Бог правду Bидит, да Hе Cкоро Cкажет:கடவுளுக்கு எல்லாம் தெரியும்; ஆனால் எதையும் செய்ய மாட்டார்





மூலம் : லியோ டால்ஸ்டாய் 
தமிழில் : மா. புகழேந்தி 

விளாதிமிர் நகரத்தில் இவான் த்மிற்றிச் அக்சிநோவ் என்ற இளம் வணிகன் வசித்து வந்தான். அவனுக்கு சொந்தமாக இரு கடைகளும் ஒரு வீடும் இருந்தது. 

அக்சிநோவ் வேடிக்கையான, அழகான, சுருள் முடி கொண்ட பாடுவதில் விருப்பமுள்ள இளைஞன். 

அவன் வளரிளம் பருவத்தில் இருந்தபோது குடித்து விட்டு வம்பு தும்புகளில் ஈடுபட்டு வந்தான், திருமணத்திற்குப் பின் குடிப்பதை சுத்தமாக விட்டு விட்டான், எப்போதாவது தவிர. 

ஒரு கோடையில் அவன் நிஷ்னி சந்தைக்கு புறப்பட்டு குடும்பத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டு இருந்தான், அப்போது அவன் மனைவி  அவனிடம் சொன்னாள் "இன்று புறப்பட வேண்டாமே! உங்களைப் பற்றி நான் ஒரு கெட்ட கனாக் கண்டேன்" 

அக்சிநோவ் சிரித்துவிட்டுச் சொன்னான், "நான் அங்கே போகும் போதெல்லாம் நீ அச்சமடைகிறாய், அங்கு எந்த கவலையுமில்லாமல் நான் சென்று வருகிறேன் பார்."

அவன் மனைவி சொன்னாள் "எதுக்கு பயந்தேன் என்று தெரியாது! நான் சொல்றதெல்லாம் என்னன்னா நான் கண்டது கெட்ட கனவு. நீங்கள் பட்டணத்திலிருந்து திரும்பி உங்கள் தொப்பியைக் கழற்றிய போது உங்கள் முடியெல்லாம் வெளுத்து இருந்ததைப் பார்த்தேன்."

அக்சிநோவ் வாய் விட்டுச் சிரித்தான், "அது தான் அதிர்ஷ்டத்துக்கு அறிகுறி . நான் சந்தைக்குப் போய் என்னுடைய பொருட்களை விற்க வில்லை என்றால் உனக்கு பரிசுப்பொருட்களை எப்படி வாங்குவது?"

அதன் பிறகு அவன் குடும்பத்தாரிடம் விடை பெற்று புறப்பட்டுச் சென்றான். 
அவன் பாதி வழியில் அவனுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த இன்னொரு வணிகனைச் சந்தித்தான். அவனுடன் சேர்ந்து ஒரு சத்திரத்தில் தங்கமுடிவு செய்தான். இருவரும் சேர்ந்தே தேநீர் அருந்தினர். இரவு அடுத்தடுத்த அறைகளில் தங்கினர். 

இரவு நேரமாகித் தூங்குவதும் குளிர்கொண்ட அதிகாலையில் பயணம் செய்வதும் அக்சிமொவின் பழக்கமாக இருந்தது. அதனால் அவன் வண்டியோட்டியை விடிவதற்கு முன்னரே எழுப்பி குதிரைகளை வண்டியில் பூட்டச்சொன்னான். 

அதன்பின்னர் அவன் சத்திரத்தின் முதலாளியின் வீட்டுக்குச் சென்று (முதலாளி சத்திரத்தின் பின்னால் வசித்து வந்தான்) தங்கியதற்கான கட்டணத்தைச் செலுத்தி விட்டு பயணத்தைத் தொடர்ந்தான். 

இருபத்தி ஐந்து மைல்கள்  சென்ற பின்பு  குதிரைகளுக்கு தீவனம் போட நிறுத்தினான். அருகிலிருந்த விடுதிக்குச் சென்று தேநீர் போட அடுப்பினில் தீயிடச் சொல்லிய பின் தனது கிதாரை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். 

திடீரென  மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட  குதிரை வண்டி மணிகள் ஒலித்தபடி வந்து நின்றது அதிலிருந்து ஓர் அலுவலரும் இரண்டு காவலர்களும் இறங்கினர். 

அலுவலர் அக்சிநோவிடம் வந்து எங்கிருந்து வருகிறாய் எப்போது வந்தாய் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தார். அக்சிநோவ் அனைத்துக்கும் பதில் சொன்னான், பிறகு கேட்டான், "என்னோடு சேர்ந்து நீங்கள் தேநீர் அருந்தலாமே?". ஆனால் அலுவலர் மீண்டும் அவனைக் கேள்விகளால் குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பித்தார். "நேற்றிரவு எங்கே தங்கினாய்? தனியாகத் தங்கினாயா? வேறு ஒரு வணிகருடன் தங்கினாயா? இன்று காலை அந்த வணிகனைப் பார்த்தாயாஏன் விடிவதற்கு முன் புறப்பட்டு வந்தாய்?"

 எதற்கு இதையெல்லாம் கேட்கிறார்கள்  என்று அக்சிநோவ் ஆச்சரியப் பட்டான், அனால் என்ன நடந்தது என்று ஒன்று விடாமல் சொன்னான், அப்புறம் திருப்பிக் கேட்டான் " நான் என்ன திருடனா கொள்ளைக்காரனா எதுக்கு இதையெல்லாம் என்னிடம் கேட்கிறீர்கள்,  நான் என் வியாபார விஷயமாக போய்க் கொண்டு இருக்கிறேன் இந்தக் கேள்வியெல்லாம் என்கிட்டே கேட்கவேண்டிய அவசியம் இல்லை." 

அலுவலர் காவலர்களை அழைத்தார், "நான் தான் இந்த மாவட்டத்து காவல்துறைத் தலைவன், நேற்று உன்னுடன் தங்கிய வணிகன் கழுத்து அறுபட்டு இறந்து  கிடந்தான். உன்னுடைய உடைமைகளை நான் சோதனை போட வேண்டும்."

அவர்கள் அவன் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அவனது பைகளைச் சோதனை போட்டனர். அப்போது அலுவலர் அவனது ஒரு மூட்டையிலிருந்து ஒரு கத்தியை எடுத்தார். "யார் கத்தி இது?" சத்தமிட்டார். 
அக்சிநோவ் பார்த்தான், ரத்தம் தோய்ந்த கத்தி, அவன் கலவரமடைந்தான். 
"எப்படி கத்தியில் ரத்தம் படிந்தது ?"

அக்சிநோவ் பதில் சொல்ல முயன்றான் அனால் ஒரு வார்த்தை கூட வரவில்லை பிதற்ற ஆரம்பித்தான், "அது என்னுடையதல்ல" 
இப்போது காவல் அலுவலர் பேசினார் " இன்று காலை அந்த வணிகர் தனது படுக்கையில் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார். உன்  ஒருவனால்   தான் அதைச் செய்து இருக்க முடியும். அந்த வீடு உள்புறம் தாழிடப்பட்டு இருந்தது. வேறு யாரும் அங்கு இல்லை. இங்கே ரத்தம் படிந்த கத்தி இருக்கிறது, உன் வெளுத்துப்போன முகம் உன்னைக் காட்டிக் கொடுக்கிறது. சொல்லு எப்படி அவனைக் கொன்றாய்? எவ்வளவு பணம் திருடினாய்? "

அக்சிநோவ் சத்தியம்  செய்தான் தான் அதைச் செய்யவில்லை என்று, தேநீர் அருந்திய பின்பு அந்த வணிகனைப் பார்க்கவில்லை என்று சொன்னான், தன்னுடைய எட்டாயிரம் ரூபிளைத் தவிர வேறு பணம் இல்லை என்றும் சொன்னான். கத்தி அவனுடையதல்ல என்றும் சொன்னான். ஆனால் அவனது குரல் உடைந்து போயிருந்தது, முகம் வெளுத்துப் போயிருந்தது, அச்சத்தாலும் குற்றச்சாட்டை எதிர் கொண்டதாலும் தடுமாறினான்.

அலுவலர் காவலர்களை அக்சிநோவைக் கைது செய்து வண்டியில் ஏற்றச்  சொன்னார். அவனது கால்களைக் கட்டி வண்டியில் காவலர்கள்  ஏற்றும் போது அக்சிமோவ் சிலுவையிட்டுக் கொண்டு அழுதான். அவனது பொருட்களும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது  அருகிலிருந்த  நகரத்துக்கு கொண்டு செல்லப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 

விலாதிமிரில் அவனது நடவடிக்கைகள் பற்றி விசாரணை மேற்கொள்ளப் பட்டது. முன்பெல்லாம் அவன் குடித்து விட்டு தகராறு  செய்பவன் தான் ஆனால்  நல்ல மனிதன் என்று சக வணிகர்களிடமிருந்தும் உள்ளூர் வாசிகளிடமிருந்தும் தெரிய வந்தது. 

வழக்கு விசாரணைக்கு வந்தது; ரியாசான் வணிகரைக் கொன்று இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபில்களைத் திருடியதாக அவன் மீது குற்றம் சுமத்தப் பட்டது. 
அவன் மனைவி நம்பிக்கையற்றுப்  போனாள்எதை  நம்புவது என்று தடுமாறினாள்; அவனது குழந்தைகள் சின்னஞ் சிறியவர்களாக இருந்தார்கள், ஒன்று தாயின் இடுப்பில் இருந்தது. அவைகள் அனைத்தையும் கூட்டிக் கொண்டு அவன் சிறையில் இருந்த நகரத்துக்கு அவள் போனாள். முதலில் அவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, நீண்ட நேரக் கெஞ்சல்களுக்குப் பிறகு அவளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. சிறையின் சீருடையில் விலங்கிட்டு திருடர்களுடனும்  குற்றவாளிகளுடனும் அடைபட்டுள்ள தனது கணவனைக் கண்டதும் மயங்கி விழுந்தாள். நீண்ட நேரத்துக்குப் பின் சுய நினைவுக்கு வந்தாள். பிறகு தனது குழந்தைகளை அவனுக்கு அருகில் கூட்டிச்சென்று அமர்ந்தாள். வீட்டில் நடந்துகொண்டு இருப்பதைப் பற்றி அவனிடம் பேசினாள். அவனுக்கு என்ன நடந்தது என்று கேட்டாள். அவளிடம் நடந்ததைச் சொன்னான்,"இப்போது என்ன செய்வது?" கேட்டாள்.

"ஜார் மன்னனுக்கு கருணை மனு அனுப்பலாம் ஓர் அப்பாவி பாதிக்கப் படக் கூடாது."

அவன் மனைவி  சொன்னாள் தான் ஜார் மன்னனுக்கு  ஏற்கனவே அனுப்பி அது ஏற்கப்படவில்லை என்றாள்.

அக்சிநோவ் பதில் கூறவில்லை தலையைக் கவிழ்ந்து கொண்டான். 
அவன் மனைவி சொன்னாள் "நான் சொன்னேனல்லவா கெட்ட கனவைப் பற்றி உங்களது தலை முடி வெளுத்ததாக. கேட்காமல் புறப்பட்டீர்களே." தலையைக் கோதியபடியே கேட்டாள் "அன்பே உண்மையைச் சொல்லுங்கள், நீங்க அதைச் செய்யவில்லையா?"

"சே! நீ கூட என்னை நம்பலையா?" , அக்சிமோவ் முகத்தை மூடிக்கொண்டு தேம்பினான். அப்புறம் ஒரு காவலன் வந்தான் மனைவியும் குழந்தைகளையும் போகச் சொன்னான், அக்சிமோவ் தனது குடும்பத்தாருக்கு கடைசியாக விடைகொடுத்தான். 

அவர்கள் போன பின்பு அக்சிமோவ் நடந்தவைகளையும் பேசப்பட்டவைகளையும் அசை போட்டான். மனைவி கூடத் தன்னை சந்தேகிக்கிறாள் . தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் "கடவுளுக்கு மட்டுமே உண்மை தெரியும்! அவரிடம் மட்டுமே நாம் முறையிடமுடியும்! அவரிடம் தான் நாம் கருணையை எதிர் பார்க்கலாம்!"

அதற்குப் பிறகு அவன் எந்த விண்ணப்பமும் எழுத வில்லை நம்பிக்கை அற்றுப் போனான் கடவுளை வேண்ட ஆரம்பித்தான் 

அக்சிநோவுக்கு கசையடி  தண்டனை கொடுக்கப் பட்டது, சுரங்கத்து வேலைக்குப் பணிக்கப் பட்டான். அடிபட்ட காயங்கள் ஆறியதும் மற்ற கைதிகளுடன் சைபீரியாவுக்கு நாடு கடத்தப் பட்டான். 

இருபத்தியாறு ஆண்டுகள் அவன் சைபீரியாவில் தண்டனையை அனுபவித்தான். அவனது தலை முடி வெண் பனியைப்  போல் மாறியிருந்தது தாடி நீண்டு வளர்ந்து வெளுத்து இருந்தது. அவனது அனைத்து மகிழ்ச்சியும் அவனை விட்டுப் போயிருந்தது, கூன் விழுந்திருந்தது, மெதுவாக நடந்தான், குறைவாகப் பேசினான், சிரிப்பதே  இல்லை, எப்போதும் கடவுளை வேண்டிக் கொண்டே இருந்தான். 

சிறை வாழ்வில் அவன் காலணிகளைச் செய்யக் கற்றுக் கொண்டான், அதன் மூலம் சிறிது வருமானம் ஈட்டினான், அதில் அவன் துறவிகளின் வாழ்க்கை (The lives of the Saints :Жития святых )  என்ற நூலை வாங்கினான். போதுமான வெளிச்சம் சிறையில் இருந்த போதெல்லாம் இந்த நூலைப் படித்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயத்தில் பைபிள் படித்தான். பக்திப் பாட்டு பாடினான். அவனது குரல் இப்போதும் இனிமையாகவே இருந்தது. அவனது பெருந்தன்மையை சிறை அலுவலர்கள் மதித்தார்கள் சக கைதிகள் அவனை விரும்பினார்கள் அவனை தாத்தா என்றும் துறவி என்று அழைத்தார்கள். ஏதேனும் சிறை அலுவலர்களிடம் முறை இட வேண்டி வந்தாலும் சக கைதிகளுக்குள் தகராறுகள் வந்தாலும் தீர்ப்புக் காக அவனிடம் வந்தார்கள். அவர்கள் சார்பில் அக்சிமோவ் பேசுவார் . 
அவரது குடும்பத்தைப் பற்றி எந்த ஒரு செய்தியும் அவருக்கு வரவில்லை, அவரும் அவர்கள் எல்லாம் உயிரோடு இருக்கிறார்களா என்று கூட தெரிந்து இருக்கவில்லை. 

ஒரு நாள் புதிதாக தண்டனை அடைந்த குற்றவாளிகள் சிறைக்கு வந்து சேர்ந்தார்கள். பழைய கைதிகள் அன்றைய மாலையில் புதிய கைதிகளைச் சுற்றிக் கொண்டு எந்த கிராமத்திலிருந்து எந்த நகரத்திலிருந்து வருகிறீர்கள் எதற்கு தண்டிக்கப்பட்டீர்கள் என்று விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். எல்லோரோடும் அமர்ந்து அக்சிமொவும் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுக் கொண்டு இருந்தார். 

ஒரு புதிய கைதி உயரமாகவும் திடகாத்திரமாகவும் தனது அறுபதாவது வயதிலிருந்தவன், தனது சாம்பல் நிறத் தாடியினை தடவியபடி சொல்லிக்கொண்டு இருந்தான். 

"நண்பர்களே நான் ச்லேட்ஜில் பூட்டப்பட்டு இருந்த குதிரையை அவிழ்த்துக்கொண்டு இருந்த போது திருட்டுக் குற்றச் சாட்டுக்காக கைது செய்யப் பட்டேன். " என்றான். "நான் அவசரமாக வீட்டுக்குப் போகனும் என்பதுக்குத்  தான் அவிழ்த்தேன் பிற்பாடு விட்டுவிடுவேன் அப்படீன்னு சொன்னேன். அதல்லாமல் வண்டி ஓட்டி எனது நண்பன் தான். விடுங்கன்னு சொன்னேன். அவங்க முடியாதுன்னுட்டாங்க. திருடினேன்னு சொன்னாங்க. ஆனால் எங்க எப்பத் திருடினேன்னு அவங்க சொல்லலை.  ஒரு தடவை  தப்பு செஞ்சிருக்கேன் ரொம்ப நாள் முந்தியே  இங்கே வந்திருக்கணும், அனால் அப்பப் பிடிபடலை. இப்ப ஒண்ணுமே செய்யாததுக்கு  மாட்டிகிட்டேன். .......ஆ அதெல்லாம் பொய். நான் ஏற்கனவே சைபீரியாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் ரொம்ப நாள் இருக்கலை. "

"எங்கிருந்து வர்றீங்க?" யாரோ கேட்டார்கள்.

"விலாதிமிரில் இருந்து. என் குடும்பம் அங்கிருக்கு. என் பேரு மகர், எல்லாரும் என்னை செம்யோனிச் அப்படீன்னு கூப்பிடுவாங்க"

அக்சிமோவ்  தலையை உயர்த்தி கேட்டார், "அக்சிமோவ்  வணிகக் குடும்பத்தைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அவங்க இன்னும் உயிரோடு இருக்கிறார்களா ? "

"ஒ தெரியுமே. அவங்க எல்லாம் பணக்காரர்கள். ஆனாலும் அவங்க அப்பா  இங்க தான் சைபீரியாவுல இருக்கிறான். நம்மள மாதிரி அவனும் ஒரு பாவிதான் தாத்தா. ஆமா நீங்க எப்படி இங்க வந்தீங்க?"
அக்சிமோவ்  தனது  துரதிர்ஷ்டத்தப் பற்றிக் கூற விரும்பவில்லை.பெரு மூச்சு விட்டுக்கொண்டே சொன்னான் "எதோ என்னோட பாவத்துக்காக இங்கே இருபத்தி ஆறு வருஷமா இருக்கிறேன்." 

"என்ன பாவம்" மகர் செம்யோனிச் கேட்டான். 

ஆனால் அக்சிமோவ்  அதற்குமேல் எதுவும் சொல்லாமல் "சரி சரி எனக்கு என்ன கிடைக்கனுமோ அது கிடைச்சது!"  என்றார். ஆனால் புதியவனிடம் மற்ற கைதிகள் அக்சிமோவ் எப்படி சைபீரியாவுக்கு வந்தார் என்றும் யாரோ ஒருவன் ஒரு வணிகனைக் கொன்று விட்டு அக்சிமொவின் பொருட்களுக்குள் கத்தியை வைத்து விட்டு சென்று விட்டன என்றும் நியாயமே இல்லாமல் அக்சிமோவ் தண்டிக்கப் பட்டதைப் பற்றியும் சொன்னார்கள். 


இதைக் கேட்டதும் மகர் செம்யோனிச், அக்சிநோவைப் பார்த்தான், தனது காலைத் தானே  அடித்துக் கொண்டு வியந்து போய் சொன்னான் "ஐயோ இது ஆச்சரியம் , மெய்யாலுமே ஆச்சரியம் . ஐயோ எப்படி  உங்களுக்கு வயசாகீருச்சு பாருங்க தாத்தா " 

எல்லோரும் அவனைக் கேட்டார்கள் ஏன் ஆச்சரியப் படுகிறாய் என்று இதற்கு முன் அக்சிநோவைப் பார்த்து இருக்கிறாயா என்றும் கேட்டார்கள். ஆனால் மகர் செம்யோனிச் பதில் சொல்லவில்லை "இங்கு நாம் சந்தித்தது ஆச்சரியமே!" என்று மட்டும் சொன்னான். 

இந்த வார்த்தைகளிக் கேட்டதும் அக்சிமோவ் உணர்ந்து கொண்டார் மகர் செம்யோனிச் வணிகனைக் கொன்றவன் யாரென்று தெரிந்து இருப்பான் என்று ,"செம்யோனிச் இந்த செய்தியை நீ ஏற்கனவே தெரிந்து இருக்கிறாயா?  அல்லது என்னை நீ முன்னாலையே பார்த்து இருக்கிறாயா?" .

"கேட்டுத் தெரிஞ்சுக்கிரதுல என்ன பிரயோசனம், இந்த உலகம் முழுக்க வதந்திகள் தான் இருக்கு. நான் இதைப் பற்றிக் கேட்டு ரொம்ப காலம் ஆச்சு. என்ன கேட்டேனென்றே மறந்து போச்சு. "

"யார் கொன்றது என்று உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் " அக்சிமோவ் கேட்டார். 

மகர் செம்யோனிச் சிரித்துக் கொண்டே சொன்னான் " யார் பையில் கத்தியை கண்டு எடுத்தார்களோ அவன் தான் கொன்று இருக்க வேண்டும். வேற யார் வச்சா என்ன, உங்களுக்குத் தெரியாதா? அகப்படும் வரைக்கும் ஒருத்தன் திருடன் அல்லங்கிறது? யாரு கத்தியைக் கொண்டு போய் உங்க தலையணைக்கு கீழே இருக்கும் பையில் வைக்க முடியும்? உங்களை நிச்சயமா அந்த சத்தம் எழுப்பி விட்டு இருக்கும். "

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அக்சிமோவ் முடிவு செய்தார் அவன் தான் அந்த வணிகனைக் கொன்றவன் என்று. அவர் எழுந்து வெளியேறினார். அன்று இரவு முழுதும் அக்சிமோவ் உறங்காமல் விழித்து இருந்தார்.அவர் மிகுந்த துயரம் கொண்டார். எல்லா வகையான காட்சிகளும் அவர் மனக் கண் முன் தோன்றியது. அங்கே சந்தைக்குச் செல்லும் போது நடந்தது அவர்முன் தோன்றியது அவரது மனைவியின் முகத்தினைக் கண்டார். அவள் தன முன்னே இப்போது இருப்பதாக கண்டார், அவருக்கு முன்  அவளது கண்களும் முகமும் நின்றாடியது. அவள் பேசுவதாகவும் சிரிப்பதாகவும் தோன்றியது. அவர் தனது குழந்தைகளையும் கண்டார், பிரிந்த போது எப்படி இருந்தார்களோ அப்படியே இருப்பதாகக் கண்டார், ஒன்று கையில் எதையோ வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது, இன்னொன்று அவள் இடுப்பில் இருந்தது. 
 தான் எப்போதும் இளமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தததாக இப்போது நினைத்துப் பார்த்தார், கைது செய்யப்படும் போது விடுதியில் தான் கிதார் வாசித்துக் கொண்டு இருந்ததை நினைத்துப் பார்த்தார். கவலையில்லாமல் களித்த காலத்தை நினைத்துப் பார்த்தார். தன் மனதில் கட்சிகளாகப் பார்த்தார் தான் கசையடி பட்டதைப்  பார்த்தார்,  தன்னைச் சுற்றி நின்ற மக்கள், கை விலங்கு, சக கைதிகள், குற்றவாளிகள், இருபத்தியாறு ஆண்டுகால சிறை வாழ்க்கை, முன் கூட்டியே வந்த முதுமை. இந்த சிந்தனைகள் எல்லாம் அவரை வாட்டின, தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. 

இதெல்லாம் அந்த அயோக்கியனால் வந்தது. அக்சிமோவ் நினைத்துப் பார்த்தார். மகர் செம்யோநிசின் மேல் அவருக்குக் கோபம் பெருக்கெடுத்தது. அவனை பழி வாங்க வேண்டும் என்று துடித்தார், அதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்தார். அவர் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார். ஆனால்  அமைதி கிடைக்க வில்லை. அடுத்த நாள் மகர் செம்யோனிச்சை அவர் பார்க்கவேயில்லை. தவிர்த்தார். 

இரு வாரங்கள் ஓடியது. அக்சிமோவால் இரவில் தூங்க முடியவில்லை. கொடுமையாக இருந்தது. என்ன செய்வது என்று தவித்தார். 

ஒரு நாள் இரவு அவர் சிறைக்குள் நடந்து வந்து கொண்டு இருந்த போது கைதிகள் உறங்கும் இடத்தின் கீழே தளத்திலிருந்து  இருந்து மண் வந்து விழுந்து கொண்டு இருப்பதைக்  கவனித்தார். அங்கே நின்று அது என்ன என்று கவனித்தார். திடீரென மகர் செம்யோனிச் குழியிலிருந்து வெளிப்பட்டு திகைத்து நின்றான். கையும் களவுமாகப் பிடிபட்டதில் அவன் முகம் அச்சமுற்று இருந்தது. அக்சிமோவ் அதைக் கவனிக்காதது போல் அங்கிருந்து நகர முற்பட்டார். ஆனால் செம்யோனிச் அவரது கைகளைப் பற்றிக் கொண்டான். அப்போது அவன் சொன்னான் சுவற்றுக் அடியில் சுரங்கம்   தோண்டி தப்பிச் செல்ல வழி செய்து கொண்டு இருப்பதாகவும், தோண்டப் படும் மண்ணை காலணிகளில் போட்டு கைதிகளை அழைத்துச் செல்லும் போது மண்ணை வழியில் இறைத்து விடுவதாகவும் கூறினான். 
"கிழவா இதைப்பற்றி மூச்சு விடாதே, நீ கூட என்னுடன் தப்பித்து வந்து விடலாம், ஏதாவது உளறினாயானால் என்னைக் கொன்றே விடுவார்கள், ஆனால் அதற்கு முன் உன்னை நான் தீர்த்துக் கட்டிவிடுவேன்" என்றான். 
.

அக்சிநோவ் ஆத்திரத்தில் அதிர்ந்தார். அவனிடமிருந்து கையை உதறினார். "தப்பிச்செல்ல எனக்கு ஆசையில்லை. நீ என்னை கொல்ல வேண்டும் என்பது இல்லை. ஏற்கனவே நீண்ட காலத்துக்கும் முன்னாலேயே என்னைக் கொன்று விட்டாய்! என்ன செய்ய வேண்டு என்று நீ எனக்குச் சொல்லாதே கடவுள் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு வழிகாட்டுவார்.

அடுத்த நாள் கைதிகளை வேலைக்கு அழைத்துச் செல்லும் போது  எதோ ஒரு கைதி மண்ணை காலணி யிலிருந்து  கொட்டுவதை ஒரு காவலாளி கவனித்தான். 

சிறை சோதனை இடப்பட்டது. சுரங்கம் கண்டறியப்பட்டது. ஆளுநர் வந்து கைதிகளிடம் யார் தோண்டியது என்று விசாரணை மேற்கொண்டார் .  எல்லோரும் ஒன்றும் தெரியாது என்று சொன்னார்கள். தெரிந்தவர்கள் சொன்னால் மகர் செம்யோனிச்சை சவுக்கால் அடித்தே கொன்று விடுவார்கள். 

ஆளுநர் வந்தார். விசாரணை ஆரம்பம் ஆனது. 

ஆளுநர் அக்சிமொவிடம் திரும்பிக் கேட்டார், "நீங்கள் தான் இங்கு உண்மையான மனிதர், பெரியவர்கடவுள் மீது ஆணையாகக் கூறுங்கள் இதை யார் செய்தது?" 

மகர் செம்யோனிச் இது எதற்கும் சம்பந்தமே இல்லாதவன் போல நின்று கொண்டு இருந்தான். அக்சிமோவை அவன் கண்டு கொள்ளவே இல்லை. அக்சிமொவுக்கு உதடுகள் துடித்தது கைகள் நடுங்கின நீண்ட நேரம் அவர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் நின்றார். அவர் எண்ணினார், "எதற்கு அவனைக் காப்பாற்ற வேண்டும்? அவன் ஏன் வாழ்வையே சீரழித்தவன் தானே. செய்ததுக்கு அவன் அனுபவிக்கட்டும். நான் சொன்னால் அவனை அவர்கள் அடித்தே கொன்று விடுவார்கள், நான் அவனை தவறாகச் சந்தேகித்து இருந்தால், எந்த வகையில் நான் நல்லவன் ஆவேன்? "

"சரி பெரியவரே சொல்லுங்க , யார் சுவற்றுக்கு அடியில் சுரங்கம் தோண்டினார்கள்?" ஆளுநர் மீண்டும்  கேட்டார். 

அக்சிமோவ் , மகர் செம்யோநிசைப் பார்த்தார், "கடவுள் அதைச் சொல்ல வேண்டாமென்று எனக்கு ஆணை இட்டுள்ளார். நான் உங்கள் முன் நிற்கிறேன் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் உங்கள் கைகளில் என்னை ஒப்படைக்கிறேன் " 

ஆளுநர் என்னென்னமோ செய்து பார்த்தார் அக்சிமொவிடம் பதில் பெற முடியவில்லை. அந்தப் பிரச்னையை அத்தோடு விட்டு விட்டார்கள். 

அன்று இரவு அக்சிமோவ் படுக்கையில் படுத்து தூங்க முயன்று கொண்டு இருக்கும் போது, அவரது படுக்கையில் யாரோ வந்து அமர்ந்தார்கள். அது மகர் செம்யோனிச் தான் என்று இருளில் அவரால் அடையாளம் காண முடிந்தது. 

"இன்னும் என்னிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறாய்?" கேட்டார் அக்சிமோவ், " ஏன் வந்தாய்?"
மகர் செம்யோனிச் அமைதியாக இருந்தான். அக்சிமோவ் எழுந்து உட்கார்ந்தார், "என்ன வேணும் உனக்கு? போ இங்கிருந்து. இல்லாட்டி காவலாளிகளைக் கூப்பிடுவேன்"

மகர் செம்யோனிச் குனிந்து அக்சிமொவிடம் சொன்னான் "இவான் த்மிற்றிச் என்னை மன்னிக்கணும்."

"எதுக்கு" அக்சிமோவ் கேட்டார். 

"நான் தான் முன்னொரு நாளில் அந்த வணிகனைக் கொன்றேன். உன்னையும் கொல்ல இருந்தேன், ஆனால் எதோ சத்தம் கேட்டதாலே கத்தியை உன் பையில் வைத்து விட்டு ஜன்னல் வழியாகக் குதித்து ஓடிவிட்டேன்." 

அக்சிமோவ் அமைதியாக இருந்தார், என்ன சொல்வது என்று தெரியவில்லை. மகர் செம்யோனிச் படுக்கையில் இருந்து எழுந்து மண்டியிட்டுக் கெஞ்சினான், "இவான் த்மிற்றிச் என்னை மன்னியுங்கள். கடவுள் அருளால்  என்னை மன்னியுங்கள். நான் போய் என்னுடைய குற்றத்தை ஒத்துக்கொள்கிறேன். நீங்கள் விடுதலையாகலாம். வீட்டுக்குச் செல்லலாம்."

"இதை பேச உனக்கு எளிதாக இருக்கலாம். நான் இருபத்தியாறு ஆண்டுகளாக இங்கு நரக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போது நான் எங்கே போவதுஎன் மனைவி  இறந்து விட்டாள். என்னுடைய குழந்தைகளும் என்னை மறந்து விட்டார்கள். எனக்குப் போக்கிடம் இல்லை. "

மகர் செம்யோனிச் எழுந்து இருக்கவில்லை தலையைத் தரையில் முட்டி முட்டி அழுதான். "இவான் த்மிற்றிச் என்னை மன்னியுங்கள்" கதறினான். "என்னை சவுக்கால் அடிக்கும் போது கூட எனக்கு வலிக்கலை உங்களைப் பார்க்கும் போது வலி தாங்க முடியலை.   என் மீது உங்களுக்கு பரிதாபம் இருக்கு கருணை இருக்கு அதுனால தான் நீங்க என்னைக் காட்டிக்கொடுக்கலை. கடவுளே என்னை மன்னியுங்கள். எவ்வளவு பெரிய பாவி நான். " தேம்பித்தேம்பி அழுதான்.

அவன் அழுவதைப் பார்த்து அக்சிமொவும் கண்ணீர்விட்டார். "கடவுள் உன்னை மன்னிப்பார்" அக்சிமோவ் சொன்னார். "நானும் கூட உன்னை விட நூறு மடங்கு மோசமானவன் தான். "  அதைச் சொல்லும் போது அவரது இதயம் லேசானது. வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை விலக ஆரம்பித்தது. அதற்கும் மேல் அவர் அந்த சிறையை விட்டுச் செல்ல வேண்டும் என்று விருப்பப் படவில்லை. அவரது கடைசி மணித்துளிக்காகக் காத்து இருந்தார்.

அக்சிமோவ் எத்தனை முறை சொல்லியும் மகர் செம்யோனிச் கேட்கவில்லை. தான் செய்த கொலையை  அலுவலர்களிடம்  போய் ஒத்துக்கொண்டான் . ஆனால் விடுதலை ஆணை வந்தபோது அக்சிமோவ் ஏற்கனவே உயிரை விட்டு இருந்தார். 



3 comments:

  1. மிகச் சிறிய வயதிலேயே படித்து என் மனதில் நின்ற கதைகளில் இது மறக்கமுடியாத டால்ஸ்டாயின் படைப்பு.

    \\கடவுளுக்கு எல்லாம் தெரியும்\\
    என்றுதான் படித்த ஞாபகம்....!!
    \\ஆனால் எதையும் செய்ய மாட்டார்\\
    என்பது அனுபவத்தின் வழியா எனத்தெரியவில்லை

    வாழ்த்துக்கள்...தொடர்ந்து தொடர்கிறோம்

    பி.கு:-தயவு செய்து word verification-ஐ எடுத்துவிடவும்

    ReplyDelete
  2. என்னை மிகவும் கவர்ந்த இன்றையப் பதிவுகளில் இதுவும் ஒன்று என்பேன் . மிகவும் நேர்த்தியான எழுத்து நடையில் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete