாட்டியது, தனது கொடுமையான வாழ்க்கையை பிறர் உணரும் அளவுக்குச்  சொல்ல அவன் புத்திக் கூர்மை அற்றவனாக இருந்தான்.

 மனித மனத்துக்கே உண்டான வெற்று நம்பிக்கையால் ஆக்கிரமிக்கப்பட்ட இதயத்துடன் அவன் காத்திருந்தான். பண்ணையின் ஓரத்தில் அவன் டிசம்பர்க் குளிரில் காத்திருந்தான். ஏதாவது அற்புத  உதவிகள் மனிதர்களிடமிருந்தோ சொர்க்கத்திளிருந்தோ தனக்குக் கிடைக்கும் என்று காத்திருந்தான், அது எப்போது கிடைக்கும் என்று அறிவே இல்லாமல் காத்திருந்தான். அங்கே, சில கறுப்புக் கோழிகள் அங்குமிங்கும்  ஓடிக்கொண்டு உணவு தேடிக்  கொண்டிருந்தன, இந்த பூமியின் மேல் எல்லா உயிரினங்களும் வாழ்வது போல. சிறிது நேரத்துக்கொருமுறை  தங்களது அலகால் புழுவையோ ஏதேனும் ஒரு விதையையோ கொத்தி எடுத்துக் கொண்டிருந்தன. பிறகு தங்களது வேலையை அவைகள் தொடர்ந்தன, தேடினால் உணவு நிச்சயம் கிடைக்கும்  என்ற உறுதியில்.

'ஆலயமணி' முதலில் எந்தச் சிந்தனையும் இல்லாமல் அவைகளைக் கவனித்தான். அவனுக்கு ஓர் எண்ணம் உதித்தது, மனதில் அல்லாமல் வயிற்றில். ஏதேனும் ஒரு கோழியை அடித்து அங்கே கிடக்கும் சுள்ளி விறகுகளைக் கொண்டு வாட்டி சாப்பிட்டால் என்ன என்று.

அவனுக்கு உறைக்கவில்லை தான் ஒரு திருட்டைச் செய்யப் போகிறோம் என்று. கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்தான். குறி தவறாமல் தனக்கு அருகில் திரிந்த ஒரு கோழியை அடித்தான். பறவை சிறகுகளை அடித்தபடி சுருண்டு விழுந்தது. மற்ற பறவைகள் அங்குமிங்கும் சிதறி ஓடின. ஆலயமணி தனது ஊன்று கோல்களைப் பற்றிக் கொண்டு தன்னால் வேட்டையாடப்பட்ட பறவை விழுந்த இடத்துக்கு முன்னேறினான். 

அவன் அந்தப் பறவை விழுந்த இடத்துக்கு முன்னேறிய போது அவனது முதுகில் பயங்கரமான ஓர் அடி விழுந்தது, அவன் ஊன்றுகோல்களை தவறவிட்டான், பத்தடி தூரத்துக்குப் பறந்து போய் விழுந்தான். அங்கே அவனருகில் ஆத்திரத்தில் விவசாயி சிக்கே, வளைத்துப் பிடித்து உதைத்துக் கொண்டிருந்தான், அநாதரவாக 'ஆலயமணி' அவனிடத்தில் கெஞ்சினான்.

வயலிலே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தங்களது முதலாளியுடன்  சேர்ந்து முடப் பிச்சைக்காரனைப் புரட்டிப் புரட்டி நையப்புடைத்தனர். அடித்து அடித்துச் சலித்த பின்னர் அவனை ஒரு மரக்குடிசையில் வைத்து அடைத்தனர், சிலர் காவலர்களை அழைக்கச் சென்றனர். 

 'ஆலயமணி' பாதி இறந்து விட்டான், ரத்தம் வழிந்து கொண்டிருந்தது, பசியாலும் வலியாலும் தரையில் கிடந்து துடித்தான். மாலை வந்தது, பிறகு இரவு, பிறகு மறுநாள் காலையும். இப்போதும் அவன் ஒன்றும் உண்டிருக்கவில்லை.

நண்பகல்  வாக்கில் காவலர்கள் வந்தார்கள். பிச்சைக்காரனின் தரப்பிலிருந்து ஏதேனும் தாக்குதல் வருமோ என்று,   மிகுந்த எச்சரிக்கையுடன் கதவைத் திறந்தார்கள். சிக்கே சொன்னான், தன்னை அவன் கடுமையாகத் தாக்கினான், தன்னைத் தற்காத்துக் கொள்ள மிகுந்த சிரமப் பட்டேன் என்று. 

 

காவலர் கத்தினார்:

"வா வா, எழுந்திரு!"

ஆனால் 'ஆலயமணி'யால் நகர முடியவில்லை. தன்னால் ஆன மட்டும் எழுந்திருக்க மிகுந்த முயற்சி செய்தான், முடியவில்லை. அவனது இயலாமையை காவலர்கள் நடிப்பு என்று கருதினார்கள், அவனை வலுக்கட்டாயமாக எழுப்பி ஊன்று கோல்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.

அச்சம் அவனை ஆட்கொண்டது-- காவலர் சீருடையைக் கண்டதும் அவனது ரத்தத்தில் ஊறிய அச்சம், விளையாட்டு வீரன் ஆட்டம் தொடங்கையில் கொள்ளும் அச்சம், பூனையைப் பார்த்ததும் எலிக்கு வரும் அச்சம்--- இருந்தாலும் அவனது மனித முயற்சிக்கும் அப்பாலிருந்து வலிமை கொண்டு வெற்றிகரமாக நின்றான். 

"நட!" காவலர் சொன்னார். அவன் நடந்தான். அந்த வயலில் வேலை செய்தவர்கள் எல்லாம் அவன் செல்வதைக் கண்டார்கள். பெண்கள் அவனை வைதார்கள் ஆண்கள் அவனைத் திட்டினார்கள் அவமானப் படுத்தினார்கள். கடைசியாக அவன் பிடிபட்டான்! சனியன் தொலைந்தது! அவன் இரண்டு காவலர்களுக்கு  நடுவே சென்றான். அவன்  போதுமான வலிமையைத் திரட்டிக்கொண்டான்-- இயலாமையால் திரட்டப் பட்ட வலிமை-- மாலை வரை அவனை இழுத்துக் கொண்டு செல்லத் தேவையான அளவிற்கு. தனக்கு என்ன நடக்கப் போகிறது என்று அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவன் அச்சமுற்றிருந்தான். 

சாலையைக் கடக்கும் பொது எதிர்ப்பட்ட மக்கள் தங்களுக்குள் முணுமுணுத்தார்கள்:

"இது அவனா வேறு ஒரு திருடனா?"

மாலையில் அருகிலிருந்த நகரத்திற்கு ஓட்டிக்கொண்டு செல்லப்பட்டான். அவன் இவ்வளவு தூரம் முன்னர் எப்போதும் பயணம் செய்ததில்லை. எதற்கு அங்கே அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்றோ என்ன நடக்கப் போகிறது என்றோ அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.  கடந்த இரண்டு நாட்களாக நடந்த எதிர்பாராத கொடுமைகள் எல்லாமும், முன்பின் அறிமுகமில்லா முகங்களும் வீடுகளும் அவனது நம்பிக்கையைத் தகர்த்து விட்டிருந்தன.

அவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, ஏனெனில் என்ன நடக்கிறது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதோடல்லாமல், அவன் கடந்த பல ஆண்டுகளாக யாரிடமும் பேசியிருக்கவில்லை, நாக்கின் பயன்பாட்டையே அவன் தவிர்த்திருந்தான். அவனது சிந்திக்கும் திறனோ  வார்த்தைகளைக் கூட்டிப் பேசுவதற்கு முடியாமல் இருந்தது.

அவன் நகரத்துச் சிறையில் அடைக்கப் பட்டான். காவலர்களுக்கு உறைக்காமல் போனது அவனுக்கும் பசிக்கும் என்று. அவன் அங்கேயே தனிமையில் விடப்பட்டான், அடுத்த நாள் வரை. ஆனால் அதி காலையில் அவர்கள் வந்து அவனைச் சோதித்துப் பார்த்த போது அவன் இறந்து விட்டதை அறிந்தார்கள்.

என்ன ஓர் ஆச்சரியம்!

******