Злоумышленника : குற்றம்புரிந்தவன்



மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி


நார் இழைகளால் ஆனா மேல் சட்டையையும் கிழிந்து தைக்கப்பட்ட கால் சட்டையையும் உடுத்திக் கொண்டு நின்ற  மெலிந்து ஒல்லியான அந்த விவசாயத் தொழிலாளியை விசாரணை நீதிபதி கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருந்தார். அவனது முகத்தில் அம்மைத் தழும்பும் முடியும்  மண்டிக் கிடந்தது, அவனது கண்கள் வெளியே தெரியாத அளவுக்கு புருவம் அடர்ந்தும் முகம் சோகத்தில் வீங்கியும் இருந்தது. அவனது தலை முடி வாரப்படாமலும் சிக்குடனும் இருந்தது, அது அவனுக்கு  கசப்பான சோகத்தைக் கூட்டிக் காட்டியது. வெறுங்காலுடன் நின்றுகொண்டு இருந்தான்.

"டெனிஸ் க்ரிகோர்யேவ்" நீதிபதி ஆரம்பித்தார். "பக்கத்தில் வா, கேட்கிறதுக்கு பதிலைச் சொல்லு. ஜூலை ஏழாம் தேதி ரயில்வே காவலாளி, இவான் செம்யோநோவித்ச் அகின்போவ் , தண்டவாளத்தைக் காவல் காத்துக் கொண்டு இருந்தபோது நூற்றி  நாற்பத்து ஓராவது மயிலில் தண்டவாளங்களை இணைக்கும் கட்டைகளில் இருந்து நீ நட்டுகளைக் கழற்றிக் கொண்டு இருந்தாய். இங்க பார் அந்த நட்டு. மேற்கண்ட காரணத்துனால உன்னைப் பிடிச்சிட்டு வந்தாங்க. அப்படியா?"
"ய்யன்னா ?"
"அகின்போவ் சொன்னது சரியா?"
"இருக்கலாம்"
"சரி எதுக்கு நட்டைக் கழற்றினாய்?"

"ய்யன்னா ?"
"ய்யன்னா அப்படீங்கறதை விடு கேள்விக்கு மட்டும் பதிலைச் சொல்லு. எதுக்கு நட்டைக் கழற்றினாய்?"
"எனக்குத் தேவை  இல்லை யின்னு சொன்னா எதுக்கு நான் கழற்றுகிறேன்?", கூரையைப் பார்த்துக் கொண்டு தவளையைப் போல கரகரத்த குரலில் சொன்னான்.
"அந்த நட்டை வச்சு என்ன செய்யப் போகிறாய்?"
"நட்டு? அதை வச்சு நாங்க எங்க பிழைப்புக்கு தூண்டிலுக்கு எடையா பயன்படுத்தறோம்"
"யாரெல்லாம் 'நாங்க'"?
"நாங்க கிளிமொவின் விவசாயக் கூலிகள், அவ்வளவு தான்."
"இங்க கவனி...என்னை முட்டாளாக்காதே, அர்த்தத்தோடு பேசு, பொய்  சொல்றதுல பிரயோசனம் இல்லை, எடையா எப்படி பயன்படுத்துவீங்க?"
"குழந்தையா இருந்த காலத்திலிருந்து நான் பொய்யே பேசியதில்லை. இப்ப சொல்ல வைக்கிறாங்க ..." டெனிஸ் கண்களைப் படபடவென  அடித்துக்கொண்டு முணுமுணுத்தான். "ஆனால் நீங்க எடையே போடாமல் தூண்டில் முள்ளில் புழுவை மாட்டி எப்படி நீருக்குள்ள மூழ்க வைப்பீங்க எஜமான். எடை இல்லாமல் அது தண்ணீரில் மூழ்குமா? "நான் பொய்  சொல்றனா?" ஏளனமாகச் சிரித்தான் டெனிஸ்.புழு நீரின் மேல் நீந்தினால் அதுனால என்ன பிரயோசனம்? பெர்ச், பைக் அப்புறம் ஈல் மீன்கள் எல்லாம் நீரின் ஆழத்துல தான் இருக்கும். மேல்தளத்து தண்ணியில மிதக்கிரதைக் ஷில்லிச்பேர்  மீன்கள் தான் சாப்பிடும். அதுகளுக்கு நிறைய இடம் வேணும். எங்க ஆற்றிலே அதுகள் இல்லை. "

"இப்ப எதுக்கு என்கிட்டே ஷில்லிச்பேர் மீன்களைப் பற்றிச் சொல்கிறாய்?"

"ய்யன்னா ? ஏன் நீங்கதானே அதைப்பத்திக் கேட்டீங்க! வலை போட்டு மீன் பிடிக்கிறதும் எங்க ஊர்ல இருக்கு. அப்பாவிப் பசங்க தான் எடை போடாமல் மீன் பிடிப்பாங்க! புரிஞ்சுக்கத் தெரியாதவன் தான் மீன் பிடிக்க எடை போடாமல் தூண்டிலோடு போவான். முட்டாள்களுக்கு எதுக்கு சட்டம் ? "

"அப்படீன்னா நீ உன் தூண்டிலுக்கு எடை போடத்தான் நட்டைக் கொண்டுபோனாய்?"

"பின்ன வேற எதுக்கு விளையாடவா?"
"ஆனால் நீ ஏன் வேறு எதாவதை.... ஆணி மாதிரி, தோட்டா மாதிரி...ஈயம் போல..."
"ஈயத்தை எல்லாம் சாலையில் கண்டெடுக்க முடியாது, அதை நீங்க வாங்கணும். ஆணி எதுக்கும் உதவாது. நட்டை விட நல்ல பொருள் உங்களால் சொல்ல முடியாது. அது கனமானது, ஓட்டையும் இருக்குது. "

"அவன் ஒண்ணுமே தெரியாதது போல் நடிக்கிறான், எதோ நேற்றுத்தான் பிறந்தவன் போலவும், சொர்கத்திலிருந்து குதித்தவன் போலவும் பேசுகிறான். மரமண்டையே புரிஞ்சுக்க மாட்டாயா இந்த நட்டைக் கழற்றினதால என்ன நடக்கும் என்று? காவலாளி மட்டும் இதைப் பார்க்கவில்லை என்றால் தண்டவாளம் பிரிஞ்சிருக்கும் ரயில் கவிழ்ந்து போயிருக்கும். பயணிகள் எல்லாம் பலியாகி இருப்பார்கள். நீ அவங்களைக் கொன்று இருப்பாய்"

"கடவுளே மன்னிக்கணும். நான் எதுக்கு அவங்களைக் கொல்லனும்? நான் என்ன காட்டுமிராண்டியா கொடுமைக்காரனா? அய்யா நாங்கள் அந்த மாதிரி எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு வருகிறோம். பரலோகத்தில் இதுக்கும் கடவுளே கருணை காட்டுங்கள். நீங்க என்ன சொல்றீங்க எஜமான்?"

"பின்ன எப்படி ரயில் விபத்துக்கள் நடக்குதாம்? ரெண்டோ மூனோ நாட்டைக் கழற்றிப் பாரு ரயில் கவிழுதா  இல்லையான்னு!"
டெனிஸ் நீதிபதியைப நம்பிக்கை இல்லாமல் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்தான்.
"நாங்க எத்தனை காலமா இதைச் செஞ்சுட்டு  வர்றோம், கடவுள் கருணையோடு தானே இருக்கிறார், இப்பப் போய் ரயில் விபத்து மக்கள் சாகுறாங்க அப்படீன்னு எல்லாம் சொல்றீங்களே."
"நீங்க சொல்லுங்க நான் தண்டவாளத்துல ஒரு பாறாங்கல்லையோ தடி மரத்தையோ வச்சா ரயில் கவிழும், ஆனால் போயும் போயும் ஒரு நட்டைக் கழற்றினால் ரயில் கவிழுமா?"
"ஆனால் புரிஞ்சுக்க நட்டு தான் கட்டைகளை தண்டவாலத்துடன் சேர்த்து வைக்குது, அதுனால அது விலகாமல் இருக்குது. "
"எங்களுக்குப் புரியுது... நாங்க எல்லாத்தையுமா கழற்றினோம்... நாங்க நிறைய நட்டுகளை விட்டுத்தானே வச்சிருக்கிறோம்... நாங்களும் யோசிக்காமல் செய்யவில்லை... புரிஞ்சுதான் செய்யிறோம்..."

டெனிஸ் கொட்டாவி விட்டான். வாய் மேல் சிலுவை இட்டுக்கொண்டான்.

"போன வருஷம் இங்க ரயில் கவிழ்ந்திருந்தது" நீதிபத் சொன்னார் "இப்பத தெரியுது ஏன்னு?"

"என்ன சொல்றீங்க எஜமான்"

"உன்கிட்ட என்ன சொல்றேன்னா போன வருஷம் நடந்த ரயில் விபத்துக்கு என்ன காரணம் என்று இப்ப எனக்கு விளங்குது."

"அதான் நீங்க படிச்சவங்க, அய்யா நீங்க புரிஞ்சுக்குவீங்க, அதுக்குத்தானே படிச்சீங்க. கடவுள் தான் யாருக்குப் புரிய வைக்கனுமோ அவுங்களுக்கு புரிய வைப்பார். உங்களுக்குத் தெரியும் ஏன் எதுக்குன்னு, ரயில்வே காவலாளி எங்களைப் போல கூலிதானே அவனுக்கு என்ன தெரியும் சட்டையைப் பிடித்து இழுத்துட்டு வந்துட்டான், நீங்க எப்படி காரணத்தைக் கண்டு பிடிச்சிட்டு என்னை மடக்குறீங்க. உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன் விவசாயிக்கு விவசாயின் அறிவுதான் இருக்கும்னு. எழுதிக்குங்க எஜமான் அவன் என்னை ரெண்டு தடவை அடிச்சான், ஒரு தடவை என்  தாடையில இன்னொரு தடவை என்  நெஞ்சில. "

'உன் குடிசையை சோதனை போட்ட போது இன்னொரு நட்டையும் கண்டு புடிச்சிருக்காங்க. அதை எப்போ  எங்கிருந்து கழற்றினாய்?"

"நீங்க சொல்றது அந்த சிவப்புப் பெட்டியில் இருந்ததையா?"

"அது  எங்கே இருந்ததுன்னு தெரியாது, அதைக் கண்டு புடிச்சாங்க. எப்பக் கழற்றினாய்?"

அதை நான் கழற்றலை. ஒத்தக் கண் செம்யோனின் மகன் இஷ்கா தான் கொடுத்தான். அது தான் பெட்டியில இருந்தது. ஆனால் ச்லேட்ஜில் இருந்த நட்டை நானும் மிற்றோபானும் தான் கழற்றினோம். "
'எந்த மிற்றோபான்?"

"மிற்றோபான் பெற்றோவ்....அவனைத் தெரியாதா? அவன்தான் எங்க ஊருல வலை பின்றவன். விற்கவும்  செய்வான். அவனுக்கு நிறைய நட்டு தேவைப்படும். ஏறக் குறைய பத்து நட்டுக்கள் ஒரு வலைக்கு வேணும். "

"கேள். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 1081  என்ன சொல்லுதுன்னாரயில் தண்டவாளத்தில் யாராலாவது செய்யப்படும் எந்த ஒரு  நடவடிக்கைகளாலும்  சேதம் ஏற்பட்டு   சிதைப்புக்கள் உண்டாகி அந்த வழியாகப் போகும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விபத்து நடக்கும் என்று குற்றம் புரிந்தவனுக்கு தெரிந்திருந்தால் ..... (புரியுதா. புரிஞ்சுக்க. நட்டைக் கழற்றினால் என்ன ஆகும்கிறதை தெரிஞ்சுக்க. ) தண்டனை அவனுக்கு அளிக்கப்பட வேண்டும்.

"தெரியுது...நாங்க ஏதுமறியா அப்பாவிகள்...புரிஞ்சு என்ன ஆகப்போகுது?"

"உனக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்குது. இங்க பொய் சொல்ற நடிக்கிற."

"எதுக்கு நான் பொய் சொல்லணும். நம்பலைன்னா எங்க ஊருல கேட்டுப் பாருங்க. எடை போடாமல் எந்த மீனையும் புடிக்க முடியாது குட்கான் மீனைக் கூட பிடிக்க முடியாது. அது கூட எடை போடலைன்னா மாட்டாது."

"அடுத்த தடவை ஷில்லிச்பேர் மீனைப் பத்தி சொன்னா நல்லா இருக்கும்" நீதிபதி புன்னகை புரிந்தவாரே கூறினார்.

"எங்க பக்கம் ஷில்லிச்பெர்கள் இல்லை. நாங்க எடைபோடாமல் தூண்டி போட்டா மேல பட்டாம்பூச்சி இருக்கும். முல்லேட் மீன்களைத் தான் அப்படிப் பிடிக்க முடியும். அதுவும் அடிக்கடி கிடையாது."

"போதும் வாயை மூடு"

சிறிது நேரம் அமைதி நிலவியது. டெனிஸ் ஒரு காலை மாற்றி ஒரு காலில் நின்றான். மேசையின் மேலிருந்த விரிப்பினை படபடவென இமைத்துக் கொண்டு பார்த்தான், எதோ அது துணி யல்லாமல்  சூரியனைப் பார்ப்பது போல் பார்த்தான்.

நீதிபதி வேகமாக எழுத ஆரம்பித்தார்.

நீண்ட மௌனத்திற்குப் பின் டெனிஸ் கேட்டான், "நான் போலாமா?"

"இல்லை நான் உன்னை சிறைக்கு அனுப்பப் போகிறேன்"
டெனிஸ் இப்போது இமைப்பதை நிறுத்திக் கொண்டான், புருவத்தை உயர்த்தி, கேள்வி கேட்பதைப் போல நீதிபதியைப் பார்த்தான்.

"என்ன சொல்றீங்க எஜமான். எனக்கு இப்ப நேரம் இல்லை, நான் சந்தைக்குப் போக வேண்டும், அங்கே எகோரிடம் மூன்று ரூபிள்கள் கொழுப்பு விற்றதற்காக வாங்க வேண்டும்"

"வாயை மூடு. குறுக்கே பேசாதே"
"சிறைக்கா .. ஏதாவது காரணம் இருந்தா போலாம், எந்தக் காரணமும் இல்லாமல் என்னை ஏன் போகச் சொல்கிறீர்கள். நான் எதையும் திருடலையே. நான் நம்புகிறேன் நான் சண்டை போடலை. உங்க முகவரைக் கேளுங்கள். அவன் தான் அயோக்கியன். கிழவன், உங்களுக்கே தெரியும்"

"வாயை மூடு. குறுக்கே பேசாதே"

"நான் வாயை மூடீட்டுத்தான் இருக்கிறேன். " முணுமுணுத்தான்.

நான் ஒழுங்காகத்தான் உறுதிமொழி எடுத்தேன். மூத்தவங்க கணக்கைத் தப்பாகச் சொல்லி இருக்கலாம்.
நாங்க மூன்று சகோதரர்கள் குஸ்மா க்ரிகோர்யேவ், அப்புறம் எகோர் க்ரிகோர்யேவ் அப்புறம் நான் டெனிஸ் க்ரிகோர்யேவ்

"நீ என்னைத் தொந்தரவு செய்கிறாய். செம்யோன் இவனைக் கூட்டீட்டுப் போ!"

"நாங்க மூணு அண்ணன் தம்பிங்க " டெனிஸ் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். இரண்டு காவலர்கள் அவனை அறைக்கு வெளியே இட்டுச் சென்றனர். 

"ஒரு சகோதரனுக்கு இன்னொரு சகோதரன் பொறுப்பில்லை. குஸ்மா பணம் செலுத்தவில்லை அப்படியே டெனிஸ், பதில் சொல்லியே ஆகவேண்டும்,.... நிச்சயமாக நீதிபதிகளே! எங்கள் தலைவன் இறந்து விட்டான், சொர்க்கம் அவனுடையதாகட்டும். இல்லையென்றால் அவன் உங்களுக்கு நீதியைக் காட்டி இருப்பான். நீங்கள் உண்மையை அறிந்து நீதி சொல்லுங்கள். மனம் போன போக்கில் சொல்லக் கூடாது. சவுக்கடி கொடுக்க வேண்டுமானால் கொடுங்கள்,   யாருக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டுமோ அவனுக்குக் கொடுங்கள். மனசாட்சிப்படி   கொடுங்கள்".

*********

2 comments:

  1. நாட்டையே கொள்ளையடிப்பவர்களுக்கு நீதி கிடைப்பதும், ஒரு நட்டை எடுத்ததற்கு தண்டனை கிடைப்பதும் எல்லா நாடுகளிலும் வழக்கம்தான் போலிருக்கிறது.

    இவர்களைக் காட்டியதற்காக பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்....!!!!

    ReplyDelete
  2. "தமிழில் படிக்கத் தெரிந்த கடைசித் தலைமுறைக்கான படையல்" நிதர்சனமான உண்மை!!! மிகவும் அவசியமான பகிர்வு பாரட்டுக்கள்0

    ReplyDelete