Saturday, January 8, 2011

Нищий : பிச்சைக்காரன்


மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி

"ருணை உள்ளவர்களே பசியால் வாடும் இந்த ஏழை மீது இரக்கம் காட்டுங்கள். நான் மூணு நாளா எதையும் சாப்பிடலை. இரவில் தூங்குவதற்கு எந்த இடமும் இல்லை. கடவுள் சத்தியமாச் சொல்றேன், அஞ்சு வருஷமா நான் ஒரு கிராமத்தில ஆசிரியரா இருந்தேன், ஜேம்ச்த்வோ சதிகாரனால் என்னுடைய வேலையைத் தொலைத்துவிட்டேன். பொய் சாட்சியால் நான் பலியாகிப் போனேன், அங்கிருந்து வெளியேறி ஒரு வருஷத்துக்கும் மேலாகுது"
பீடர்ச்பர்கில் வழக்குரைஞராக  இருக்கும்  ஸ்க்வோர்த்சோவ்  , பேசிக்கொண்டிருந்தவனைக்  கவனித்தார், கிழிந்து தொங்கிக்கொண்டு இருந்த அவனது கரு நீல ஓவர்கோட் , குடித்துக் குடித்து வீங்கிய முகம், மப்பேறிய கண்கள்கன்னம் முழுக்க சிவப்புத திட்டுகள், அவனை இதற்கு முன் எங்கேயோ பார்த்தது போல் இருந்தது.

"இப்போது எனக்கு கலுகா மாகாணத்தில் ஒரு வேலை கிடைச்சிருக்கு", பிச்சைக்காரன் பேசினான், "ஆனால் அங்கு போக என்னிடம் வசதி இல்லை. பெருந்தன்மையுடன் எனக்கு உதவுங்கள். கேட்கறதுக்கு எனக்கு வெட்கமாக இருக்கு. இருந்தாலும் சூழ்நிலை அப்படி செய்யத் தூண்டுது.   "

அவனது காலணிகளைக் கவனித்தார், ஒன்று சிறிதாக செருப்புப் போல இருந்தது, அடுத்தது பெரியதாக பாதணியாக இருந்தது, இப்போது உடனடியாக நினைவுக்கு வந்தது. 

"கவனி, நேற்றுக்கு முந்தைய நாள் உன்னை நான் சதோவாய் வீதியில் பார்த்தேன்" ,அவர் பேச ஆரம்பித்தார், "அப்போ  நீ பள்ளி ஆசிரியர் என்று சொல்லவில்லை !  மாணவன் என்று சொன்னாய், உன்னை கல்லூரியிலிருந்து நீக்கி விட்டார்கள் என்று சொன்னாய். ஞாபகம் இருக்கா? "

"இல்லை..... அப்படி இருக்க முடியாது!", குழப்பத்தில் உளறினான்.

"நான் பள்ளி ஆசிரியர் தான். நீங்க விரும்பினால் நிரூபிக்க   அதற்குண்டான ஆவணங்களை உங்களுக்கு காட்டுகிறேன்."



"பொய் சொல்றதை நிறுத்து. நீ ஒரு மாணவன் என்று சொன்னாய், நீக்கப்பட்டதற்கான காரணத்தைக் கூட என்னிடம் சொன்னாய். அதாவது ஞாபகமிருக்கா?"

ஸ்க்வோர்த்சோவ்  முகம் சிவந்தது வெறுப்புடன் முகத்தை பிச்சைக்காரனிடம் இருந்து திருப்பிக் கொண்டார்.

"அது தவறான முடிவு அய்யா" கோபமாகக் கத்தினான்.
"நீ தவறான  வழியில் பணம் சம்பாதிக்கிறாய். போலீசில் உன்னை பிடுச்சுக் கொடுக்கணும். நீ ஏழையாக இருக்கிறாய் பசியோடு இருக்கிறாய் அதற்காக வெட்கமில்லாமல் பொய் சொல்ல உனக்கு உரிமை இல்லை. "

வலையில்  அகப்பட்டுக் கொண்ட பறவையைப் போல கதவின் கைப்பிடியைப் பற்றிக் கொண்டு அவன் பரிதாபமாக அறையைச் சுற்றிப் பார்த்தான்.

"நான் பொய் சொல்லலை. நான் வேண்டுமானால் ஆவணங்களைக் காட்டுகிறேன்" உளறினான்.

"யார் நம்புவாங்க" இன்னும் ஆத்திரத்திலே இருந்தார்.
"ஆசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும் உள்ள மக்களது இரக்கத்தை தவறாகப் பயன்படுத்துகிறாய். கேவலம். மோசடி ." 


ஆத்திரத்தில் வேகமாகச சென்று பிச்சைக்காரனை வளைத்துப் பிடித்தார். அவன் சொன்ன பொய்கள் ஸ்க்வோர்த்சோவின் இரக்கமான வறியவர்களுக்கு இரங்கும் மென்மையான கருணை உள்ளத்தின் மேல் நடத்தப் பட்ட தாக்குதலாகவே அவர் கருதினார், தனது இந்த சுபாவத்தை அவர் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டு வந்தவர், அதனால் ஆத்திரம் பெருக்கெடுத்தது. அவனது பொய்கள் அவரால் ஏழைகளின் மேல் அவர் கொண்டிருந்த அனுதாபம், பரிவு, கனிவு ஆகியவற்றினைக் களங்கப் படுத்துவதாக இருந்தது. பிச்சைக்காரன் முதலில் சமாளித்துப் பார்த்தான் , சத்தியங்கள் செய்து பார்த்தான், பிறகு  வெட்கத்தால் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமைதியானான்.

"அய்யா " , தனது நெஞ்சில் கை வைத்துக் கொண்டு சொன்னான், "நான் பொய் சொன்னேன், நான் மாணவனோ ஆசிரியனோ அல்ல. எல்லாம் கதை. நான் ஒரு ரஷ்ய இசைக்குழுவில் இருந்தேன். நான் குடிகாரன் ஆனதால் என்னைத் துரத்தி விட்டனர். நான் என்ன செய்ய முடியும்? கடவுள் மேல் ஆணை என்னை நம்புங்கள். பொய் சொல்ல வில்லை என்றால் என்னால் வாழ முடியாது. நான் உண்மையைச் சொன்னால் யாரும் எனக்கு எதுவும் தர மாட்டார்கள்.உண்மை சொல்றதுனால நான் குளிராலும் பசியாலும் சாக வேண்டுமா? நீங்க சொல்றது சரி, ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நான் வேறு என்ன செய்ய?"

"நீ என்ன செய்யனும்னு என்னைக் கேட்கிறாயா? ", ஸ்க்வோர்த்சோவ்  சத்தமிட்டவாறே அவன் அருகில் சென்றார். "வேலை செய். அதைத்தான் நீ செய்யணும். வேலைக்குப் போ."


"வேலை செய்யணும். அது எனக்குத் தெரிந்தது தான். ஆனால் யார் எனக்கு வேலை கொடுப்பார்கள்?"

"முட்டாளே! நீ இளைஞன், ஆரோக்கியமாக இருக்கிறாய் வலிமையும் இருக்கிறது. தேவை இருந்தால் நீ வேலை தேடிக்கொள்ள வேண்டும். ஆனால் நீ சோம்பேறி குடிகாரன் சொகுசாக இருக்கப் பார்க்கிறாய், பானையில ஊத்துவதைப் போல வோட்காவைக் குடிக்கிறாய். உன்னுடைய ஊன் எலும்பெல்லாம் பொய் ஏறி இருக்கு. நீ பிச்சை எடுக்கவும் பொய் சொல்லவும் தான் லாயக்கு. நீ வேலை செய்ய ஆசைப் பட்டால் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கலாம், ரஷ்ய இசைக் குழுவில் வேலை பார்க்கலாம், பில்லியர்ட்- மார்க்கராக வேலை பார்க்கலாம், அதுல சம்பளம் வாங்கலாம், அதை எல்லாம் விட்டுட்டு நிற்கிறாய். எப்படி நீ உடல் உழைப்பு செய்யப் போகிறாய்? எனக்குத் தெரியும் வீட்டு வேலைக்கோ தொழிற்சாலையில் வேலைக்கோ நீ ஆக மாட்டாய் என்று. நீ ரொம்ப நாசூக்கா இருக்கணும்னு நினைக்கிறாய்."

"நீங்க என்ன சொல்றீங்களோ எல்லாம் உண்மை" , பிச்சைக்காரன் கசப்புடன் சிரித்தான் . "நான் எப்படி வேலைக்குப் போவது? கடையில் வேலை செய்ய வேண்டுமானால் சிறுவனாக இருந்த போதே போயிருக்கனும், இப்ப எனக்கு வயசாகிவிட்டது. வீட்டு வேலைக்கு என்னை யாரும் கூப்பிடமாட்டாங்க. நான் அந்த மாதிரித் தெரிய மாட்டேன். தொழிற்சாலைகளிலும் என்னால் வேலை செய்ய முடியாது. வணிகம் செய்ய வேணும்னா அதைப் பற்றித் தெரிந்து இருக்கணும். எனக்கு எதுவுமே தெரியாது. "

"முட்டாள் உன்னை நியாயப் படுத்திக்காதே. விறகு வெட்டுகிறாயா?"


"நான் மறுக்க மாட்டேன். ஆனால் அந்த வேலை செஞ்சுகிட்டு இருக்கிறவனுக்கு வேலை போயிடுமே?"


"ஒ எல்லா சோம்பேறிகளும் அப்படித்தான் சொல்லுவாங்க. எதைக் கொடுத்தாலும் நீ மறுக்கிறாய். நீ எனக்கு விறகு வெட்டித் தருவாயா?"


"நிச்சயமா!"
"சரி , பார்க்கலாம், நல்லது, நாம பார்க்கலாம்." ஸ்க்வோர்த்சோவ்  இப்போதும் கோபத்திலே இருந்தார், அவ்வளவாக அவரால் மகிழ்ச்சியடைய முடியவில்லை, தனது சமையல் காரியை அழைத்தார்.


"ஓல்கா, இங்க பாரு"  அவளிடம் சொன்னார், "இந்த ஆளை கூட்டீட்டுப் போய் பின்னால இருக்கிற தோட்டத்தில விறகு வெட்டச் சொல்லு". 

பிச்சைக்காரன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு தவிர்க்க முடியாமல் சமயல்காரியைப் பின்தொடர்ந்தான். அவன் பணத்துக்காகவோ பசியைப் போக்கவோ விறகு வெட்டச் சம்மதிக்கவில்லை அவமானத்தைத் தவிர்ப்பதற்காகத் தான் செய்கிறான் என்பது அவனது நடவடிக்கைகளில் இருந்து அறியமுடிந்தது. அவன் வோட்காவின் பாதிப்பில் இன்னும் இருக்கிறான் வேலை செய்ய சிறிதும் அவன் அக்கறைப் படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.  .

ஸ்க்வோர்த்சோவ்  உணவறைக்கு விரைந்து சென்று சாளரத்தின்  வழியே பார்த்தார். மரக்குடிலில்  நடப்பவற்றை அவரால் தெளிவாகக் காண முடிந்தது. பிச்சைக்காரனும் சமையல்காரியும் மரக்குடிலுக்கு  பனியால் சேறான  பின் வழியாகச் செல்வதை அவர் கண்டார். ஒல்கா கோபமாகத் தன்னுடன் வருபவனைப் பார்த்தாள், விரைந்து தனது முழங்கையால் இடித்து தாளைத் திறந்தாள், கதவினை சடாரெனத் திறந்தாள்.

"அவள் காப்பி குடிச்சிட்டு இருந்த போது குறுக்கிட்டோமென்று  நினைக்கிறேன் " தனக்குள் சொல்லிக் கொண்டார். "என்ன ஜென்மம்  அவள்"

கபட ஆசிரியனாகவும் கபட மாணவனாகவும் இருந்த பிச்சைக்காரன், மரத்துண்டுகளின் மேல் அமர்ந்து தனது கைகளில் கன்னத்தைத் தாங்கிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்து இருப்பதையும் கண்டார்.

சமையல்காரி கோடரியை அவன் கால்களுக்கு அருகே வீசினாள், ஆத்திரத்துடன் நிலத்தில் துப்பினாள், , அவள் அவனைத் திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்று அவளது உதடுகளின் துடிப்பிலிருந்து தெரிந்தது.

பிச்சைக்காரன் ஒரு மரக் கட்டையை மெதுவாக இழுத்தான், கால்களுக்கு நடுவில் நிறுத்தினான், நம்பிக்கையே இல்லாமல் கோடரியைத தூக்கினான். மரக் கட்டை நழுவிக் கீழே விழுந்தது. பிச்சைக்காரன் மரக் கட்டையைத  தன்  பக்கம் இழுத்தான், உறைந்து போன தனது கைகளின் மீது ஊதினான்கோடரி விழுந்து விரல்களைத் துண்டாக்கிவிடுமோ காலணி மீது விழுந்து விடுமோ என்று அச்சங் கொண்டவனைப்  போல எச்சரிக்கையுடன் இழுத்து எடுத்தான், மீண்டும் மரக்கட்டை நழுவி விழுந்தது.

ஸ்க்வோர்த்சோவின் கோபம் இப்போது தணிந்து இருந்தது. வேதனைப் பட்டார், கையாலாகாத குடிகாரனை,  இயலாத ஒருவனை குளிரில் கடுமையான வேலை செய்யச் சொல்லி விட்டோமோ என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தார்.

"கவலைப்படாதே .. அவனைச் செய்ய விடு. ", நினைத்துக் கொண்டார், "அவனது நல்லதுக்குத் தானே செய்யச் சொன்னேன் ".
ஒரு மணி நேரம் கழித்து ஒல்கா வந்தாள், "விறகு  வெட்டியாச்சு. " என்றாள்.

"இப்ப அவனுக்கு அரை ரூபிளைக் கொடு", ஸ்க்வோர்த்சோவ்  சொன்னார், "அவன் விரும்பினான் என்றால் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வந்து விறகு வெட்டச் சொல்லு. அவனுக்கு இங்கே வேலை இருக்கு".

அவனால் நேராக நிற்க முடியாவிட்டாலும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வந்து விறகினை வெட்டி அரை ரூபிளை வாங்கிக் கொண்டு சென்றான். 

அதிலிருந்து அவன் அடிக்கடி அங்கு வேலைக்கு வந்தான். அவனுக்கென்று அங்கு வேலை காத்துக் கொண்டு இருந்தது. சில நேரங்களில் அவன் கொல்லைப் புறத்தில் பனிச் சேற்றினை சுத்தப் படுத்துவான், மரக்குடிலைக் கூட்டுவான், கம்பளிகளையும் மெத்தைகளையும் துவைப்பான். அவனுக்கு எப்போதும் முப்பதில் இருந்து நாற்பது கொபெக்குகள் கிடைக்கும். ஒரு முறை அவனுக்கு பழைய கால் சட்டை ஒன்றும் வழங்கப் பட்டது.

சில நாள் கழித்து ஸ்க்வோர்த்சோவ்  மரச் சாமான்களை கட்டித் தூக்கி வண்டியில் கொண்டு செல்ல அவனைப் பயன் படுத்தினார். அப்போதெல்லாம் அவன் சுரத்தே இல்லாமல் மரச் சாமான்களைத் தொடக் கூட அச்சப் பட்டான், அமைதியாக இருப்பான் . தொங்கிய தலையுடன் மரச் சாமான்களை வண்டியில் பின்தொடர்வான். வேலை செய்பவன் போலக் கூடக் காட்டிக் கொள்ள மாட்டான். வெறுமனே குளிரில் நடுங்கிக் கொண்டு இருப்பான். முன்பொரு காலத்தில் எதோ ஒரு சீமானால் அணியப் பட்டுக் கிழிந்து அவனால் உடுத்தப் பட்டு இருக்கும் ஓவர் கோட்டைப் பார்த்தும் அவனது செயலின்மையைப் பார்த்தும் வண்டியில் இருப்பவர்கள் சிரிப்பார்கள், அவனோ இதையெல்லாம் கண்டு குழப்பத்தில் இருப்பான்.
மரச் சாமான்களை அனுப்பி வைத்த பின் ஸ்க்வோர்த்சோவ்  அவனைக் கூப்பிட்டு அனுப்பினார்.
"என்னுடைய வார்த்தைகள் உன் மீது எப்படி மாற்றத்தை ஏற்படுத்தியது பார்த்தாயா", என்று ஒரு ரூபிளைக் கொடுத்தார். "இது உன்னுடைய வேலைக்கு. நான் கவனிச்சேன் நீ வேலை செய்யறதிலே ஈடுபாடே இல்லாமல் இருக்கிறாய். சரி உன் பேருதான் என்ன?"
"லஷ்கோவ்"
"நான் உனக்கு இன்னும் கடினம் இல்லாத ஒரு வேலை கொடுக்கப் போகிறேன். லஷ்கோவ், உனக்கு எழுதத் தெரியுமா?"
"தெரியும், அய்யா"
"அப்படீன்னா உனக்கு ஒரு கடிதம் தருகிறேன் அதைக் கொண்டு போய் என் நண்பர் ஒருவரிடம் கொடு. அவர் உனக்கு படி எடுக்கும் வேலை தருவார். வேலை செய். குடிக்காதே. நான் சொன்னதை மறந்து விடாதே. போயிட்டு வா". விடை கொடுத்தார்.
ஸ்க்வோர்த்சோவ்  இப்போது திருப்தியானார், ஒருவனை நல்வழிப் படுத்தியதாகத் திருப்தி கொண்டார். லஷ்கொவின் தோளில் தட்டிக் கொடுத்தார், பிரியும் போது கை கூடக் குலுக்கினார்.
லஷ்கோவ் கடிதத்தை வாங்கிக் கொண்டு விடை பெற்றான், அதன் பிறகு அவன் அங்கு வேலைக்கு வரவில்லை.


இரண்டு ஆண்டுகள் கழிந்தது. ஒரு நாள் ஸ்க்வோர்த்சோவ்  நாடகம் பார்க்க நாடகக் கொட்டகையில் சீட்டு வாங்க நின்று கொண்டு இருந்தார், அப்போது அவருக்கு அருகில்  ஆட்டுத் தோலாலான கழுத்துப் பட்டையையும் பூனைத் தொப்பியையும் அணிந்து இருந்த குள்ளமான ஒருவனைக் கவனித்தார். அவன் ஒரு சீட்டு வாங்கிக் கொண்டு அதற்குண்டான பணத்துக்கு  கொபெக்குகளைச் செலுத்தினான்.


"லஷ்கோவ், நீயா இது?" ஸ்க்வோர்த்சோவ்  கேட்டார். அவரால் அடையாளம் காண முடிந்தது அவன் அவரது முன்னாள் விறகு வெட்டி தான் என்று. 

"எப்படி இருக்கிறாய். எல்லாம் நல்லபடி இருக்குதா?" 
"நல்லா இருக்கேன். இப்போ நான் ஒரு நோட்டரி அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். முப்பத்தி ஐந்து ரூபிள்கள் சம்பாதிக்கிறேன்"


நல்லது கடவுளே. அது தான் மூலதனம். உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன் லஷ்கோவ். உனக்குத் தெரியுமா நீயும் ஒரு வகையில் எனக்கு ஞான மகன் தான்னு. உன்னைச் சரியான வழியில் கொண்டு பொய் விட்டது நான் தான். 
உனக்கு நினை விருக்கா உன்னை கடுமையா திட்டித் திருத்தியது நான் தான்னு. நீ ஏறக்குறைய புதைந்தே போயிருந்தாய். எப்படியோ நல்லது நடந்ததே, என் வார்த்தைகளை மதிச்சதுக்கு உனக்கு நன்றி". 
"நன்றி அய்யா", லஷ்கோவ் சொன்னான், "அன்றைக்கு உங்களை நான் பார்க்கவில்லை என்று சொன்னால் இன்னும் என்னை ஆசிரியன் என்றோ மாணவன் என்றோ தான் சொல்லிக் கொண்டு இருந்திருப்பேன். ஆமாம், உங்கள் வீட்டில் தான் நான் காப்பாற்றப் பட்டு இருக்கிறேன். புதை குழியிலிருந்து வெளிப்பட்டு இருக்கிறேன். "
"எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்"
"உங்களது கருணையான வார்த்தைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி. அன்றைக்கு நீங்கள் என்ன சொன்னீங்களோ அது ரொம்ப அருமை. நான் உங்களுக்கும் உங்களது சமையல்காரிக்கும் கடமைப் பட்டு இருக்கிறேன்.  பெரிய மனசு கொண்ட அந்தப் பெண்ணை, கடவுள் ஆசீர்வதிக்கட்டும். நீங்கள் அன்றைக்கு என்னிடம் சொன்னவைகளுக்காக நான் என் ஆயுள் முழுக்க உங்களை மறக்க முடியாது. ஆனால், உங்களது சமையல்காரிதான் என்னை முழுதாக மாற்றியது. "
"எப்படி?"

"ஏன்னா , நான் விறகு வெட்ட உங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவள் இப்படி ஆரம்பிப்பாள், ' ஒ குடிகாரா, பரிதாபத்துக்கு உரிய மனுஷா..சாவு உன்னைக் கொண்டு போகட்டும்'. அப்புறம் அவள் என் முன்னால்  உட்கார்ந்து கொள்வாள், துக்கத்துடன் என் முகத்தைப் பார்த்து அழுவாள், 'அதிர்ஷ்டங் கெட்டவனே, இந்த உலகத்தில் உனக்கு ஒரு சந்தோசமும் இல்லை. நரகத்துல எரிக்கப் படுவாய் , பாவப்பட்ட குடிகாரா, ஏழ்மைப்  பட்டவனே    ' ,  இந்த மாதிரியே அவள் சொல்வாள். அவள் எத்தனை முறை வேதனைப்  பட்டாள் என்றும் என் மீது எவ்வளவு கண்ணீரைக் கொட்டினாள் என்றும் கணக்கிட  முடியாது. ஆனால் என்னை என்ன பாதிச்சுதுன்னா -- அவள் எனக்காக விறகைப் பிளந்து போட்டதுதான். அய்யா உங்களுக்குத் தெரியாது ஒரு விறகைக் கூட நான் பிளக்க வில்லை. எல்லாம் அவளே செய்தாள்.   அப்படித்தான் அவள் என்னைக் காப்பாற்றினாள், அப்படித்தான் நான் மாறினேன். அவளைப் பார்த்துத் தான் நான் குடிப்பதை நிறுத்திக்  கொண்டேன்அதற்குமேல் என்னால் விளக்க முடியாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் அவளது பெரிய மனசும் பெருந்தன்மையான நடவடிக்கையும் தான் எனக்குள் ஒரு நல்ல மாற்றத்தைக்  கொண்டு வந்தது.அவளை நான் மறக்கவே முடியாது…… சரி நேரமாச்சு….. இப்ப நிகழ்ச்சி ஆரம்பிச்சிடுவாங்க.


லஷ்கோவ் தலை தாழ்த்தி  விடைபெற்று அரங்கினுள் சென்றான்.



1 comment:

  1. நெஞ்சை வருடும் ஒரு கதை.

    வழிகாட்டிகளை விட அடுத்தவர் துயரத்தைத் தாங்கிக் கொண்டவர்களை மாத்திரம் மனது மறப்பதில்லை

    ReplyDelete