Friday, March 11, 2011

Le Gueux : பிச்சைக்காரன்

Guy de Maupassant


 

மூலம் : கய் தே   மாப்பசான்

தமிழில் : மா. புகழேந்தி.

ற்போது துன்பத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில்  மகிழ்ச்சியான நாட்களையும் அவன் பார்த்திருக்கிறான்.

அவனின் பதினைந்தாவது வயதில்  வார்வில்லி நெடுஞ்சாலையில் எதோ ஒரு வண்டி செய்த விபத்தில் அவனது இரண்டு கால்களும் நசுக்கப்பட்டிருந்தன. அந்த நாள் முதல் அவன் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தான், சாலைகளிலும், வயல்வெளிகளிலும் ஊர்ந்து சென்றான், கைகளுக்கிடையில் ஊன்று கோல்களுடன்  நடப்பான், அவ்வாறு நடந்து நடந்து அவனது தோள்கள் காது வரை வந்துவிட்டன. அவனது தலை இரண்டு மலைகளுக்கு இடையில் சிக்கிய பாறைபோல் தெரிந்தது. 

சாக்கடை ஓரத்தில் கைவிடப்பட்ட குழந்தையாக அவன் இருந்த போது பாதிரியார் ஒருவரால் ஆல் செயின்ட்ஸ்  டே அன்று கண்டெடுக்கப்பட்டு ஞானஸ்நானம் செய்யப்பட்டான், அதனால் நிக்கோலஸ் டூஸ்சைன்ட் என்று பெயரிடப்பட்டு அறக்கட்டளைப் பணத்தால் வளர்க்கப் பட்டான், எந்தக் கல்வியும் அளிக்கப்படாமல் வளர்ந்தான், கடைக்காரன் ஒருவனால் வழங்கப்பட்ட பல கோப்பை பிராண்டி குடித்து முடமானான் (அது தனிக்கதை), அதன் பிறகு யாராலும் வரவேற்கப்படாத அகதியானான், அவனுக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று பிச்சை எடுக்கக் கையேந்துவது தான்.

ஒரு முறை த'அவாரி அம்மையார் தனது அரண்மனைக்கு அருகிலுள்ள கோழிப்பண்ணையின் பக்கத்தில் அவனுக்கு இடம் கொடுத்தாள்,   வைக்கோலால் செய்யப்பட பாயில் அவன் உறங்கினான். அவனுக்கு உணவு கிடைத்தே ஆக வேண்டுமென்ற போது அரண்மனையின் சமையலறையிலிருந்து அவனுக்கு சிறிது பழச்சாறும் கொஞ்சம் ரொட்டித் துண்டுகளும் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அம்மையார் அவனுக்கு தன் ஜன்னல் வழியே கொஞ்சம் காசையும் வீசுவாள். ஆனால் அவள் இப்போது இறந்துவிட்டாள். 

கிராமத்து மக்கள் எப்போதாவது கொஞ்சமாகக் கொடுத்தார்கள். எல்லோருக்கும் அவனை நன்கு தெரிந்திருந்தது. ஒவ்வொருவரும் நாற்பது ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் அவன் தனது ஊன்று கோல்களால்  இழுத்து இழுத்து நடந்து போவதைப் பார்த்துப் பார்த்துச் சலித்திருந்தார்கள். ஆனாலும் அவன் அங்கிருந்து வேறு  ஊருக்குப் போகவேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் அவனுக்கு இந்த உலகத்தில் இதை விட்டால் வேறு ஓர் இடம் தெரியாது. இந்த மூன்று அல்லது நான்கு கிராமங்களைத் தவிர அவன் தனது துயரமான வாழ்வில் வேறு எங்கும் சென்றதில்லை. தனக்குப் பழக்கப்பட்ட இந்த எல்லைக்குள் பிச்சை எடுக்கும் நடவடிக்கைகளை செய்து வந்தான். 

பார்வையை மறைத்து நிற்கும் மரக்கூட்டங்களுக்குப் பின்னரும் உலகம் இருக்கிறதா  என்பதைக் கூட அவன் அறிந்திருக்கவில்லை. அவன் அந்தக் கேள்வியைத் தன்னிடம் கூடக் கேட்டிருக்கவில்லை. வயலிலே வேலை செய்பவர்கள் தொடர்ந்து இவனைப் பார்த்து வெறுப்படைந்து வியந்து கேட்பதுண்டு, "ஏன் நீ இங்கேயே பிச்சைஎடுத்துக் கொண்டிருக்கிறாய்? வேறு எங்காவது போவது தானே?" என்று. ஆனால் அவன் நழுவி விடுவான். உலக அறிவே இல்லாத அவன் ஆயிரம் ஆயிரம் காரணங்களுக்காக அஞ்சினான், புது முகங்கள், தன்னைப்பற்றித் தெரியாதவர்கள், அவமானங்கள் செய்வோர் , கேலிகள் செய்வோர் , கிண்டல்கள் பேசுவோர் சாலையைக் கடக்கும் காவலர்கள், எல்லாரையும் கண்டு அஞ்சினான். இவை எல்லாவற்றையும் அவன் காணக் கூசினான், தவிர்த்தான், காவலர்களைக் காணும் போதெல்லாம் அவன் தேவையில்லாமல் உள்ளுணர்வு ஏற்படுத்தும் அச்சத்தால் புதர்மரைவிலோ தூண்களின் பின்னோ ஒளிந்து கொள்வான்.

தூரத்தில் காவலர்கள் வருவதை அவன் அறிந்தால், பகல் வெளிச்சத்தில் சீருடையில் அவர்களைப்பார்த்தால் தேவையற்ற அச்சத்தால் வளைக்குள் பதுங்கும் சிறு விலங்குபோல் நடுங்குவான். தனது ஊன்று கோல்களை வீசிவிட்டுத் தரையில் சுருண்டு படுத்துக் கொள்வான், எவ்வளவு சிறிதாகச் சுருங்க முடியுமோ அவ்வாறு, அவனது கந்தல் துணியோ  தரையோடு சேர்ந்து அவனை மூடியிருக்கும்.

அவன் காவலர்களுடன் எந்த பிரச்சனையையும் செய்ததில்லை. ஆனால் அவனது பயந்துகொள்ளும் உணர்வு அவனது ரத்தத்தில் ஊறியே இருந்தது. அதை அவன் அனேகமாக அவனது பெற்றோரிடத்திலிருந்து பரம்பரை நோயாகப் பெற்றிருக்க  வேண்டும். 

அவனுக்கு வேறு புகலிடம் இல்லை, தலைக்குமேல் கூரை இல்லை, எந்த உறைவிடமும் இல்லை. கோடையில் அவன் வெட்டவெளியில் தூங்கினான், குளிர்காலத்தில் பண்ணைகளில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து கொள்ளும் அற்புதத் திறமை கொண்டிருப்பான். அவன் தனது இடத்தை பிறர் அறியும் முன்னர் மாற்றிக்கொள்வான்.  அவனுக்கு பண்ணை வீடுகளில் உள்ள சந்து பொந்துகள் எல்லாம் அத்துபடி, ஊன்று கோல்களைப் பற்றிப் பற்றி நடந்து அவனது கைகள் பலம் கொண்டிருந்தன. தனது கைகளின் பலத்தால் தனது உடலை  உயரத்தில் தூக்கி மாடங்களில் ஏற்றிக்கொள்வான் . அங்கே அவன் நான்கு ஐந்து நாட்கள் ஒளிந்து கொள்வான். அதற்கும் முன் போதுமான உணவைச் சேர்த்துக் கொள்வான்.

அவன் வயல்வெளியின் விலங்கினைப் போல வாழ்ந்தான். அவன் மனிதர்களுக்கு நடுவே வாழ்ந்து வந்தான், ஆனால் ஒருவரையும் தெரிந்திருக்கவில்லை, யாரையும் விரும்பியிருக்கவில்லை, விவசாயக் கூலிகள் எல்லாம் இவனைப் பார்க்கும் போதெல்லாம் தங்களது நெஞ்சத்தில் வெறுப்பை உமிழ்ந்தார்கள். அவனை அவர்கள் 'ஆலயமணி' என்று அழைத்தார்கள். அவன் ஊன்று கோல்களால் நிற்பது சர்ச்சில் மணி இரு தூண்களுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருப்பதைப் போல இருக்கும்.

கடந்த இரண்டு நாட்களாக அவன் எதையும் உண்டிருக்கவில்லை. ஒருவரும் அவனுக்கு எதையும் கொடுத்திருக்கவில்லை. ஒவ்வொருவரின் பொறுமையும் தீர்ந்து விட்டிருந்தது. பெண்கள் அவனைத் தங்களது கதவருகே பார்த்தபோதெல்லாம் சத்தமிட்டு விரட்டினர்: "போ போ, அகதியே, நீ எதற்கும் லாயக்கில்லை, ஏன் மூணு நாளைக்கு முன்னால் தானே உனக்கு ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்தேன், இப்போ மறுபடியும் வருகிறாய்"

அவன் தனது ஊன்று கோள்களுடன் வேறு வீட்டுக்குத் திரும்பினாலும் அங்கேயும் இதே மாதிரி வரவேற்பையே பெற்றான்.


பெண்கள் எல்லோரும் தங்கள் வீட்டருகே நின்று கொண்டு தீர்மான மாக முழங்கினார்கள்: "வருஷம் முழுக்க இந்தச் சோம்பேறி நாய்க்கு  சோறு போட முடியாது!"
ஆனால் அந்தச் சோம்பேறி நாய்க்கு  ஒவ்வொரு நாள்ளும் உணவு தேவையாக இருந்ததே.

அவன் சோர்ந்து போனான், செயின்ட்-ஹிலேயிர், வார்வில்லி, லெஸ் பில்லீட்ஸ் ஆகிய எல்லா இடங்களிலும் அலைந்தாலும் ஒற்றைக் காசைக் கூடக் காண முடியவில்லை. அவனது ஒரே நம்பிக்கை டூர்நோலேஸ், ஆனால் அங்கே போக அவன் நெடுஞ்சாலையில் ஐந்து மைல்கல் நடக்க வேண்டும், ஆனால் இன்னொரு அடிக்கு நகரக் கூட முடியாமல் இருந்தான். அவனது வயிறும் சட்டைப்பையும் காலியாகவே இருந்தது, ஆனாலும் அவன் தனது பயணத்தைத் தொடங்கினான்.

அது டிசம்பர் மாதம், குளிர் காற்று வயல்களிலும், இலைகளற்ற கிளைகளிலும் வீசி ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அச்சமூட்டும் கார்முகில்கள் இருண்ட வானில் திரண்டிருந்தன. பிச்சைக்காரன் வலியுடன்   ஒவ்வொரு ஊன்று கோலாய் வைத்து நகர்ந்து மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்துக்கு ஒருமுறை சாக்கடையின் ஓரத்தில் அமர்ந்து ஒய்வு எடுத்தான். பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது, அவனது குழப்பமுற்ற மெல்லச் செயல்படும் மனம் ஒரே ஒரு சிந்தனையை மட்டும் கொண்டிருந்தது, சாப்பிடவேண்டும், ஆனால் எப்படி அவனுக்கு ஒன்றும் தெளிவாகவில்லை. மூன்று மணி நேரமாக அவன் வலிகொண்ட தனது பயணத்தைத் தொடர்ந்தான். கடைசியாக ஒரு கிராமத்தின் வெளியே வளர்ந்திருந்த மரங்களைக் கண்ணுற்றான், அது அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சியை ஊட்டியது.

அவன் அங்கு சந்தித்த முதல் மனிதனிடம் பிச்சை கேட்டான் அதற்கு அம்மனிதன் சொன்னான் :


"
ஒ நீ தானா மறுபடியும், கிழட்டு நாயே? உன்னை நாங்க தொலைக்கவே முடியாதா?"


அப்புறம் 'ஆலயமணி' தன்வழியே நடந்தான்.

ஒவ்வொரு கதவின் முன்னே அவன் நின்றபோதும் இதைப் போலவும் இதைவிடக் கடுமையாகவும் வசவுகளை  கேட்க வேண்டியிருந்தது. ஊர்முழுக்க சுற்றி வந்த பின்னரும் அரைக்காசு கூட அவனுக்குக் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் அவன் அருகிலுள்ள பண்ணைகளுக்குச் சென்றான், சேறான பாதைகளில் வருந்திக்கொண்டு முன்னேறினான், சோர்ந்து போனதால் தன்னுடைய ஊன்று கோல்களை அவனால் நகர்த்தக் கூட முடியவில்லை. ஒரே மாதிரியான வரவேற்பையே அவன் எங்கும் கண்டான். அது  ஒரு கொடுமையான காலம், குளிர் வாட்டிஎடுத்தது, கடுங்குளிரில் அவனது இதயமே உறைந்து விடும்படி இருந்தது. எந்தக் கைகளும் அவனுக்கு பணமோ உணவோ கொடுக்க  முன்வரவில்லை.

தனக்குத் தெரிந்து அனைத்து வீடுகளிலும் கையேந்தி விட்டான், ஒன்றும் கிடைக்கவில்லை, கடைசியாக  சிக்கேவின் பண்ணைக்கு அருகே  செல்லும் சாக்கடைக்கருகில் நின்றான். அவனது ஊன்றுகோல்கள் அவனிடமிருந்து நழுவி விழுந்தன, அவன் அசைவற்று நின்றான், பசிக் கொடுமை அவனை வாட்டியது, தனது கொடுமையான வாழ்க்கையை பிறர் உணரும் அளவுக்குச்  சொல்ல அவன் புத்திக் கூர்மை அற்றவனாக இருந்தான்.

 மனித மனத்துக்கே உண்டான வெற்று நம்பிக்கையால் ஆக்கிரமிக்கப்பட்ட இதயத்துடன் அவன் காத்திருந்தான். பண்ணையின் ஓரத்தில் அவன் டிசம்பர்க் குளிரில் காத்திருந்தான். ஏதாவது அற்புத  உதவிகள் மனிதர்களிடமிருந்தோ சொர்க்கத்திளிருந்தோ தனக்குக் கிடைக்கும் என்று காத்திருந்தான், அது எப்போது கிடைக்கும் என்று அறிவே இல்லாமல் காத்திருந்தான். அங்கே, சில கறுப்புக் கோழிகள் அங்குமிங்கும்  ஓடிக்கொண்டு உணவு தேடிக்  கொண்டிருந்தன, இந்த பூமியின் மேல் எல்லா உயிரினங்களும் வாழ்வது போல. சிறிது நேரத்துக்கொருமுறை  தங்களது அலகால் புழுவையோ ஏதேனும் ஒரு விதையையோ கொத்தி எடுத்துக் கொண்டிருந்தன. பிறகு தங்களது வேலையை அவைகள் தொடர்ந்தன, தேடினால் உணவு நிச்சயம் கிடைக்கும்  என்ற உறுதியில்.

'ஆலயமணி' முதலில் எந்தச் சிந்தனையும் இல்லாமல் அவைகளைக் கவனித்தான். அவனுக்கு ஓர் எண்ணம் உதித்தது, மனதில் அல்லாமல் வயிற்றில். ஏதேனும் ஒரு கோழியை அடித்து அங்கே கிடக்கும் சுள்ளி விறகுகளைக் கொண்டு வாட்டி சாப்பிட்டால் என்ன என்று.

அவனுக்கு உறைக்கவில்லை தான் ஒரு திருட்டைச் செய்யப் போகிறோம் என்று. கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்தான். குறி தவறாமல் தனக்கு அருகில் திரிந்த ஒரு கோழியை அடித்தான். பறவை சிறகுகளை அடித்தபடி சுருண்டு விழுந்தது. மற்ற பறவைகள் அங்குமிங்கும் சிதறி ஓடின. ஆலயமணி தனது ஊன்று கோல்களைப் பற்றிக் கொண்டு தன்னால் வேட்டையாடப்பட்ட பறவை விழுந்த இடத்துக்கு முன்னேறினான். 

அவன் அந்தப் பறவை விழுந்த இடத்துக்கு முன்னேறிய போது அவனது முதுகில் பயங்கரமான ஓர் அடி விழுந்தது, அவன் ஊன்றுகோல்களை தவறவிட்டான், பத்தடி தூரத்துக்குப் பறந்து போய் விழுந்தான். அங்கே அவனருகில் ஆத்திரத்தில் விவசாயி சிக்கே, வளைத்துப் பிடித்து உதைத்துக் கொண்டிருந்தான், அநாதரவாக 'ஆலயமணி' அவனிடத்தில் கெஞ்சினான்.

வயலிலே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தங்களது முதலாளியுடன்  சேர்ந்து முடப் பிச்சைக்காரனைப் புரட்டிப் புரட்டி நையப்புடைத்தனர். அடித்து அடித்துச் சலித்த பின்னர் அவனை ஒரு மரக்குடிசையில் வைத்து அடைத்தனர், சிலர் காவலர்களை அழைக்கச் சென்றனர். 

 'ஆலயமணி' பாதி இறந்து விட்டான், ரத்தம் வழிந்து கொண்டிருந்தது, பசியாலும் வலியாலும் தரையில் கிடந்து துடித்தான். மாலை வந்தது, பிறகு இரவு, பிறகு மறுநாள் காலையும். இப்போதும் அவன் ஒன்றும் உண்டிருக்கவில்லை.

நண்பகல்  வாக்கில் காவலர்கள் வந்தார்கள். பிச்சைக்காரனின் தரப்பிலிருந்து ஏதேனும் தாக்குதல் வருமோ என்று,   மிகுந்த எச்சரிக்கையுடன் கதவைத் திறந்தார்கள். சிக்கே சொன்னான், தன்னை அவன் கடுமையாகத் தாக்கினான், தன்னைத் தற்காத்துக் கொள்ள மிகுந்த சிரமப் பட்டேன் என்று. 

 

காவலர் கத்தினார்:

"வா வா, எழுந்திரு!"

ஆனால் 'ஆலயமணி'யால் நகர முடியவில்லை. தன்னால் ஆன மட்டும் எழுந்திருக்க மிகுந்த முயற்சி செய்தான், முடியவில்லை. அவனது இயலாமையை காவலர்கள் நடிப்பு என்று கருதினார்கள், அவனை வலுக்கட்டாயமாக எழுப்பி ஊன்று கோல்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.

அச்சம் அவனை ஆட்கொண்டது-- காவலர் சீருடையைக் கண்டதும் அவனது ரத்தத்தில் ஊறிய அச்சம், விளையாட்டு வீரன் ஆட்டம் தொடங்கையில் கொள்ளும் அச்சம், பூனையைப் பார்த்ததும் எலிக்கு வரும் அச்சம்--- இருந்தாலும் அவனது மனித முயற்சிக்கும் அப்பாலிருந்து வலிமை கொண்டு வெற்றிகரமாக நின்றான். 

"நட!" காவலர் சொன்னார். அவன் நடந்தான். அந்த வயலில் வேலை செய்தவர்கள் எல்லாம் அவன் செல்வதைக் கண்டார்கள். பெண்கள் அவனை வைதார்கள் ஆண்கள் அவனைத் திட்டினார்கள் அவமானப் படுத்தினார்கள். கடைசியாக அவன் பிடிபட்டான்! சனியன் தொலைந்தது! அவன் இரண்டு காவலர்களுக்கு  நடுவே சென்றான். அவன்  போதுமான வலிமையைத் திரட்டிக்கொண்டான்-- இயலாமையால் திரட்டப் பட்ட வலிமை-- மாலை வரை அவனை இழுத்துக் கொண்டு செல்லத் தேவையான அளவிற்கு. தனக்கு என்ன நடக்கப் போகிறது என்று அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவன் அச்சமுற்றிருந்தான். 

சாலையைக் கடக்கும் பொது எதிர்ப்பட்ட மக்கள் தங்களுக்குள் முணுமுணுத்தார்கள்:

"இது அவனா வேறு ஒரு திருடனா?"

மாலையில் அருகிலிருந்த நகரத்திற்கு ஓட்டிக்கொண்டு செல்லப்பட்டான். அவன் இவ்வளவு தூரம் முன்னர் எப்போதும் பயணம் செய்ததில்லை. எதற்கு அங்கே அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்றோ என்ன நடக்கப் போகிறது என்றோ அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.  கடந்த இரண்டு நாட்களாக நடந்த எதிர்பாராத கொடுமைகள் எல்லாமும், முன்பின் அறிமுகமில்லா முகங்களும் வீடுகளும் அவனது நம்பிக்கையைத் தகர்த்து விட்டிருந்தன.

அவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, ஏனெனில் என்ன நடக்கிறது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதோடல்லாமல், அவன் கடந்த பல ஆண்டுகளாக யாரிடமும் பேசியிருக்கவில்லை, நாக்கின் பயன்பாட்டையே அவன் தவிர்த்திருந்தான். அவனது சிந்திக்கும் திறனோ  வார்த்தைகளைக் கூட்டிப் பேசுவதற்கு முடியாமல் இருந்தது.

அவன் நகரத்துச் சிறையில் அடைக்கப் பட்டான். காவலர்களுக்கு உறைக்காமல் போனது அவனுக்கும் பசிக்கும் என்று. அவன் அங்கேயே தனிமையில் விடப்பட்டான், அடுத்த நாள் வரை. ஆனால் அதி காலையில் அவர்கள் வந்து அவனைச் சோதித்துப் பார்த்த போது அவன் இறந்து விட்டதை அறிந்தார்கள்.

என்ன ஓர் ஆச்சரியம்!

******

 

 

 

3 comments:

  1. மனிதம் செத்துவிட்ட பிறகு இங்கே வாழ்வதில் அர்த்தமில்லை என்றுதான் அவன் உயிரை விட்டுவிட்டானோ?..!!!!!

    என்ன ஓர் ஆச்சரியம்! தாங்களும் பல்லோர் மனதில் நின்றுவிட்டீர்கள்...!!!

    வாழ்த்துக்கள்.....வாழ்க...வெல்க....!!!!!!!!!!

    ReplyDelete
  2. கதை மனதை அழுத்துகிறது. பசிக்கு கூட உணவு கிடைக்காத நிலை கொடியது. நல்ல மொழிபெயர்ப்பு

    ReplyDelete
  3. A story that touches the heart! Your brilliant translation is an outstanding contribution.

    ReplyDelete