Friday, January 28, 2011

Après : பிறகு








மூலம் : கய்  தே மாப்பசான்
தமிழில் : மா. புகழேந்தி


"ண்ணுகளா இனி நீங்க தூங்கப் போகலாம்."பாட்டியம்மா சொன்னார்கள்.
மூன்று குழந்தைகளும், இரு சிறுமிகள் ஒரு சிறுவன், எழுந்து தங்களது பாட்டியை முத்தமிட்டனர். பிறகு அவர்கள் பாதிரியாருக்கு இரவு வணக்கம் செய்தனர் , அவர் ஒவ்வொரு  வியாழக் கிழமையும்  போல அன்றும் இரவு உணவினை அங்கு தான் முடித்திருந்தார்.

அவர் இரு குழந்தைகளை தனது முழங்காலில் மேலே தூக்கினார், தனது நீண்ட கைகளை அவர்களின் கழுத்தைச் சுற்றிப் போட்டார், அவர்களது   தலையைத் தன்பக்கம்  இழுத்து ஒரு தந்தையின் வாஞ்சையைப்  போல் முன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்.

பிறகு அவர்களை மெல்லத் தரையில் விட்டார். குட்டிக் குழந்தைகள் சென்றன, சிறுவன் முன்னாலும் அவனைத் தொடர்ந்து மற்ற குழந்தைகளும் சென்றனர்.

"உங்களுக்குக் குழந்தைகள்னா பிடிக்குமோ?" , பாட்டியம்மா கேட்டார்.
"ரொம்பப் பிடிக்கும், அம்மா."

கிழவி தன் ஒளிரும் கண்களை உயர்த்தி பாதிரியாரைப் பார்த்தாள்.

"அப்படீன்னா உங்க தனிமை உங்களை வாட்டிக்கொண்டிருக்குமே."

"அமாம், சில நேரங்களில்."
அவர் அமைதியானார், பின் மெதுவாகச் சொன்னார், "நான் சாதாரண வாழ்க்கைக்குப் படைக்கப் படவில்லை."

"அதெப்படி உங்களுக்குத் தெரியும்?"

"எனக்கு நன்றாகத் தெரியும். நான் பாதிரியாராக ஆவதற்குத் தான் படைக்கப்பட்டேன். நான் எனது வேலையைப் பின் பற்றுகிறேன்."

கிழவி அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்;
"சொல்லுங்க, நண்பரே , என்கிட்டே சொல்லுங்க, எப்படி நீங்க இந்த உலகத்துல இருக்கிற எல்லாவற்றையும் துறக்க முடிஞ்சது? எங்களால விட முடியாத இன்ப துன்பங்களை எல்லாம். உங்களை எது மாற்றியது? உங்களை எது திருமணம் குடும்பம் போன்ற இயற்கையின் பெரும் இணைப்புகளில்  இருந்து பிரிச்சது? நீங்கள் உற்சாகமாகவும் இல்லை ஆர்வமாகவும் இல்லை அதே நேரம் எதையும் பறிகொடுத்த மாதிரியும் இல்லை சோகமாகவும் இல்லை . அதென்ன ஏதாவது நடந்ததா, ஏதாவது துயரப்படும் படியான நிகழ்ச்சி நடந்ததா, எது உங்களை இப்படி ஒரு உறுதியான முடிவை வாழ்க்கையில எடுக்க வச்சது?"

அவர் எழுந்தார், கணப்புக்காக இடப்பட்டிருந்த நெருப்பின் அருகில் சென்றார், தனது காலணிகளைத் தூக்கி நெருப்பின் அருகில் காட்டினார், அவரது காலணிகள் எல்லா கிராமத்து பாதிரிமார் அணிவது போல பெரிய காலணியாக இருந்தது.
அவர் இன்னும் என்ன பதில் அளிப்பது என்று தத்தளித்துக் கொண்டிருந்தார். அவர் உயரமாகவும் முடி நரைத்தும் காணப்பட்டார். கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ரோசெரில் உள்ள தூய அன்தொயன் ஆலயத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பகுதி எளியவர்கள் எல்லாம் , "ஒரு நல்ல மனிதன் இருக்கிறார்" , என்று அவரைப் பற்றிச் சொல்வார்கள். அவர் உண்மையிலேயே நல்ல மனிதர் தான், நல்லதே செய்வார், அனைவரிடமும் நன்கு பழகுவார், மென்மையானவர், அதையெல்லாம் விட மகுடம் வைத்தது போல் பெருந்தன்மையானரும் கூட. தூய மார்டினைப் போன்றவர். பெண்களைப் போல எளிதில் உணர்ச்சி வசப் படக்கூடியவர், உடனே சிரிப்பார்அழுவதும் உண்டு. ஏறக்குறைய அப்பகுதி மக்களால் அவர் அப்படித்தான் கருதப்பட்டார்.

ரோசெரில் உள்ள பெரிய வீட்டில் பாட்டியம்மா தனது ஓய்வுக் காலத்தை பேரக் குழந்தைகளை வளர்ப்பதில் செலவிட்டு வந்தாள்,
அடுத்தடுத்துத் தன் மகனையும் மருமகளையும் இழந்த பின் பேச்சுத் துணைக்கு வரும் இவரைப் பார்த்து வியந்து போய்ச் சொல்வாள், "கனிவான மனம் கொண்டவர்." என்று.
ஒவ்வொரு வியாழனும் அவர் பாட்டியம்மாவைப் பார்க்க வருவார், அவர்களது  நட்பு, எல்லா வயதானவர்களுக்கிடையில்  இருப்பதைப் போல வெளிப்படையாகவும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது.
கிழவி வலியுறுத்தினாள்:
"இங்க பாருங்க, நண்பரே , நீங்கள் இப்போது என்னிடம் ஓர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்."

அவர் திருப்பிச் சொன்னார், "நான் சாதாரண வாழ்க்கைக்குப் படைக்கப் படவில்லை. இதை நான் பல முறை என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன், எனவே என் முடிவில் எந்தக் குறையும் இல்லை.

"என் பெற்றோர் வெர்தியேர்சில்  வணிகர்களாக இருந்தனர், வசதியானவர்கள், என் மேல் பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். நான் மிகச் சிறு வயதாக இருந்த போதே என்னை விடுதி கொண்ட பள்ளியொன்றில் சேர்த்து விட்டனர்.  ஒரு சிறுவன் குடும்பத்தையும் உற்றார் உறவினர்களையும் பிரிந்தால் என்ன பாடு படுவான் என்று யாருக்கும் தோன்றவில்லை. இதைப் போன்ற உற்சாகமில்லாத அன்பில்லாத வாழ்க்கை ஒருசிலருக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் மற்றவர்களுக்கு அப்படி இருக்காது அது பெரும் வெறுப்புடையதாக இருக்கும்.
ஒருவர் நினைப்பதை விட இளம்  வயதினர் அதிக உணர்ச்சிவயப் படக் கூடியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் விருப்பமானவர்களிடமிருந்து பிரிக்கப்படும் போது  மிக அதிகமாக  உணர்ச்சி வயப்படுகின்றனர்.  அது வளர்ந்து கட்டுக் கடங்காமல் போய்ச்  சரிப்படுத்தவே முடியாத பேராபத்தில் கொண்டு விடுகிறது.

நான் சரியாக விளையாடியதே இல்லை. எனக்கு தோழர்களே கிடையாது, வீட்டு நினைவிலேயே  பல மணி நேரங்களைக்  கழிப்பேன், இரவில் படுக்கையில் அழுது கொண்டிருப்பேன், நான் என் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளை, சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை எல்லாம்  நினைவு படுத்திக் கொள்ள முயல்வேன், நான் இடைவெளியில்லாமல் தனிமைப் படுத்தப் பட்டதை எண்ணிக் கொண்டே இருப்பேன்.  சின்னச் சின்னப் ஏமாற்றங்களைக் கூட பெரும் துயரமாக எண்ணும் இளைஞனாக  நான் மாறிவிட்டேன்.

இப்படியே நான் தன்னிரக்கம்  கொண்டவனாக, வெளிப்படையில்லாதவனாக, சுய நம்பிக்கையற்றவனாக   மாறினேன். இந்த மனப் போராட்டம் ரகசியமாகவும் கடுமையாகவும் எனக்குள்ளே நடந்தது. குழந்தைகளின் மனது  எளிதில் பாதிக்கப்பட்டுவிடும், அவர்கள்  வளர்ந்து பெரியவர்கள் ஆன போது தான் தெரியும் அவர்கள்  நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்களா என்பது. ஆனால் யாரிடம் அது வெளிப்படுகிறது? ஒரு சிறுவனின் மேல் நியாய மற்றுத் திணிக்கப்படும் வாழ்க்கைமுறை, பிற்காலத்தில் அவனுக்கு  உயிருக்குயிரான நண்பனின் சாவைக் கண்டது போன்ற பெரும் துயரத்தைக் கொடுத்துவிடும்.

யாரால் விளக்க முடியும், ஏன் சிலருக்கு சின்னச் சின்னத் தோல்விகள் கூட பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது என்று, இறுதியில் சரிப்படுத்தவே முடியாத நோயாக அது வளர்ந்துவிடுகிறது என்று?

என்னுடைய நிலை இது தான். இந்த மன நிலை எனக்குள்ளே மாபெரும் மரமாக வளர்ந்து வாழ்வதே  ஒரு தியாகம் என்று எண்ணும்படி மாறிவிட்டது.

இதைப்பற்றி நான் பேசியதில்லை, இதைப் பற்றி யாரிடமும் சொன்னதில்லை, மெல்ல எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவனாக மாறினேன், என் மனம் ஒரு திறந்த காயத்தைப் போல   மாறிவிட்டது. என்னை பாதித்த ஒவ்வொன்றும் மனதைக் கடுமையாகக் காயப் படுத்தியது, அச்சப் படும்படி அதிர்ச்சியளித்தது, இறுதியில் அவை என் உடல் நலத்தைக் கெடுத்தது. ஒரு சிலருக்கு இதைப் போன்ற நிகழ்வுகளைத் தாங்கும் அளவுக்கு இயற்கையே போதுமான வலிமையைக் கொடுத்து இருக்கிறது, இன்பம் துன்பம் இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்அவர்கள் எல்லாம் மகிழ்ச்சியானவர்கள்.
எனது பதினாறாம் வயதை அடைந்தேன். இந்த வழக்கத்துக்கும் மாறான உணர்ச்சிவயப் படும் தன்மை  தன்னம்பிக்கையற்ற மோசமான நிலைக்கு என்னைத் தள்ளியது. விதியின் தாக்குதலில் நான் பதுகாப்பில்லாதவன் போல உணர்ந்தேன், யாரையும் காண அஞ்சினேன், பேச அஞ்சினேன், சந்திக்க அஞ்சினேன். தீவினை நடந்து விடுமோ என்று எப்போதும் அஞ்சியே வாழ்ந்தேன். வெளியில் செல்லவோ பேசவோ நடுங்கினேன்.

நான் நம்பினேன், வாழ்க்கை என்பது  பெரும் குழப்பம் கொண்டது , வாழ்வா சாவாப் போராட்டம்ஒருவன் கடுமையாகக் காயம் அடையலாம், ஆறாத புண்ணைப் பெறலாம், மரண அடியைக் கூடப் பெறலாம், என்று.  பிற ஆண்கள் மகிழ்ச்சியாய் இருக்கும் இடங்களில் கூட நான் குழப்பமுற்று அச்சத்தின் பிடியில் தான் இருப்பேன் , பிரச்சனைகளில் இருந்து  ஒளிந்து கொள்ளச்சொல்லி என் மனம் தூண்டும், ஏதோ நான் காணாமல் போவேனோ  அல்லது கொல்லப்பட்டு விடுவேனோ என்று. 

என் படிப்பு முடிந்ததும் ஏதேனும் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி ஆறு மாதம் அவகாசம் கொடுத்தனர். பாதிப்புக்குள்ளாகியிருந்த என்  உள்ளுணர்வு வரப்போகும் ஆபத்தை புரிய வைத்தது  பிரச்சனையிலிருந்து தப்பி   விடுமாறு திடீரென எச்சரித்தது.

வெர்தியர்ஸ் ஒரு சிறு நகரம், சமவெளிகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருந்தது. நகருக்கு நடுவே என் பெற்றோரது வீடு இருந்தது. நான் பல நாட்களை இவ் வீட்டை விட்டு  வெளியே கழித்திருந்தேன், அதற்காக நான் மிகவும் வருந்தினேன், இதற்குத் தான் மிகவும் ஏங்கினேன். கனவுகள் என்னுள்ளே மீண்டும் விழித்துக் கொண்டது. அவைகளைத் தவிர்ப்பதற்காக நான் தனிமையில் வயல் பகுதிகளில் நடந்தேன். வணிகத்தில் கவனம் கொண்ட என் தந்தையும் தாயும்  என்னைப் பற்றிக் கவலை கொண்டிருந்தனர், வணிகத்தின் லாபத்தைப் பற்றியும் எனது வருங்காலத் திட்டத்தைப் பற்றியுமே என்னிடம் பேசினார். அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது.  அவர்கள் என் மேல் காட்டிய அன்புக்குப் பாசத்தை விட வேறு காரணங்களும் இருந்தது. நானோ என் சிந்தனைகளுக்குள் சிறைப்பட்டு இருந்தேன், அதீத உணர்ச்சியால் அதிர்ந்து கொண்டிருந்தேன்.

ஒரு நாள் மாலையில் நீண்ட நடைக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன், தாமதமாகிவிடக்கூடாது என்பதற்காக வேகமாக எட்டு வைத்துக் கொண்டு நடந்தேன், அப்போது ஒரு நாய் என்னை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அது சிவப்பு ஸ்பானியல் வகை நாய், மிகவும் மெலிந்திருந்ததுநீண்டு சுருண்ட காதுகளைக் கொண்டிருந்தது. எனக்குப் பத்து எட்டுக்கள் முன் நின்று  கொண்டது. நானும் அதையே செய்தேன். தனது வாலை ஆட்ட ஆரம்பித்தது. குறுகிய எட்டுக்களுடனும் உடல் முழுக்க நடுக்கத்துடனும் என்னை நோக்கி முன்னேறியது.மென்மையாகத் தலையை ஆட்டியபடி முன்கால்களில் மண்டியிட்டது. அதனிடம் பேசினேன். அது மெல்ல ஊர்ந்து சோகத்துடன் பரிதாபமாக முறையிடுவது போல் என்னைப் பார்த்தது. என் கண்களில் நீர் வழிந்ததை உணர்ந்தேன். அதை அணுகினேன், அது ஓடியது, மீண்டும் அருகில் வந்தது, ஒரு காலில் மண்டியிட்டு  மென்மையான வார்த்தைகளில்  அதனை என்னருகே வரும்படி அழைத்தேன், இறுதியாக என் கைக்கெட்டும் தூரத்தில் வந்தது. நான் எச்சரிக்கையாகவும்  அன்பாகவும் மெதுவாக அதனைத் தட்டிக் கொடுத்தேன்.

அதற்கு தைரியம் வந்தது. மெதுவாக எழுந்து தன் கால்களை  என் தோளில் போட்டது. என் முகத்தை நக்கியது.  வீடு வரை பின் தொடர்ந்தது.

இதுதான் உண்மையாக என்னால் நேசிக்கப் பட்ட முதல் உயிரினம், ஏனெனில் இது தான் என் அன்பைத் திருப்பிச் செலுத்தியது. இதன் மேல் நான் கொண்ட பாசம் மிகைப்படுத்தப் பட்டதாகத் தெரியலாம் , முட்டாள்தனமாகக் கூட இருக்கலாம். என் குழப்பமடைந்திருந்த மனதுக்கு அந்த நாய் எனது சகோதரனைப் போலத்தோன்றியது, நாங்கள்  இந்த உலகத்தில் தொலைந்து போனவர்களாகப் பட்டது, எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தனிமைப் பட்டதாக உணர்ந்தேன். அவன் என்னை விட்டு அதன் பிறகு பிரிந்ததே இல்லை. என் காலருகே தூங்கினான், என் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி என்னுடனேயே சாப்பிட்டான். தனிமையில் நான் நடக்கும் போது என்னுடனேயே வருவான்.

நான் வழக்கமாக  ஒரு குழியின் அருகில் உள்ள புல் தரையில் அமர்வேன், அவன் என்னருகில் ஓடி வந்து காலடியில் அமர்வான், தனது தலையால் என் கைகளைத் தூக்குவான், நான் அதனை நீவி விடுவேன்.

ஒரு நாள் ஜூன் மாத இறுதியில், செயின்ட் பியர்ரீ தே சாவ்ரோல் -இல் இருந்து வரும் சாலையில் நடந்து கொண்டிருந்தோம், பவேரியுவிலிருந்து வந்துகொண்டிருந்த பெரிய குதிரை வண்டியினை நான் கவனித்தேன். பூட்டப்பட்டிருந்த நான்கு குதிரைகளும் நான்கு கால் பாய்ச்சலில் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தன, அதன் மஞ்சள் நிறமும் தோலால் செய்யப்பட்ட பகட்டான சேணங்களும் எடுப்பாக இருந்தன. வண்டி ஓட்டி சாட்டையைச் சுழற்றினான், வண்டியின் சக்கரங்களினால் தரையிலிருந்து மேகக் கூட்டம் போல வண்டியின் பின்னால் புழுதி கிளம்பி மிதந்தது.

திடீரென இந்தச் சத்தங்களால் அச்சமுற்ற என் நாய், சாம், என்னருகே வர வேண்டி குறுக்கே ஓடி வந்தது. ஒரு குதிரையின் குழாம்பு அதனைத் தாக்கியது. நான் பார்த்தேன், குதிரையின் காலுக்குக் கீழே நாய் விழுந்தது, புரண்டது, திரும்பி  விழுந்தது, வண்டி இரண்டு  முறை குலுங்கியது, அதன் பின்னே சாலையில் கவனித்தேன் ஏதோ ஒன்று புழுதியில் துடித்துக்  கொண்டு இருந்ததை. அவன் ஏறக்குறைய இரு துண்டுகளாகக் கிடந்தான். அவனது குடல்கள் வெளித்தள்ளப் பட்டு இருந்தது காயங்களில் இருந்து ரத்தம் வெள்ளமாகப் பரவிக் கொண்டிருந்தது. அவன் எழ முற்பட்டான், நடக்க முயற்சித்தான், அவனால் முன்னங்கால்களை மட்டுமே அசைக்க முடிந்தது. அவைகளால் நிலத்தைப் பிராண்டினான், ஏதோ குழியைத் தோண்டுபவன் போல. அவனது இரு பின் கால்களும் ஏற்கனவே இறந்துவிட்டன. வலியால் துடித்து ஓலமிட்டான் .

சில நிமிடங்களில் அவன் இறந்து போனான். நான் எவ்வளவு துயருற்றேன் என்று சொல்ல முடியாது. என் அறையிலேயே ஒரு மாதம்  முடங்கிக் கிடந்தேன்.

"இந்தச் சின்ன விசயத்துக்குப் போய் இவ்வளவு தூரம் வருந்துகிறானே என்று ஆத்திரப்பட்ட  என் தந்தை ஒரு நாள் இரவில் வியந்து போய்க் கூறினார்,

"உனக்கு உண்மையாலுமே துயரம் வந்தால் என்ன பாடு படுவாய் - அதாவது உன் குழந்தையோ உன் மனைவியோ  இறந்து போனால்?

"அவர் வார்த்தைகள் என்னைப் பாதித்தது, என் நிலை எனக்குத் தெளிவாக விளங்கியது.

எனக்கு விளங்கியது, ஏன் சிறு துன்பங்கள்  கூட எனக்குச் சொல்லொனாத் துயராகப் புலப்படுகிறது என்று. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நான் கடுமையாகப் பாதிக்கப் படுவதாக நான் கண்டேன்.

வலியூட்டும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நோயுற்ற என் மனதில் பல்கிப் பெருகியது, விவரிக்கவே முடியாத அச்சம் என்னை ஆட்கொண்டது. எதன் மீதும் பற்றோ, லட்சியமோ, இல்லாமல் இருந்தேன், எனவே இன்பங்களை எல்லாம் துன்பங்களை எண்ணித் துறந்தேன். வாழப்போவது கொஞ்ச காலமே, பிறருக்கு சேவை செய்வதில் அந்தக் காலத்தைச் செலவிட நினைத்தேன். அதன் மூலம் அவர்களது துயரங்களைத் துடைத்து மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டேன். எனவே நேரடியாக எதிலிருந்தும் பாதிக்கப் படாமல் அனைத்திலும் குறைவாக உணர்வுகளை அனுபவித்தேன்.

இதற்கெல்லாம் பிறகு உங்கள் ஒருவருக்குத் தான்   தெரியும் நான் எவ்வளவு தூரம் பாதிக்கப் பட்டு இருக்கிறேன் என்று.

ஆனால், இதற்கு முன் பொறுத்துக் கொள்ளவே முடியாத மாபெரும் துயர், ஆறுதல் படுத்தப் படக்கூடிய கவலையாகக் குறைந்துள்ளது. இந்தத் துன்பங்கள் எனது வழியில் அடிக்கடி குறுக்கிட்டன, அவை நேரடியாக என்னைத் தாக்கியிருந்தால் என்னால் தாக்குப் பிடித்திருக்கவே முடியாது. நான் சாகாமல் என் குழந்தை ஒன்று சாவதைக் கண்டு கொண்டிருக்க முடியாது. இதெல்லாம் இருந்தாலும், விரித்துரைக்கவே முடியாத அச்சம் ஒன்று என்னை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது, தபால்காரர் என் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் , இனம் தெரியாத பயம் என்னைக் கவ்வும், என் நாடி நரம்பெல்லாம்  நடுங்க ஆரம்பிக்கும்.. ஆனால் இப்போது எனக்கு எந்த அச்சமும் இல்லை."

அவர் பேசுவதை நிறுத்தினார். எரிந்து கொண்டிருந்த நெருப்பை வெறித்துப் பார்த்தார், ஏதோ விசித்திரமானவற்றைப் பார்ப்பது போல, கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த  அனைத்தையும் அவர் தாண்டி வந்திருக்க வேண்டும், அனுபவித்திருந்தால் இன்னும் அச்சமற்று இருந்திருப்பார்.


 மெதுவான குரலில் இப்போது  சொன்னார்:
"ஆமாம் நான் செய்தது சரி தான். நான் இந்த உலகத்துக்குகாகப் படைக்கப் படவில்லை."

பாட்டி உடனடியாக எதையும் சொல்லவில்லை, நீண்டஅமைதிக்குப் பிறகு சொன்னார் :
"என்னைப் பொறுத்தவரை, என் பேரக் குழத்தைகள் இல்லை என்று சொன்னால், வாழ்வதற்கு எனக்கு தைரியம் இருந்திருக்காது."

அவர் அடுத்த வார்த்தை எதுவும் சொல்லாமல் எழுந்தார்.

வேலைக்காரர்கள் எல்லாம் சமையல் அறையில் உறங்கிக் கொண்டிருந்ததால், பாட்டியம்மாவே அவரைக் கதவு வரை கொண்டு வந்து விட்டார், தோட்டத்தில் விளக்குகளால் தோன்றிய அவரது  உயரமான நிழல் இருளில் மெல்ல மறைவதையும் கண்டார்.

பிறகு பாட்டியம்மா திரும்பி வந்து கனன்று கொண்டிருந்த நெருப்பின் முன் அமர்ந்து, நாம் இளமையாக இருந்த காலத்திலெல்லாம் சிந்தித்திராத பலவற்றையெல்லாம் சீர்தூக்கிப்பார்த்து அக்கறையுடன் சிந்திக்கத் தொடங்கினார்.

******


(M. le curé மற்றும்  Abbé Mauduit போன்ற வார்த்தைகளைத் தமிழில் வேண்டுமென்றே தவிர்த்து விட்டேன், அதற்காக மன்னிக்கவும்.)

Saturday, January 22, 2011

Une Vendetta : ஒரு சூளுரை





மூலம் : கய் தே மாப்பசான் 
தமிழில் : மா. புகழேந்தி


போனிபாசியோ நகரத்தின் ஒதுக்குப் புரத்தில் ஓர் ஏழ்மையான வீட்டில் பவலோ சவேரினி-யின் விதவை மனைவி தனது ஒரே மகனுடன் வாழ்ந்து வந்தாள். அந் நகரம் மலைச் சரிவின் வெளிப்புறத்தில் அமைந்திருந்தது, சில இடங்களில் அது கடலுக்கும் மேலே தொங்கிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது, நீர் இணைப்பின் மேலாக  பார்க்கும் போது, மணல் திட்டுக்கள் சார்தினியாவின்  தென் கோடி வரை பரவி இருந்தது. அதன் கீழே ஏறக்குறைய அடுத்த பக்கம்,   கடலை நோக்கி சுற்றிக் கொண்டிருந்த பாறை முகத்தின் பிளவு, ஒரு பெரும் திட்டாக இருந்தது, அது துறைமுகம் போல செயல் பட்டதுசெங்குத்துப் பாறைகளின் நடுவே  இத்தாலிய மற்றும் சார்தினிய மீன் பிடிப் படகுகள் சுற்று வழியாக வந்து, அத் துறைமுகத்தில் நின்று செல்லும். இரு வாரங்களுக்கு ஒரு முறை அஜாச்சியோ செல்லும் ஒரு பழைய நீராவிக் கப்பலும் வரும்.

அந்த வெள்ளை மலையின் மேலே வீடுகள் நெருக்கிக் கட்டப்பட்டிருந்தன, அவை  இன்னும் வெண்மையான திட்டுகளாகத் தெரிந்தன. அவை மலைப்  பறவைகளின் கூடுகளைப் போலத் தெரிந்தன. மலையில் ஒட்டிக்கொண்டு, கடல்வளியை நோக்கி, எப்போதாவது வரும் படகுகளைப் பார்த்துக் கொண்டு இருந்தன. காற்று தடை இல்லாமல் வீசிக்கொண்டு கைவிடப்பட்ட கடற்கரையைத் துடைத்து விட்டிருந்தது. குறுகிய நீர் இணைப்பின் வழியே காற்று இரு கரைகளிலும் வீணாக அடித்துக் கொண்டிருந்தது. பொங்கிய வெண் நுரைகள் கரும் பாறைகளின் மேல் விழுந்து வழிந்து கொண்டிருந்தது, கடலின் மேல்பரப்பில் சிறு சிறு பாறை முகடுகள் கடலலையின் வீச்சில் எழுந்து மறைந்து கொண்டிருந்தது, அது பெரிய விரிப்பு மேலும் கீழும் அசைக்கப்படுவது  போலத்  தெரிந்தது.

திருமதி சவேரினியின் வீடு ஓர் ஓரத்தில் அமைந்திருந்தது, அதன் மூன்று ஜன்னல்கள் வழியே பார்த்தால் வாழ்வதற்கு தகுதியற்ற இந்த நிலத்தின் அமைப்பு முழுதாகத் தெரிய வரும்.

அங்கு அவள் தன் மகன் அந்தோனியோ மற்றும் நாய் செமில்லாந்தி ஆகியோருடன் வசித்து வந்தாள், செமில்லாந்தி பெரிய ஒல்லியான கலப்பின நாய். அதை அந்தோனியோ கூடக் கூட்டிச் செல்வான், வேட்டைக்குப் பயன்படுத்துவான்.

ஓர் இரவு வாய்த் தகராறில் அந்தோனியோ சவரேனியை நிகோலஸ் ரவோலதி என்பவன்  நயவஞ்சகமாகக்  கொன்று விட்டு   இரவோடிரவாக சார்திநியாவிற்கும்  ஓடி விட்டான்.

தனது மகனின் உடலை அக்கம்பக்கத்திலுள்ளோர் கொண்டு வந்த போது அந்தத் தாய் அதைப் பார்த்து அழவில்லை, அங்கேயே அசைவற்று நீண்ட நேரம் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். தனது சுருக்கம் விழுந்த கைகளால் அவனைத் தழுவி பழிக்குப் பழி வாங்குவதாகச்  சூளுரைத்தாள். யாரையும் தன் அருகே வர அவள் அனுமதிக்க வில்லை. நாயுடன் தனது மகனின் உடலை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டாள். நாய் படுக்கையின் கால்மாட்டில் நின்று கொண்டு தொடர்ந்து ஊளையிட்டதுதனது தலையை எஜமானின் பக்கம் நீட்டிக் கொண்டு வாலைக் கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு நின்றது. தாயைப் போலவே அதுவும் அசைவற்று நின்றது, அவளோ மகனின் உடலை வெற்றுப் பார்வை பார்த்தபடி அமைதியாக அழுது கொண்டிருந்தாள்.

அந்த இளைஞன் மல்லாந்து கிடந்தான், உடுத்தியிருந்த முரட்டுத் துணி நெஞ்சில் கிழிந்திருந்தது, பார்ப்பதற்கு தூங்குபவன் போல இருந்தான். ஆனால் அவன் உடல் முழுக்க ரத்தம் பரவி இருந்தது, முதல் உதவிக்காகக் கிழிக்கப்பட்ட மேலாடை முழுக்க ரத்தத்தால் நனைந்திருந்தது, உள்ளாடையின் மேல், கால் சட்டையின் மேல், முகத்தின் மேல் கைகளின் மேல் ரத்தம் படிந்திருந்தது. அவனது தலைமுடியிலும் தாடியிலும் கூட ரத்தம் உறைந்திருந்தது.

கிழட்டுத் தாய் மகனிடம் பேசினாள். அந்த சத்தத்தைக் கேட்டு நாய் அமைதியானது.

"அச்சம் கொள்ளாதே மகனே, என் செல்ல மகனே, உனக்காக நான் வஞ்சம் தீர்ப்பேன். தூங்கு நிம்மதியாய்த் தூங்கு, உனக்காக நான் பழிவாங்குவேன், கேட்கிறாயா? இது உனது தாயின் சத்தியம். அவள் தன் வார்த்தையைக் காப்பாற்றுவாள். உன் தாய் தன் வார்த்தையைக் காப்பாற்றுவாள், உனக்குத் தெரியும் அவள் சொன்னால் செய்வாள் என்று."

மெதுவாக அவன் மேல் சாய்ந்து தனது குளிர்ந்து போன உதடுகளால் அவனை முத்தமிட்டாள்.

பிறகு செமில்லாந்தி நீளமாக, பரிதாபமாக, காதுகளைத் துளைக்கும் வண்ணம் ஊளையிடத்தொடங்கியது.

இருவரும், கிழவியும் நாயும், காலை வரை அப்படியே இருந்தார்கள்.

அந்தோனியோ சவேரினி அடுத்த நாள் காலையில்  அடக்கம் செய்யப் பட்டான், பிறகு, மெல்ல மெல்ல அவனது பெயர் போனிபாசியோ நகரத்தின் புழக்கத்தில் இருந்து மறைய  ஆரம்பித்தது. 

அவனுக்கு உடன்பிறப்புகள் கிடையாது. ஒன்று விட்ட சகோதரர்களும் கிடையாது. அவனுக்காக சொல்லப்பட்ட சூளுரைகளை செயல்படுத்த எந்த ஆணும் கிடையாது.  அவனது தாயைத் தவிர அதைப் பற்றிக் கவலை கொள்ள யாரும் இல்லை.

நீர் இணைப்பின் அக்கரையில்  கரையின் மேலாக ஒரு சிறு வெள்ளைப் புள்ளி போல  ஓர் இடம் தெரிவதை காலையிலிருந்து இரவு வரை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அது லாங்கோசார்தோ, சின்னஞ்சிறு சார்தினிய கிராமம், அங்குதான் தேடப்படும் கோர்சி குற்றவாளிகள் ஒளிந்து கொள்ளும் இடம். அந்தக் குக்கிராமத்தில் ஏறக்குறைய அவர்கள் மட்டுமே வசித்து வந்தனர்.   அவர்களது சொந்தத் தீவுக்கு எதிரே, திரும்பும் காலத்துக்காக காத்துக் கொண்டிருப்பர். அவளுக்குத் தெரிந்திருந்தது, நிகோலஸ் ரவோலதி அங்கு தான் அடைக்கலம் ஆகியிருப்பான் என்று.

நாள் முழுக்கத் தனியாக ஜன்னலருகே அமர்ந்து பழி  வாங்குவதைப் பற்றி சிந்தித்தவாறே அதைப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளால் எப்படிச் செய்ய முடியும் பிறர் உதவி இல்லாமல் ? அவளோ முடியாத நிலையில் உள்ளாள், சாவை நெருங்கிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் சத்தியம் செய்து விட்டாளே, தனது மகனின் உடல் மீது. அவளால் மறக்க முடியவில்லை, காத்திருக்கவும் மனமில்லை. அவளால் என்ன செய்ய முடியும்? அதற்கு மேல் அவளால் இரவில் தூங்க முடியவில்லை. மனதில் நிம்மதி இல்லாமல் போனாள். இடை விடாது சிந்தித்தாள். அவளது காலடியில் நாய் தூங்கி வழிந்து கொண்டு அவ்வப்போது ஊளை இட்டுக் கொண்டிருந்தது. அதன் எஜமானன் இறந்ததிலிருந்து அடிக்கடி அப்படித்தான் செய்கிறது. அவனைக் கூப்பிடுவது போல, ஐந்தறிவோடிருந்தாலும் அதனாலும் மனதைத் தேற்றிக் கொள்ள முடியவில்லை. அழிக்கவே முடியாத நினைவுகளை அது கொண்டிருந்தது.

ஓர் இரவு செமில்லாந்தி ஊளையிடத் தொடங்கிய போது தாயிற்கு திடீரென ஓர் எண்ணம் தோன்றியது, கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான, மிகப் பயங்கரமான எண்ணம். காலை வரை அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். விடிந்ததும் சர்ச்சிற்குப் போனாள். விழுந்து வணங்கினால், கடவுளைத் தனக்கு உதவும் படி வேண்டினாள்தனது தள்ளாத உடம்புக்கு தன் மகன் சாவுக்கு பழிக்குப் பழி வாங்க  வலிமைதர வேண்டினாள்.

தனது வீட்டுக்குத் திரும்பினாள். வீட்டின் புழக்கடையில் நீர் பிடித்து வைப்பதற்கான  பழைய பீப்பாய் ஒன்றிருந்தது. அதைக் கவிழ்த்துக் காலியாக்கினாள் , குச்சிகளையும் கற்களையும் கொண்டு உருட்டி வந்து அதை நாயின் குடிலாக்கினாள். பிறகு வீட்டினுள் நுழைந்தாள்.

ஓய்வில்லாமல் நடந்தாள், தூரத்தில் தெரியும் சார்தினியக் கரையிலேயே அவள் பார்வை நிலைத்திருந்தது. அந்தக் கொலையாளி அங்குதான் இருக்கிறான்.

இரவும் பகலும் நாய் ஊளையிட்டுக் கொண்டே இருந்தது. காலையில் நாய்க்கு கொஞ்சம் தண்ணீரை மட்டும் தட்டில் வைத்தாள், வேறு எதுவும் கிடையாது.

இன்னொரு நாளும் சென்றது. செமில்லாந்தி சோர்ந்து  தூங்கிப்போனது. அடுத்த நாள் அதன் கண்கள் ஒளிர ஆரம்பித்தன சிலிர்த்துக் கொண்டது கட்டிய சங்கிலியை வெறி கொண்டு இழுக்கத் தொடங்கியது.

இத்தனை நாளும் அவள் அதற்கு சாப்பிட ஒன்றும் கொடுக்க வில்லை. அந்த விலங்கு கொடூரமாக குறைக்கத் தொடங்கியது. இன்னொரு இரவும் கழிந்தது.

விடிந்ததும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம்  சிறிது வைக்கோல் கேட்டாள்.   இறந்துபோன தனது கணவனின் கம்பளிகளைக் கொண்டு வைக்கோலை அடைத்து  மனிதனைப் போன்ற உருவம் கொண்ட கொடும்பாவியைச் செய்தாள்.

ஒரு கழியை  நட்டு அதில் கொடும்பாவியைக் கட்டி நாயின் குடிலுக்கு முன் நிற்க வைத்தாள். பிறகு மேலும் சில கம்பளிகளைத் தேடிச் சென்றாள்.

நாய் இந்த சோளக்கொல்லை பொம்மையைப் பார்த்து ஆச்சரியப் பட்டது கூடவே உறுபசியும்  கொண்டது. பிறகு கிழவி கடைக்குச் சென்று சிறிது கறி வாங்கினாள். வீடு திரும்பியதும் புழக்கடையில் நாயக் குடிலுக்கு அருகே அடுப்பு  வைத்து தீமூட்டி கறி சமைக்க ஆரம்பித்தாள். இதனால் தூண்டப்பட்ட பசியுடன் செமில்லாந்திவாயில் நீரொழுக குதித்தது, சமைக்கப் படும் உணவை வெறியுடன் பார்த்தது, உணவின் மணம் நேரே அதன் வயிற்றினுள் சென்றது.

பிறகு கிழவி சமைக்கப் பட்ட கறித்துண்டங்களை பொம்மை மனிதனின் கழுத்தில் இறுக்கிக் கட்டினாள், நாயை அவிழ்த்து விட்டாள்.

ஒரே பாய்ச்சலில் அந்த விலங்கு பொம்மை மனிதனின் கழுத்தை நோக்கித் தாவியது, முன் கால்களை பொம்மை மனிதனின் தோள் மீது கால்களை ஊன்றி கழுத்தைக் கடித்துக் குதறியது. வாயில் சிறிது கறியுடன் கீழே விழுந்தது. மீண்டும் பாய்ந்து கழுத்தைக் கவ்வியது, இப்போதும் சிறிது கறித்துண்டு கிடைத்தது, ஒவ்வொரு முறை பாய்ந்து கடிக்கும் போதும் சிறிது கறி கிடைத்தது. நாயானது பொம்மையின் முகத் தைக் கிழித்து விட்டிருந்தது. கழுத்தை முற்றாகச் சிதைத்து விட்டது.

கிழவி அசையாமல் அமைதியாக ஆவலுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அவ விலங்கை மீண்டும் கட்டிப் போட்டாள். இரண்டு நாட்களுக்கு அதைப் பட்டினி போட்டாள். மீண்டும் இந்தச்  சோதனையைச் செய்தாள்.

மூன்று மாதங்களுக்கு இந்தப் போர்ப் பயிற்சியினை நாயிற்கு அளித்தாள், அது  போராடி கழுத்திலிருந்து உணவை மீட்கும் வித்தையைக் கற்றுக் கொண்டது.  பிறகு நாயினைக் கட்டிப் போடுவதை விட்டு விட்டாள், பொம்மையை நோக்கிக் கை நீட்டினாலே நாய் கழுத்தை நோக்கிப் பாய ஆரம்பித்தது.

கழுத்தில் ஒரு துளி கூட மிச்சம் வைக்காமல் பேராசையுடன் தின்னுமாறு அவள் அதற்குப்  பயிற்சி அளித்தாள்.

பயிற்சி முடிந்ததும் நாயிற்கு பரிசாக உணவும் கொடுத்தாள்.

பொம்மை மனிதனைப் பார்க்கும் போதெல்லாம் நாய்க்குப் பரபரப்பு தொற்றிக் கொள்ளும், தனது எஜமானியைப் பார்க்கும், அவள் கைகளை உயர்த்தி "போ", என்று உரத்த குரலில் கத்துவாள்.

காலம் கனிந்ததாக அவள் நினைத்த போது, சர்ச்சிற்குச் சென்று பாவ மன்னிப்புக் கேட்டாள், ஞாயிறு காலையில் உற்சாகமாக தொழுகை நடத்தினாள். ஆண்களைப் போல் உடுத்திக் கொண்டாள், ஒரு சார்தினிய மீனவனுடன் பேரம் பேசி உடன்படிக்கை செய்து கொண்டாள்,   அவன் அவளையும் நாயையும் நீர் இணைப்பின் அக்கரையில் கொண்டு விட்டான்.

ஒரு பை நிறைய கறித் துண்டங்களைக்   கொண்டு வந்தாள். செமில்லாந்தி இரண்டு நாட்களாக பட்டினி போடப்பட்டு இருந்தது. நாய் மோப்பம் பிடிக்கட்டும் என்றே அவள் அதைச் செய்தாள், அதன் பசியை அது தூண்டிக் கொண்டே இருந்தது.

அவர்கள் லோங்கோசார்தோ வந்து சேர்ந்தார்கள். அந்தக் கோர்சிப் பெண் விந்திவிந்தி  நடந்தாள். ஒரு கடைக்குச் சென்று நிகோலஸ் ரவலோதியைக் கேட்டாள். அவன் தனது பழைய  வேலையை அதாவது தச்சு வேலையைக் கடையின் பின்னால் உள்ள வீட்டில் செய்து கொண்டிருந்தான்.


கிழவி வீட்டின் முன் நின்று கதவைத் திறந்தாள், பிறகு அவனைக் கூப்பிட்டாள்:

"ஹலோ, நிகோலஸ்!"


அவன் திரும்பினான். அவள் நாயை விடுவித்துக்  கத்தினாள், "போ, போ, சாப்பிடு, அவனைச் சாப்பிடு!"


வெறியூட்டப்பட்ட நாய் அவனது கழுத்தை நோக்கிப் பாய்ந்தது. அவன் கைகளால் நாயைப் பற்றி விடுபட முயன்றான், தரையில் உருண்டான். சில நொடிகள் அதிர்ச்சியில் கிடந்தான், தரையைக் கால்களால் உதைத்தான், பிறகு அசைவற்றுப் போனான். செமில்லாந்தி தனது கோரைப் பற்களால் கழுத்தைக் குதறி நாராகக் கிழித்திருந்தது.

தங்கள் வீட்டின் முன் அமர்ந்திருந்த இரண்டு பக்கத்து வீட்டினர், தாங்கள் கண்டதை  நன்றாக நினைவில் நிறுத்தி  இருந்தனர்ஒரு கிழட்டுப் பிச்சைக்காரன் மெலிந்த கருப்பு நாயுடன் வந்ததாகவும்,  அந்த நாய் தனது எஜமானன் வழங்கிய உணவினை உண்டதாகவும்.


இரவில் கிழவி  வீடு திரும்பி இருந்தாள். அன்றிரவு அவள் நன்றாக உறங்கினாள்.



********

Friday, January 14, 2011

Повесть о том, как один мужик двух генералов прокормил : எப்படி ஒரு பாமரன் இரண்டு அரசு ஊழியர்களுக்குச் சோறு போட்டான்?



மூலம் : மிக்ஹில்  எவ்க்ரபோவிச்  சல்ட்டிகோவ் -ஷ்செட்ரின் 
தமிழில் : மா. புகழேந்தி 


முன்னொரு காலத்தில் இரண்டு அரசு ஊழியர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மரமண்டைகள், ஒரு நாள் திடீரென  யாருமே இல்லாத ஒரு தீவுக்குள் எதோ மாயக் கம்பளத்தில் சென்றது போல் கொண்டு விடப்பட்டனர்.

அவர்கள் தங்களது முழு வாழ்க்கையையும் பதிவேடுகள் பேணப்பட்ட ஒரு அரசு அலுவலகத்திலேயே கழித்து இருந்தனர். அங்கேயே உண்டு உறங்கி வளர்ந்து வயதாகி வாழ்க்கையை ஓட்டி வந்தனர், அவர்களுக்கு அந்தத் துறையைத் தவிர உலகத்தில் ஒன்றுமே தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், "அய்யா, தங்களின் மேலான கவனத்துக்குப் பணிந்தனுப்பப் படுகிறது....."

ஆனால் அவர்களது துறை ஒருநாள் ஒழிக்கப்பட்டது, அவர்களது சேவை இனித் தேவை இல்லை என்று சொல்லி சுதந்திரமாக விடப் பட்டனர். ஒய்வு பெற்ற இருவரும் செயின்ட் பீடர்ச்பர்க்கில் உள்ள போத்யாசெச்கைய வீதிக்குக் குடிபெயர்ந்தனர். ஒவ்வொருவருக்கும் வீடும் சமையல்காரனும் ஓய்வூதியமும் இருந்தது.

ஆளில்லாத் தீவில் விழித்துப் பார்த்தபோது இருவரும் ஒரே இடத்தில் இருப்பது தெரிந்தது. முதலில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை, எதுவுமே நடவாதது போல் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

"அய்யா, என்ன ஆச்சரியப் படும்படியான கனவு", ஓர்  ஊழியர் சொன்னார், "நான் எதோ ஒரு ஆளில்லாத் தீவில் இருப்பதாகக் கனவு கண்டேன்."  இதைச் சொல்லி முடிப்பதற்குள் துள்ளி எழுந்தார். இன்னொருவரும் அப்படியே குதித்து எழுந்தார்.

"கடவுளே இதுக்கு என்ன அர்த்தம், நாம எங்கே இருக்கிறோம்? " , அவர்கள் திகைத்துப் போய்க்  கூச்சலிட்டனர்.

அவர்கள் இருவரும் அது கனவல்ல என்பதற்காகத் தங்களைக்  கிள்ளிப் பார்த்துக் கொண்டனர். பிறகு அந்த சோகமான உண்மையை உணர்ந்து கொண்டனர்.

அவர்கள் முன்னால் பெருங்கடல் விரிந்து இருந்தது, பின்னால் சிறு நிலப் பரப்பு இருந்தது, அதற்கும் பின்னால் மீண்டும் பெருங்கடல். அவர்கள் அழ ஆரம்பித்தனர் -- அவர்களது துறை கலைக்கப்பட்ட பின் முதன்முறையாக. 

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் இரவு உடையிலேயே இருப்பதை அறிந்தனர். 

"இந்நேரம் நாம காப்பி குடிச்சுகிட்டு இருக்கணும்" , ஒருவர் சொன்னார். மீண்டும் அந்த எதிர்பாராத சூழ்நிலையை எண்ணி இரண்டாவது முறையாக விம்மினார். 

"நாம இப்ப என்ன செய்யிறது?" தேம்பியபடி கேட்டார் ஒருவர், "ஒரு அறிக்கை அனுப்பினாலும் அதனால என்ன நடந்துவிடும்?" 

"அய்யா உங்களுக்கு ஏதாவது தெரியுமா? " இன்னொருவர் கேட்டார், "நீங்கள் கிழக்குப் பக்கமாகப் போங்கள், நான் மேற்குப் பக்கமாகப் போகிறேன், மாலையில் திரும்பி இங்கே வரலாம், ஏதேனும் இருவரும் கண்டுபிடிச்சு இருப்போம்." 

கிழக்கு எது மேற்கு எது என்று கண்டறிய முற்பட்டார்கள். அவர்களது துறைத் தலைவர் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது, "கிழக்கு எது என்று தெரியணும்னா உங்களது முகத்தை வடக்குப் பக்கமாகத் திருப்புங்கள், உங்களது வலது புறம் இப்போ இருப்பது தான் கிழக்கு." ஆனால் எது வடக்கு என்று அறிய முடியாமல் வலது புறமும் இடது புறமும் திரும்பினார்கள் அறிய முடியாமல் எல்லாப் பக்கமும் பார்த்துக் கொண்டு நின்றனர்.

அரசு அலுவலகத்தில் பதிவேடுகளுடனேயே தங்களது வாழ்க்கையைக் கழித்து விட்டதால் அவர்களது முயற்சி அனைத்தும் தற்போது வீணானது.

"அய்யா எனக்கு என்ன தோணுதுன்னா நீங்க வலது பக்கமாகப் போங்கள் நான் இடது பக்கமாகப் போகிறேன். " , ஒருவர் சொன்னார். அவர் அந்தத்துறையில் மட்டுமல்லாமலும் முன்பு ஒரு பள்ளியில் கையெழுத்து பயிற்று விக்கும்  ஆசிரியராகவும் பணியாற்றி இருந்தார், இன்னொருவரிடம் இருப்பதை  விடப் புத்திசாலித் தனம் கூடுதலாகவும் தெரிந்தது.

சொன்னது போலவே செய்தார்கள். ஒருவர் வலது புறம் சென்றார். கனிகள் நிறைந்திருந்த மரங்களைக் கண்டார். மகிழ்ச்சியாக ஆப்பிளைப் பிடுங்க முயன்றார், ஆனால் அவைகள் மிக உயரத்தில் இருந்தன, மரத்தின் மேல் ஏறித்தான் பறிக்க வேண்டும். அவரது முயற்சி பலிக்கவில்லை. அவரால் அவரது இரவு உடையைக் கிழிக்க மட்டுமே முடிந்தது. கீழே ஓடிக்கொண்டு இருந்த நீரோடையில் விழுந்தார். அது மீன்களால் நிறைந்து இருந்தது. 

"போத்யாசெச்கா வீதியில் இதெல்லாம் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்", நினைத்துப் பார்த்தார், வாயில் எச்சில் ஊறியது. பின் காட்டுக்குள் சென்றார், அங்கே காட்டுக் கோழிகள், குழி முயல்கள் காட்டுப் பறவைகள் எல்லாம் கண்டார். 

"கடவுளே எவ்வளவு சாப்பிடுவதற்கு இருக்கு", கத்தினார். அவரது பசி மிகவும் அதிகமானது.

ஆனால் வெறுங்கையுடன் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பினார். அடுத்தவர் இவருக்கும் முன்னரே அங்கு காத்திருந்தார்.

"அய்யா எப்படி இருந்தது? ஏதாவது கொண்டு வந்தீங்களா?"

"மாஸ்க்கோ கெசட் பழைய பேப்பரைத் தவிர ஒன்னும் இல்லை."

இருவரும் கீழே படுத்து உறங்க ஆரம்பித்தார்கள். அவர்களது வெறும்  வயிறு அதை அனுமதிக்கவில்லை. அவர்களது பாதித் தூக்கத்தை தங்களது ஓய்வூதியத்தை யார்  வாங்குகிறார்களோ என்ற கவலையும் மீதித் தூக்கத்தை பகலில் கண்ட கனிகள், மீன்கள், காட்டுக் கோழிகள், குழி முயல்கள் பற்றிய நினைவுகளும் கெடுத்துக் கொண்டிருந்தது.

மனிதனுக்குத் தேவையான உணவுகள்  பறக்கிறது நீந்துகிறது மரங்களில் காய்த்துக் குலுங்குகிறது. அய்யா, யார் இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தார்கள்?", ஒருவர் சொன்னார். "உண்மையைச் சொல்லனும்னா நான் கூட காலை உணவுகள் மேசையின் மேல் திடீரென்று தோன்றுகிறது என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன்", இன்னொருவர் சொன்னார்.

"நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா கோழியைச் சாப்பிடவேணும்னா முதல்ல அதைப் பிடிக்கணும், கொல்லனும், பொங்கு பொசுக்கனும், அப்புறம் சமைக்கணும் . ஆனால் அதை எல்லாம் எப்படிச் செய்யிறது?" 

"ஆமாம், எப்படி அதையெல்லாம் செய்யிறது?", திருப்பிக் கேட்டார் இன்னொருவர்.

அமைதியானார்கள், பின் தூங்கிப் போனார்கள், இருப்பினும் பசி அவர்களது தூக்கத்தை  விரட்டியது. அவர்களது கண் முன்னே சுவையாகச் சமைக்கப்பட்ட கோழிகள், வாத்துக்கள் ஆகியவை ஊறுகாய்களுடனும்  ஆலிவ் எண்ணெய்யுடனும் அழகாக அலங்கரிக்கப்பட்டுத் தெரிந்தது.

"என் காலணிகளை நானே சாப்பிட்டு விடுவேன் போல் இருக்கு" , ஓர்  ஊழியர் சொன்னார்.

"அதொண்ணும் மோசமில்லை மென்மையான கை உறைகளையும்  கூடச் சாப்பிடலாம்", இன்னொருவர் சொன்னார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களது பார்வையில் பேய்த்தனம் மின்னியது, பற்கள் அடித்துக் கொண்டன, நெஞ்சிலிருந்து பரிதாபமான ஒலி வெளிப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர்  பற்றிக் கொண்டனர், இருவரும் அச்சமடையக் கூடிய பைத்தியக் காரத்தனமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டனர். அங்கு முக்கலும் முனகலுமான ஒலி கேட்டது. கை எழுத்து ஆசிரியராக இருந்த அரசு ஊழியர் தனது சகாவினைக் கடித்துக் கொண்டிருந்தார். அங்கே வழிந்த ரத்தம் இருவரையும் நினைவுக்குக் கொண்டு வந்தது.

"கடவுளே காப்பாத்துங்க", ஒரு சேரக் கூச்சலிட்டனர், "நாங்க ஒருத்தரை ஒருத்தர் சாப்பிட்டிருவம் போல இருக்குதே. ஐயோ எப்படி இப்படி நடந்தது? எந்தப் பேய் எங்களுக்குள்ளே புகுந்தது?"

"ஐயோ ஒருத்தருக்கொருத்தர் வேடிக்கை காட்டி நேரம் போக்கணும் போல இருக்கே. இல்லாட்டி இங்கே கொலையும் சாவும் விழுந்திடும்  போல இருக்கே . " , ஓர் அரசு ஊழியர் சொன்னார்.

"நீங்க ஆரம்பிக்கலாம்", இன்னொருவர் சொன்னார்.

"உங்களால சொல்ல முடியுமா? ஏன் சூரியன் உதிச்ச பிறகு மறையுதுன்னு? மறைஞ்ச பிறகு உதிக்க வேண்டியது தானே?"

"வேடிக்கை காட்டாதீங்க. முதல்ல நீங்க தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறீங்க அப்புறம் புறப்பட்டு ஆபீஸ் போறீங்க வேலை செய்யுறீங்க, பிற்பாடு ராத்திரி வந்து தூங்கப் போறீங்க."

"ஏன் வேற மாதிரி சிந்திக்கக் கூடாது? முதல்ல தூங்கப் போறீங்க நல்ல நல்ல கனவாக் காணுறீங்க, அப்புறம் எழுந்துக்குறீங்க."

"ஆமா நல்லது தான். ஆனா நான் வேலைக்குப் போயிட்டு இருந்த போது, இப்படித்தான் நினைச்சேன் , 'இப்ப விடிஞ்சாச்சு , பகல் வந்திடும், அப்புறம் மத்தியானச் சாப்பாடு வந்திடும், அதுக்கப்புறம் கடைசியாத் தூங்கறதுக்கு நேரம் வந்திடும்.'"

'மத்தியானச் சாப்பாடு' என்ற வார்த்தைகள் பகலில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் நினைவு படுத்தியது, இருவரையும் சோகத்தில் ஆழ்த்தியது, அவர்களது உரையாடல் அத்துடன் முடிவுக்கு வந்தது.

"என்கிட்டே ஒரு தடவை  டாக்டர் ஒருத்தர் சொல்லி இருக்கார் என்னன்னா மனித உடல்ல சுரக்குற சுரப்புக்களே அவனை ரொம்ப நாளைக்கு வாழ வைக்கும்னு", ஓர்  ஊழியர் மீண்டும் ஆரம்பித்தார்.

"அப்படீன்னா என்ன அர்த்தம்."

"பெருசா ஒண்ணுமில்ல. இங்க பாருங்க ஒரு சுரப்பு சுரந்து, மத்த சுரப்புகளைத் தூண்டி  சுரக்க வைக்கும், அப்படியே அதுகளும் மத்ததைத் தூண்டும், கடைசியா எல்லாச் சுரப்புகளும் உட்கொள்ளப் படும்."

"அதுக்கப்புறம் என்ன நடக்கும்?"

"அதுக்கப்புறம் உணவு வந்து அதனோட பாதையில எடுத்துக்கப்படும் ."

"பிசாசு!"

அவர்கள் எதைப் பற்றி பேச ஆரம்பித்தாலும்  சாப்பிடுவதைப் பற்றியே முடிகிறது, அது அவர்களது பசியை அதிகப் படுத்திக் கொண்டே போனது. அதனால் அவர்கள் பேசுவதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தனர், பிறகு கண்டெடுக்கப் பட்ட மாஸ்கோ கெசட்டை ஆர்வத்துடன்  படிக்கலானார்கள்.

மேயர் விருந்தளித்தார்

சுமார் நூறு பேருக்கு உணவு மேசை தயார் செய்யப்பட்டு இருந்தது. அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அது விஞ்சி இருந்தது. மிகத் தொலைவில் இருந்த மாகாணங்களில் இருந்து இம் மாபெரும் விருந்துக்கு வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த பரிசுகளைக் கொண்டு வந்திருந்தனர். ஷேக்ச்னாவிலிருந்து பொன் நிற மீன்களும் காகசீயக் காடுகளில் இருந்து வெள்ளி நிற பீசன்ட் பறவைகளும் நன்கு சமைக்கப்பட்டும் குளிர் காலங்களில் அதிசயமான ஸ்ட்ராபெர்ரிகளும்........"

"ஐயோ போதும் படிக்கிறதை நிறுத்துங்க அய்யா! படிக்கறதுக்கு வேற ஒண்ணுமே  இல்லையா?"  இன்னொரு ஊழியர் பரிதாபமாகக் கத்தினார். தனது சகாவின் கைகளில் இருந்து செய்தித் தாளைப் பிடுங்கி வேறு ஒரு செய்தியைப் படிக்கலானார்.

துலாவில் உள்ள நமது செய்தியாளர் அளித்த தகவல், உபாவில் நேற்று ஒரு ஸ்டர்ஜியான் வகை மீன் பிடிக்கப் பட்டது. (இதற்கு முந்தைய நிகழ்வு இங்குள்ள மிக மூத்தவர்களுக்குக்   கூட நினைவில் இல்லை, குறிப்பிடத்தக்க செய்தி என்ன வென்றால் அவர்கள் இம் மீனில் முன்னாள் காவல் துறை அலுவலரை அடையாளம் கண்டது தான்.) இதனால் அவர்களது சங்கத்தில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. விருந்துக்குக் காரணமானதை பெரிய மரத்தட்டில் வைத்து ஊறுகாய்களால்  அலங்கரித்து பரிமாறினார்கள். மீனின் வாயில் கொத்தமல்லித் தழைக் கொத்தினை    வைத்து இருந்தனர். இதைப் பொறித்தெடுத்த டாக்டர் பா.... அனைவருக்கும் இம் மீனின் ஒரு துண்டாவது கிடைக்குமாறு பார்த்துக் கொண்டார். இத்துடன் பரிமாறப் பட்ட தட்டுக்களில் வழக்கத்தை விட சுவையாகவும் மணமாகவும் உணவுகள்......."

"மன்னிக்கணும் அய்யா, எனக்கு என்ன தோணுதுன்னா நீங்க கூட செய்தியைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இல்லைன்னு." , முதல் ஊழியர் இடைமறித்தார், செய்தித்தாளைக் கைப்பற்றி மீண்டும் படிக்க ஆரம்பித்தார். "விடாகாவில் வாழும் மிகவும் வயதான ஒருவர்மீன் சூப் வைப்பதைப் பற்றி புதிய உயர்தரமான முறையைக் கண்டு பிடித்துள்ளார்; உயிருள்ள ஒரு காட் மீனை அதன் ஈரல், கோபத்தால் பொங்கும் அளவுக்கு இரும்புக் கழியால் அடித்து...."

ஊழியர்களின் தலை சோகத்தில் தாழ்ந்தது.  அவர்களது பார்வை  எங்கெல்லாம் விழுந்ததோ அங்கெல்லாம் சாப்பிடுவது தொடர்பான தகவல்களே இருந்தன. அவர்களது சிந்தனைகளோ அபாயகரமாக இருந்தது. உணவு தொடர்பான எந்த ஒரு சிந்தனையிலிருந்தும் தங்களது மனத்தைக் கட்டுப் படுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை, அவர்களது ஆசையை நிறுத்திக் கொள்ள முடியவில்லை     சாப்பிடவேண்டும் என்ற ஏக்கம் தடுக்க முடியாத வேகத்தில் திரும்பியது .

முன்பு கையெழுத்து ஆசிரியராக இருந்த ஊழியருக்கு திடீரென புத்துணர்ச்சி தோன்றியது.

"நான் கண்டு புடிச்சிட்டேன்!", சந்தோசத்தில் கத்தினார், "இதுக்கு என்ன சொல்லப் போறீங்க, அய்யா? நாம் ஏன் ஒரு இளிச்சவாயனைக்  கண்டு பிடிக்கக் கூடாது?"
"இளிச்சவாயன் , அய்யா. எந்த மாதிரி?"
"சாதாரணமான இளிச்சவாயன்  தான். பாமரன், எல்லோரையும்  போல. அவன் நமக்கு காலை உணவு செஞ்சு கொடுப்பான், நமக்காக காட்டுக் கோழிகளையும் மீன்களையும் பிடிச்சிட்டு வருவான்."
"ம்ம் சரி. எங்க போய் அவனைத் தேடுறது? யாருமே இங்கில்லாத போது."
"ஏன் இங்கில்லை? பாமரன்கள் எல்லா இடத்திலையும் இருக்காங்க. ஆனா அவுங்களைத் தேடிக்கண்டு புடிக்கணும். இங்க நிச்சயமா ஒருத்தன் வேலைக்குப் போகாம ஒளிஞ்சுகிட்டு  இருப்பான்.

இந்தத் திட்டம் அவர்களுக்கு உற்சாகத்தைக்  கொடுத்தது உடனே குதித்தெழுந்து பாமரனைத் தேடத் தொடங்கினர்.

நீண்ட நேரத்திற்கு  அவர்கள் அந்தத் தீவு முழுக்க அலைந்து திருந்தார்கள், தேவைப் பட்டது எதுவும் கிடைக்க வில்லை, கடைசியாக ஓரிடத்தில் கருப்பு ரொட்டி மணமும், பழைய ஆட்டுத்தோலின் வாசமும், காற்றில் மிதந்து வந்து அவர்களது மூக்கைத் துளைத்துதான் வந்த திசையில் அவர்களை இழுத்தது. அங்கே ஒரு மரத்தடியில் தடித்த உருவம் கொண்ட பாமரன் போல் தெரிந்த ஒருவன் தலைக்கடியில் கைகளை வைத்து, ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். வேலை செய்வதற்கு சங்கடப்பட்டு தைரியமாக வெட்கமேயில்லாமல் இந்தத் தீவில் அவன் ஒளிந்து கொண்டிருக்கிறான், என்பது தெளிவானது. ஊழியர்களது ஆத்திரம் எல்லை கடந்தது.

"என்ன சோம்பேறி இவன்! இங்க வந்து தூங்கீட்டு இருக்கே", அவனை அதட்டி எழுப்பினர், "வேலை செய்யறதுக்கு ஒன்னும் இல்லையா? இங்க ரெண்டு பேர் பசியால துடிச்சிட்டு இருக்கோம், நீ பாட்டுக்குத் தூங்கிகிட்டு இருக்கே. எழுந்திரு, எழுந்திரு."

அவன் எழுந்து தன முன்னே நிற்கும் இரண்டு பேரையும் பார்த்தான், அவனுக்கு முதலில் அங்கிருந்து ஓடி விட வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றியது, ஆனால் இரண்டு ஊழியர்களும் அவனைப் பிடித்துக் கொண்டனர்.

அவன் விதியை நொந்து கொண்டு வேலை செய்ய வேண்டி வந்தது.

முதலில் மரத்தின் மேல் ஏறி ஊழியர்களுக்கு நன்கு  பழுத்த பல ஆப்பிள்களைப்  பிடுங்கிப் போட்டான். தனக்கு அழுகிய ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டான். பிறகு குழி தோண்டி உருளைக் கிழங்குகளைக் கொண்டு வந்தான். பிறகு இரண்டு கழிகளை உராய்த்து நெருப்பு மூட்டினான். தனது சொந்த முடியில் ஒரு கண்ணி செய்து காட்டுக் கோழிகளைப் பிடித்தான். நெருப்பில் வாட்டியும் சுட்டும் பல வகையான உணவுகளைத் தயார் செய்தான். ஊழியர்கள் இருவரின் மனதில் இந்த சோம்பேறிக்கு எதுவும்  சப்பிடக்கொடுக்கக் கூடாது  என்ற எண்ணம் தோன்றியது.

அவனது வேலையைக் கண்ணுற்ற ஊழியர்கள் மனதுக்குள் மகிழ்ந்தனர். அவர்கள் இதற்கு முன்னர்  பசியால் வாடியதை ஏற்கனவே மறந்து போனார்கள், இப்போது நினைத்துக் கொண்டார்கள், " அரசு ஊழியராக இருப்பதில் என்ன நன்மை என்று பாருங்கள். அவர்களுக்கு எந்தக் கெடுதலும் நடக்காது."

"உங்களுக்குத் திருப்தியா?" , அவன் கேட்டான்.
"உன் வேலையைப் பாராட்டுகிறோம்", அரசு ஊழியர்கள் சொன்னார்கள்.

"என்னைக் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க அனுமதிப்பீங்களா?"

"தாராளமாப் போ போய் ஓய்வெடு, ஆனா அதுக்கு முந்தி நீ ஒரு கயிறு தயாரிச்சுக் கொடுக்கணும்."

அவன் காட்டில் கிடைத்த செடி கொடிகளை தட்டித் தட்டி கட்டிக் கட்டி அன்று மாலைக்குள்  தடித்த கயிறு ஒன்றினைச் செய்து கொடுத்தான். அரசு ஊழியர்கள் அந்தக் கயிற்றில் அவனை ஓடி  விடாமல் இருக்க ஒரு மரத்தோடு கட்டி வைத்தனர். பின்னர் தூங்கச் சென்றனர்.

அப்படி ஒவ்வொரு நாளாகக் கழிந்தது, அவனும் தன் வெறுங்கையாலேயே நன்கு சமைக்கப் பழகிக் கொண்டான். அரசு ஊழியர்கள் நன்கு கொழுத்து மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்களது மகிழ்ச்சி பெருகியது. தங்களது ஓய்வூதியம் செயின்ட் பீடர்ச்பர்கில் தங்களது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் ஒரு காசு கூட செலவாகவில்லை.

"அய்யா உங்களது கருத்து என்ன", காலை உணவு முடித்த கையோடு ஓர் ஊழியர் கேட்டார். "பேபெல் கோபுரம் பற்றிய கதை உண்மையா? அது வெறும் கற்பனைன்னு நீங்க நினைக்குறீங்களா?"

'அப்படியில்லை அய்யா, அது உண்மையா நடந்திருக்குமுன்னு நினைக்கிறேன்.

"உலகத்துல  பல வேறு மொழிகள் இருக்குறதுக்குக் என்ன காரணம் ?"

"வெள்ளங்கள் கூட நிச்சயமாத்  தோன்றி இருக்கு."

"வரலாற்றுக்கு முற்பட்ட, பைபிளில் சொல்லப்பட்ட டிலுவியன் காலத்துக்கு முற்பட்ட விலங்குகளைப் பற்றி நீங்கள் விளக்க முடியுமா? அத விடுங்க... மாஸ்கோ கெசட் என்ன சொல்லுதுன்னா...." நிழலில் அமர்ந்து மாஸ்கோ கெசட்டின் தாட்களை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை  படித்து முடித்தார்கள். மாஸ்கோ, துலா, பென்சா மற்றும் ரியாசான் நகரங்களில் நடந்த விழாக்களைப் பற்றிப் படித்தார்கள், அங்கு பரிமாறப் பட்ட உணவு வகைகளை எந்தச் சிரமமுமின்றிப் படித்தார்கள்.

எவ்வளவு நாட்கள் இப்படி வாழ்ந்தார்கள் என்று கணக்கிட முடியாது. இது அவர்களுக்கு சலிப்பூட்ட ஆரம்பித்தது. செயின்ட் பீடர்ச்பர்கில் இருக்கும் தங்களது சமையல் காரனை அடிக்கடி நினைத்துக் கொண்டனர் , ரகசியமாய்க் கண்ணீர் விட்டனர்.

'அய்யா நான் நினைக்கிறேன்  போத்யாசெச்காயா வீதி  இந்நேரம் எப்படி இருக்கும்?" , ஒரு அரசு ஊழியர் இன்னொருவரைப் பார்த்துக் கேட்டார்.

'ஐயோ அதப் பத்திப் பேசாதீங்க. நான் ஏற்கனவே வீட்டு நினைப்பாவே இருக்கேன்."

"இங்க இருக்குறது நல்லாத் தான் இருக்கு. இந்த இடத்துல ஒரு குறையும் இல்ல. ஆனாலும் ஆட்டுக்குட்டிக்குத் தாய் நினைப்பாவே இருக்கு. அழகான சீருடையும் நினைக்கப் பாவமா இருக்கு."

'ஆமாம் உண்மை தான் நான்காம் நிலை சீருடை வேடிக்கையல்ல. அதில் இருக்கும் தங்க நிற வேலைப்பாடு மட்டும் போதும் ஒருத்தனையும் யோசிக்க விடாது."

இப்போது அவர்கள் பாமரனை எப்படியாவது போத்யாசெச்காயா வீதியில் தங்களைக் கொண்டுபோய் விடு என்று நச்சரிக்கத் தொடங்கினர், என்ன ஆச்சரியம் என்றால், அந்தக் பாமரனுக்கு  போத்யாசெச்காயா வீதியைப் பற்றிக் கூடத் தெரிந்து இருந்தது. ஒரு முறை அவன் அங்கு பீரையும் மதுவையும் வரை முறை இல்லாமல் குடித்தான், குடிகாரர்கள் சொல்வது போல் அவன் வாய்க்குள் போகாமல் தாடி வழியாக  அது  வழிந்தோடியது.

அரசு  ஊழியர்கள் மகிழ்ந்து போய்ச் சொன்னார்கள், " நாங்கள் போத்யாசெச்காயா வீதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள்"

"நானும் அது போல் ஒருவன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா? கூரையில் இருந்து தொங்கும் கயிறில் தொங்கியபடி சுவர்களுக்கு வெள்ளை அடித்துக் கொண்டு இருப்பேன். கூரைகளில் தவழ்ந்து கொண்டு வேலைகள் செய்வேன், அப்படிப் பட்டவனாக்கும் நான்" , என்று சொன்னான் பாமரன்.

தன்னுடன் கருணையுடன் நடந்து கொள்ளும் அரசு ஊழியர்களை எப்படி இன்னும் மகிழ்விப்பது என்று பாமரன் மனத்தில் அசை   போட்டான் .
சோம்பேறிகள், இது வரை அவனுடைய வேலையைக் கடிந்து கொள்ள வில்லை குற்றம் சொல்லவில்லை .

மெய்யாலுமே அவன் வெற்றிகரமாக ஒரு கப்பலைக் கட்டி முடித்தான். அது கப்பலென்று  சொல்ல முடியாவிட்டாலும் கூட ஒரு மிதவையாக இருந்தது. அது அவர்களை கடலில் மிதந்து போத்யாசெச்காயா வீதிக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு தகுந்ததாக இருந்தது.

"பாத்துப் போ, நாயே , எங்களை மூழ்க விட்டுறாதே ", மிதவை அலைகளால் அலைக்கழிக்கப் பட்டு மேலும் கீழும் அசைந்த போது அரசு ஊழியர்கள் சத்தம் போட்டனர்.

"கவலைப் படாதீங்க. எங்களை மாதிரி பாமரங்க இந்த மாதிரி வேலையெல்லாம்   நல்லா செய்து பழகி இருப்போம்." ,

பயணத்துக்குத் தேவையான எல்லா வேலையையும் செய்தான் பாமரன்.

நீரில் நீந்திய நீர்ப்பறவைகளைப் பிடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அரசு ஊழியர்களுக்கு சமைத்துப் போட்டான். பிறகு துடுப்புப் போட்டு மிதவையை ஓட்டலானான்.

 வரும் வழியில் அரசு ஊழியர்கள் அச்சப் பட்டதையோ, புயலால் மிதவை பாதிக்கப்  பட்டு மிதவை கவிழப் போனபோது ஒன்றுமே செய்யாதிருந்த முரட்டு பாமரனைக்  கண்டபடி திட்டியதையோ, சொல்லவோ விளக்கவோ முடியாது. இருந்தாலும் பாமரன் துடுப்புப் போடுவதிலும் கடல் மேல்தள மீன்களைப் பிடித்து அவர்களுக்கு சமைத்துப் போடுவதிலும் கண்ணும் கருத்துமாய் இருந்தான். கடைசியாக அவர்கள் கரையைக் கண்டார்கள். சிறிது நேரத்தில் புகழ்பெற்ற கேதரின் கால்வாயை அடைந்தார்கள்.  என்ன சந்தோசம், அவர்கள் கடைசியாக போத்யா செஸ்காயா வீதியினையும் அடைந்தார்கள். நன்கு உண்டு கொழுத்திருந்த அரசு ஊழியர்களான தங்களது எஜமானர்களைப் பார்த்த போது சமையல் காரர்கள் மனதுக்குள் மகிழ்ந்தார்கள்.

அரசு ஊழியர்கள் பிறகு காப்பி குடித்தார்கள் ரொட்டி தின்றார்கள், பிறகு சீருடை அணிந்து ஓய்வூதியம் பெறக் கருவூலம் போனார்கள். எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பது தனிக் கதை சொல்லவோ விளக்கவோ முடியாது. பாமரனை  மறந்ததையும் சொல்லமுடியாது. இருந்தாலும் அவர்கள் அவனுக்கு ஒரு குவளை விஸ்கியும் ஐந்து கொபெக்கும் கொடுத்தார்கள். பாமரன் மகிழ்ந்து போனான்.

******