Saturday, February 26, 2011

Злодеи : கொடியவர்கள்


மூலம் : மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ்
தமிழில் : மா. புகழேந்தி

1
திகாலையில், விடிவதற்கும் முன்னர், அந்தக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லோரும் துயில் எழுந்து, விளக்கேற்றி இருந்தனர். ஜன்னலுக்கு வெளியே இன்னும் இரவின்  நீல நிறம் வானில் எஞ்சியிருந்தது, ஆனாலும் விடிவதை அறிவிக்க வெளுத்துக் கொண்டிருந்தது. குளிராக இருந்தது, அவளது முழு உடலும் நடுங்கியது, அவளிடம்  ஆழ்ந்த சோகம் கப்பியிருந்தது. அதுதான் அவளை அதி காலையிலேயே எழுப்பி இருக்கக் கூடும்.

உணவறையில்  காப்பி தயாரித்தாள், அதே நேரம் அவளது கணவன், மிஸ்டர் பிரென்ச், குளிரில் நடுங்கியபடி அக்கறையுடன் கஞ்சியிட்ட கழுத்துப் பட்டையை தனது சட்டையில் பொருத்திக் கொண்டான், கையில்  பொத்தான்களைப் போட்டுக் கொண்டான்.

தட்டுக்கள் நகரும் ஒலியுடன், அவன் மனைவியின் கவலை கொண்ட குரல் அழைத்தது," டாம்மி, காப்பி தயார்....". கடந்த ஐந்து மணி நேரமாக அவளது குரல் வித்தியாசமாகவே இருந்தது.
அவனுக்கும் ஆயாசமாக இருந்தது, எதோ ஒன்று அவனது வயிற்றினை உறுத்திக் கொண்டிருந்தது. மூச்சு விட சிரமம் கொடுத்தது.

"சரி" கோபத்துடன், கத்தினான், கோபத்தைக் கட்டுப் படுத்த சிரமப் பட்டான். தனது கறுப்புக் கோட்டை எடுத்துக் கொண்டான். சுத்தமாக மழிக்கப் பட்டிருந்த அவனது முகம், அவனின் அறிவாற்றலையும் தகுதியையும் சொல்வதாக இருந்தது. உணவறைக்குச் சென்றான்.

அவன் மனைவி அவனை அச்சத்துடன் ஒரு நொடி பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள், எதோ வேலையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.

நேற்றும் அதற்கு முந்தைய நாளும் அவன் தனது நண்பர்களிடமும் மனிவியிடமும் தான் ஒரு மரண தண்டனை நிறைவேற்றும் நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டிருப்பதாக தற்பெருமை பொங்க அடிக்கடி குறிப்பிட்டிருந்தான். அது மீண்டும் அவனுள்ளே விழித்தெழுந்தது.

நீதியைப் போல இதுவும்  தேவைதான் என்று அவனை முக்கியப்படுத்தியதால் நினைத்தான். சந்தேகத்திற்கு இடமின்றி அவன் தன்னை ஒரு முக்கியப் புள்ளியாக நினைத்துக் கொண்டான். ஆனால் அவன் மனிவியோ அச்சம் கொண்டிருந்தாள்.

இதையெல்லாம் விட அவனது உள்ளுணர்வு அதை ஒத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.  அவனது மனம் படாத பாடு படுத்தியதால் (உணவறையில்  குளிர் இருந்தாலும் கூட) அவனது உடல் தேவைக்கும் அதிகாமாக நடுங்கியது. அவன் காப்பியைச் சுவைக்கவில்லை, குடித்தான், இயல்பாகக் காட்டிக் கொண்டான், அவன் மனைவி ஒன்றும் சொல்லவில்லை, எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது இளம் அழகிய முகம் வெளுத்திருந்தது ஏதோ காய்ச்சல் கண்டாவளைப் போலக் காணப்பட்டாள். அவள் உள்ளுக்குள்ளே உடைந்து போயிருந்தாள், இருந்தாலும் இருவரும் அமைதியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டனர்.

அவன் தனது காலுறைகளைக் கேட்டபோது, அவனைப் பார்த்துக் கேட்டாள், "டாம்மி, உங்களுக்கே இது நல்லா இருக்கா?"  தேவை இல்லாமல் அவனை அவள் எரிச்சலூட்டியதால், வேண்டாத உணர்வு ஒன்று அவனுள்ளே கொழுந்து விட்டு எரிந்தது.
"அதனால் என்ன?" , தனது புருவத்தை உயர்த்திக் கொண்டு தோள்களைக் குலுக்கிய படி  பதட்டமாகக் கேட்டான்.
"இப்பவும் உங்களாலே முடியலை. பயந்து போய் இருக்கீங்க" முனுமுனுத்தாள். அவளது உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது, வாய்விட்டுக் கதற நினைத்தாள்ஆனால் அடக்கிக் கொண்டாள்.
"சரி அது கடினம் தான்.... இதை ஏற்றுக் கொண்டால், கொலை காரர்களும் கொடியவர்களும் பரவாயில்லை என்று ஆகிவிடும். எப்படியோ, நாம் பொது மக்கள், பொதுப் பாதுகாப்பு என்பது தேவையா இல்லையா?"....இதைப் போன்ற சில வசனங்களை  அவன் சிறிது நேரம் பேசினான். பேசியதால் சற்றே ஆறுதல் அடைந்தான். மீண்டும் அவனுள்ளே தான் ஒரு முக்கியப் புள்ளி என்ற நினைவு தலை தூக்கியது. பெருமையாக இந்தத் துயரமான வேலையைக்காணச் சென்றான்.

அவன் மனைவி அவனது கண்ணுள்ளே உற்று நோக்கினாள், தனது தலையை ஒப்புதலுக்காக அசைத்தாள், ஆனால் இதை அவள் தொடர்ந்து வாதாட விரும்பாததால் செய்ய வேண்டிவந்தது.
"என்னால என்ன செய்ய முடியும்", தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

பக்கத்து அரங்கில் நாடகத்திற்காக வாங்கப் பட்ட அனுமதிச் சீட்டுக்கள், கதவருகே வந்த போது அவளுக்கு நினைவுக்கு வந்தது, " டிக்கெட்டுகளை திருப்பி அனுப்ப வேண்டாமா? "

"ஏன் ... இந்த உலகத்தில இல்லாததா  நடந்து போச்சு?"

"ஆமாம் சரிதான் ", மனைவியும் ஆமோதித்தாள்.

கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள்,   சோகமாக விரல்களில் நெட்டி எடுத்தாள்.

2

தெளிவாக விடிந்திருந்தது, வானில் வெண்மை பரவிக் கொண்டிருந்தது, இதமான ஈரப்பதம் காற்றில் மீதமிருந்தது. நடைபாதைகள், கம்பங்கள், ட்ராம் தண்டவாளம், சுவர்கள், மரங்கள் எல்லாவற்றிலும் ஈரத்தின் குறி தென்பட்டது. வாழ்க்கைச் சக்கரம் சுழல ஆரம்பித்து விட்டது. தூக்கக் கலக்கத்துடனும், குளிரின் நடுக்கத்துடனும் மக்கள் எல்லா இடங்களிலும் காணப் பட்டார்கள், ஏற்கனவே  திறக்கப்பட்ட கடைகளில், ட்ராம் வண்டிகளில் , பேருந்துகளில் மற்றும் எல்லாஇடங்களிலும்.

காரில் ஏறிக்கொண்டான், அது இன்னும் மூடப்பட்டிருந்த ஜன்னல்களைக் கொண்ட வீடுகளைத்  தாண்டிச் சென்றது. பெரிய நகரம் வழக்கமான தனது பரபரப்பான வேலைகளைத் தொடங்கி விட்டாலும், தொழிற்சாலையின் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தாலும், ட்ராம் வண்டியின் ஓசை வந்தாலும், நகரத்தில் பாதி வெறிச்சோடிக் கிடந்தது, அனேகமாக சில மக்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

அவனுடன் சில  பெரிய மனிதர்கள் இருந்தார்கள், சாம்பல் நிறத்தில் தூக்கக் கலக்கத்தில் ஓர் அழகான பெண்ணும் இரண்டு இளைஞர்களும்.

இப்போது பெரும் பாரமாக அயர்ச்சியாக இருப்பதாக உணர்ந்தான். மயக்கம் வரும் போல் இருந்தது. 

உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும்  வரவழைத்துக் கொண்டு கம்பீரமாக அந்த அழகியினைப் பார்த்தான். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் அறிந்திருக்க வில்லை தங்கள்  முன்னே அமர்ந்திருப்பவன் சட்டத்தின் மேல் பொது மக்கள் நலனுக்காக உறுதிமொழி எடுத்துக் கொண்டவன் , அதனால் , நகரமே கொடூரமானவன் என்று வசை பாடிய ஒருவனின் மரண தண்டனை நிறைவேற்றப் படுவதைக் காண அழைக்கப் பட்டிருக்கிறான் என்று.

தான் முக்கியமானவன் என்று மீண்டும் அவன் நினைத்தான். அது அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது. பிற்பாடு அவன் கொலைகளின் பயங்கரத்தை விவரிக்க  வேண்டியிருக்கும். அதே நேரம் ஓர் அழகிய இளம் பெண் அருகே இருந்ததால்  உள்ளூர மகிழ்ந்தான், அவனுள்ளே ஆண்மை தன் குணத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அவளது அழகை அவன் ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவன் பார்வை அவளின் கண்கள், மார்பு, பொன்னிறக் கூந்தல் ஆகியவற்றின் மேல் படர்ந்தது. அவன் தான் எதற்காக எங்கே போகிறோம் என்பதையே மறந்து போனான். தன்னுடைய வேலை எது என்பதைத் திடீரென உணர்ந்தான். ஆனால்  இப்போது அவனுக்கு அது ஒரு  கவலை தரும் ஒன்றாக இருக்கவில்லை. பெண் அருகே  இருப்பதனால் ஆண்களுக்கே உண்டான கர்வம் அவனுள்ளே தலைதூக்கியது. தன்னை ஒரு நாயகனாக நினைத்தான். அவன் விரும்பினால் அவளுக்கு அவன் மேல் ஓர் ஈர்ப்பினை உண்டாக்க முடியும் என்று நினைத்தான்.
 கொடியவன் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப் படுவதைக் காண, தான்  அழைக்கப்பட்டதை எண்ணி தைரியமாகவும் பெருமிதமாகவும் இருப்பதாகக் காட்டிக் கொண்டான். கார் நின்றது. அவன் நெஞ்சுக்குள் என்னவோ ஒன்று அடைத்துக் கொண்டது. எழுந்திருக்கச் சிரமப்பட்டான். எப்படியோ எழுந்து நின்றான். கடைசியாக ஒரு முறை தூங்கி வழிந்து கொண்டிருந்த அவளின் கண்களைப் பார்த்தான், வண்டியின் வெளியே வந்தான். அந்த இடத்தினைச் சுற்றிலும் பனியினால் ஈரமான மரங்களைக் கண்டான்.

3

"ஐந்திலிருந்து ஆறுக்குள் தான் நேரம் " , வழக்குரைஞர் சொல்லிவிட்டு எழுந்தார். பன்னிரண்டு ஜுரிகளும் ஒரு மருத்துவர், மற்றும் ஒரு காவல் துறை அலுவலர், எல்லோரும் எழுந்து நின்றார்கள். முகங்கள் வெளுத்திருந்தன. அமைதியாக நின்றனர். அமைதியாக வழக்குரைஞரை நோக்கி பிரென்ச் முன்னேறினான். சிறையின் கூடம் வெறுமையாக இருந்தது. தண்டனை நிறைவேற்றப் படவேண்டிய தனி அறை அங்கே இருந்தது , அங்கு அமைதியாகவும் விளக்கு எரிந்து கொண்டும் இருந்தது. பெரிய பெரிய ஜன்னல்கள் முறுக்கப் பட்ட கம்பிகளுடன் அமைக்கப் பட்டிருந்தன. காலை ஒளியில் அறை குளிராகவும் வசதியற்றும் தெரிந்தது. சுவர்கள் சாம்பல் நிறத்தில் பூசப்பட்டிருந்தன. இருக்கைகள் கருப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப் பட்டிருந்தன.

தனக்கென ஒதுக்கப் பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தான் அது கடைசியில் இருந்து மூன்றாவதாக இருந்தது. அவனுக்கு நடுங்க ஆரம்பித்தது. காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தான். அறையின் மையத்தில் ஒரு நாற்காலி இடப்பட்டு இருந்தது.
எல்லா சாய்வு நாற்காலிகளைப்  போலத்தான் இருந்தது, இருந்தாலும் அதன் எல்லாப் பக்கங்களில் இருந்தும் பட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. கைப்பிடிகளில் முதுகுப் புறத்தில் கால்ப்பகுதிகளில் என்று எல்லா இடங்களிலும். தலைக்கும் கால்ப்பகுதிக்கும் உலோகத் தப்பை  இருந்தது. சாய்வு நாற்காலி மேல் இறுக்கிக் கட்டப் பட்டிருந்த வெள்ளைத் துணி அதற்கு சுகமற்ற தோற்றத்தைக் கொடுத்தது. ஏதோ ஓர்  அறுவை சிகிச்சை மேசை போல அவனுக்குப் பட்டது.
ஓர்  ஒப்பு நோக்கு அவனுக்குள்ளே தோன்றியது, "சரி இதுவும் ஓர் அறுவை சிகிச்சை தான் சமூகத்திற்கு வேண்டாதவர்களை நீக்குவது. " அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

திடீரென கதவுகள் திறக்கப் படும் ஓசை கேட்டது. காலடிச் சத்தங்கள் தங்களை நோக்கி வருவதை அனைவரும் உணர்ந்தனர்.

எல்லோரும் எழுந்து நின்றார்கள். அவனால் எழ முடியவில்லை. அங்கு நின்றுதான் ஆகவேண்டும் உட்கார்ந்திருக்க முடியாது. அந்த ஒரு வினாடி முடிவே இல்லாமல் நீண்டு கொண்டு போனது, கடினமாக இருந்தது.  திறந்திருந்த கதவுகள் வழியே இரண்டு காவலர்கள் நுழைந்தார்கள் உள்ளே வந்ததும் கதவருகே நின்று கொண்டனர்.

அவர்கள் பின்னே "அவன்" வந்தான். அனைவரின் கண்களும் அவன் மேல் நிலைத்திருந்தன. அவன் மரணதண்டனைக் கைதியாக இல்லாமல் போனால் மிக நேர்த்தியானவனாக இருந்திருப்பான். அவன் இளைஞன், உயரமானவன். அவன் மட்டும் உள்ளாடைகளுடன் இருந்தான் மற்றவர்கள் எல்லாம் கறுப்புக் கோட்டுக்குள் இருந்தனர். அதன் பிறகு பிரென்ச் தன் கண்களை அவன் மேலிருந்து எடுக்க வில்லை. தடுக்க முடியாத ஆர்வம் அவனை அந்த இளைஞனின் சிவந்த முகத்தைப் பார்க்கத் தூண்டியது. பார்க்கக் கடினமாக இருந்தது. ஆனால் விரைவில் சாகப் போகும் அவனது முகத்திலிருந்து வெளிப்படும் எந்த வித உணர்சிக் குறிப்பினையும் தவறவிடக் கூடாது என்ற ஆர்வமும் அவனுள்ளே இருந்தது. குற்றவாளி பெரிதாக எட்டு வைத்து நடந்து போனான், வெறுப்புடன் வெறித்துக் கொண்டு முன்னேறினான். கதவருகே தயங்கினான் , "இங்கே இங்கே " என்று கூறினார்கள், பார்வையாளர்கள் கனத்த இதயத்துடனும் ஊற்றெடுக்கும் ஆசையிலும் தத்தளித்தார்கள். "இங்கே" அவனது மனதில் மின்னியது. குற்றவாளி அறையினுள் வந்தான். அவன் வருவது வித்தியாசமாக இருந்தது. ஜூரிகளை அவன் பார்த்தான், அவன் கண்கள் பிரென்ச்-இன் கண்களைச் சந்தித்தன. அந்த நேரத்தில் அவனுக்கு மரணதண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று தான் சொன்னது நினைவிற்கு வந்தது. பிரென்ச் கண்களைத் தாழ்த்திக் கொண்டான். உடல் முழுக்கக் குளிர் ஊடுருவியது.

அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது. அனைத்து நடைமுறைகளும் முடிக்கப் பட்டன. ஒன்று மட்டுமே செய்யப் பட வேண்டும் 'தண்டனை நிறைவேற்றம்'. அதாவது கொலை.

அந்த ஒரு நொடியில் நன்றாகத் தெரிந்தது, அவர்கள் பளபளக்கும் கறுப்புக் கோட்டுகளிலும் சீருடைகளிலும் இருக்கும் இருபது பேரும் சேர்ந்து ஒருவனைக் கொன்று விட்டார்கள்,   இன்னும் தனது உயிரோடிருக்கும் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் குற்றவாளியினை.

அதற்குப் பிறகு தண்டனை நிறைவேற்றப் படும் முன்வரை  நடந்தவை அப்படி ஒன்றும் ஆச்சரியப் படக் கூடியவை அல்ல. இரண்டு சிறைக் காவலர்கள் அவனது இரு கைகளையும் தாங்கிக்  கொண்டு நாற்காலிக்கு அழைத்து  வந்தனர். உட்காரவைத்தனர். அவன் மறுக்காமல் அப்படியே செய்தான். குழப்பமுடன் சுற்றிலும் பார்த்தான். அவன் வசதிக்காகச் செய்வது போல் வெள்ளைப் பட்டைகள் கச்சிதமாக அவன் கை கால்களில் பொருத்தப் பட்டன. தண்டனை நிறைவேற்றுபவர்கள் சுற்றி நின்றதால் குற்றவாளி சரியாகத் தெரியவில்லை.

அவர்கள் விலகிய பின்பு குற்றவாளி தெளிவாகத் தெரிந்தான். பட்டைகளால் இறுக்கிக் கட்டப் பட்டதால் அவன் உருவம் இப்போது ஒல்லியாகத் தெரிந்தது. குற்றவாளி இப்போது நகர  முடியாது. அவன் தலையைக் கூட அசைக்கமுடியாது. ஆனால் கண்களைச் சுழல விட்டான். எதையோ  தேடினான்.

குற்றவாளியின் பின் இருந்து, யாருடையது என்று அடையாளம் காண முடியாத இரண்டு கைகள்அவனது தலையைத் தூக்கின. ஒரு உலோகத் தலைக்கவசத்தை அவனுக்கு கச்சிதமாக அணிவித்தன. கடைசியாக பிரென்ச் அவனது கண்களைப் பார்த்தான். அதன் பின் அவன் முழுதுமாக மறைக்கப் பட்டான்.  வித்தியாசமாகத் தலை முதல் கட்டுப் போடப்பட்ட யாரோ ஒருவன்  நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைப் போல இருந்தது. பிரென்ச்க்கு விளங்கியது, 'இது தான் அவனது இறுதி நேரம், காணவே கூடாதநம்ப முடியாத கொடூரத்தைக் காணப் போகிறோம்.  பிரென்ச் கண்களை மூடிக் கொண்டான். இருள் அவனைச் சூழ்ந்தது. ஆயாசமாக உணர்ந்தான், தலை சுற்றியது, உடல் நடுங்கியது. மயக்கம் வருவது போல் இருந்தது. சிலர் நகரும் ஓசைகளைக் கேட்டான், மெல்லிய சத்தத்தில் , கிசுகிசுப்பாக யாரோ சொல்வது கேட்டது. வெறியினாலும் அதனால் உந்தப் பட்ட ஆர்வத்தினாலும் அவன் தன் கண்களைத் திறந்தான். அறையின் நடுவில் தனிமையான நாற்காலி வெண் துணியால் மூடப்பட்டு பட்டைகளால் கட்டப் பட்டிருந்த  ஓர் உடல். அவனைச் சுற்றி வெறுமையாக இருந்தது. கட்டப் பட்ட உடல் கொஞ்சம் கொஞ்சமாகத் துடித்துக் கொண்டிருந்தது. அதன் அசைவுகள் சிறிய அளவில் இருந்தன. நினைத்துப் பார்க்கவே முடியாத கொடுஞ்செயல் நடந்து கொண்டிருந்தது.
"போதும்" - மெல்லிய குரலில் யாரோ சொன்னார்கள். உடல் தொடர்ந்து துடித்தவாறு இருந்தது.

கொடுமையான சத்தம் எழுந்தது. எல்லோரும் இருக்கையிலிருந்து எழுந்தார்கள். எல்லோருக்கும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. திரைக்கு அருகில் யாரோ ஓடினார்கள்.
"கரண்ட்,கரண்ட்" -வழக்குரைஞரின் குரல் கேட்டது. என்னவோ ஒடிவது போலச் சத்தம். உடல் திருகிக் கொண்டிருந்தது. ஒரு பட்டை நழுவியிருந்தது.

 பிரென்ச்சுக்கு நினைவு தப்புவது போல உணர்ந்தான். எரியும் முடியின் நாற்றம் அடித்தது. நடுக்கம் நின்றது.
-"போதும்" வெண் துணியால்  போர்த்தப் பட்ட உடல் அசைவது நின்றது. பிணத்தின் அருகே கருப்பு மருத்துவர் வந்து தலையைத் தாழ்த்தினார்.
"எல்லாம் முடிந்தது" , பிரென்ச் நினைத்தான். காய்ச்சல் கண்டவனைப் போல சுற்றிலும் பார்த்தான்.
கடைசியில் உணர்ந்தான் "இது கொடூரம்."


"அவன் உயிரோடிருக்கிறான்" திடீரெனப் பதட்டமான குரலில் மருத்துவர் கத்தினார்.

"ஐயோ அப்படி இருக்கக் கூடாதே."


"கரண்ட் ...கரண்ட் ...சீக்கிரம்."


பிரென்ச் எதிர்பாராததைக்   காண நேர்ந்தான், கொடூரமானது பைத்தியக் காரத் தனமானது என்று அவன் மனதுள் எண்ணினான்.

உலோகத் தலைக் கவசம், நாற்காலியில் பிணைக்கப் பட்டுள்ளது, அதன் கீழிருந்து புகை வந்து கொண்டிருந்தது. எரியும் தசையின் நாற்றம் வயிற்றைப் புரட்டி வாந்தியைக் கொண்டுவந்தது.

கெட்டகனவு போல அறையினுள் புகைந்து  கொண்டிருந்தது. யாரோ அவனின் கையைப் பற்றி நினைவுக்குக் கொண்டு வந்தனர்.

"எல்லாம் முடிந்தது. தண்டனை நிறைவேறியதற்கான சாட்சியாக கையெழுத்து போடுங்கள். "

அவன் முட்டாள்த்தனமாக உடன்பட்டான். அசையாத உடலைப் பார்த்தான். மரணத்தின் அமைதியை  ஏற்கனவே அது அறிவித்திருந்தது. 

திரும்பும் போது வழியில் அவன் எதையும் பார்க்கவில்லை. யந்திரத் தனமாக நடந்து கொண்டான். முழு உடலும் வலித்தது. சுவை  கொண்ட கனிகளைக் கூட அவன் ருசிக்கவில்லை. முக்கியமான மிகவும் கசப்பான  ஒன்றை அவன் நினைவு கொள்ள வேண்டி இருந்தது. எதையேனும் அவன் கவனிக்காமல் விட்டிருந்தால் அவை முக்கியமற்றவையாகத் தானிருக்கும்.

நடந்தவைகள் எல்லாம் வழக்கமான நடைமுறைகள் தான்.
குற்றவாளி கொல்லப்பட்டான், அதற்கு அவனும் ஒரு காரணம். மரணம் கொடுமையானது, வலிமிகுந்தது. ஆனால் இங்கு நிறைவேற்றப் பட்ட தண்டனை அவ்வாறு தெரியவில்லை.
ஆனால் முடிவில் என்ன? ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது, இதை அவன் காணவில்லை என்றால்  இதன் கொடுமைகளை அறிந்திருக்க மாட்டான் நினைவில் நிறுத்தி இருக்க மாட்டான்.

குற்றவாளியின் தலைக்கவசத்தை நீக்கியபோது, இறந்தவனின் கண்கள் திறந்திருந்தன. அவற்றில் உயிர் எஞ்சி இருந்தது. கடைசி முயற்சியாக நம்பிக்கையற்று உதவியைக் கெஞ்சிக் கொண்டிருந்தன.

அங்கு தான் அவன் அந்த உணர்ச்சியை உணர்ந்தான். மிருகத்தனமான ஆர்வத்துடன் அதையெல்லாம் கவனித்திருந்தான், அவன் மூளையில் அங்கு நடந்த அனைத்துக் கொடுமைகளும் ஓர் அசைவு கூடப் பிசகாமல் அழிக்கமுடியாத நினைவாகப் பதிந்து போனது.

***** 

Saturday, February 19, 2011

Хороший конец : நல்ல முடிவு




மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி 


ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா , சொல்லக்கூடிய அளவுக்கு, சற்றே கொழுகொழுப்பான பெண்மணி, நாற்பதைத் தொட்டிருப்பவர், திருமண ஏற்பாட்டாளர், அது மட்டுமல்லாது காதும்காதும்  வைத்தது போல சொல்லக் கூடிய பல வேலைகளைச் செய்பவர். தற்போது ஸ்டைட்ச்கின், ரயில்வே தலைமைக் காவலர், விடுமுறையில் இருக்கும் ஒரு நாளில் அவரைக்  காண வந்திருந்தாள். ஸ்டைட்ச்கின், ஓரளவுக்குப் பரபரப்பாக, ஆனால், எப்போதும் இருப்பது போல இறுக்கமான முகத்துடன் சுருட்டைப் புகைத்தவாறே அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு  இருந்தார்.

"உங்களைப் பார்த்ததில ரொம்ப மகிழ்ச்சி. செம்யோன் இவநோவித்ச் தான் உங்களைப் பார்க்கச்  சொன்னார். என்னோட வாழ்க்கையில சந்தோசத்தைக் கெடுக்கிற ஒரு முக்கியமான தடங்கலைப்  போக்குறதுக்கு நீங்க உதவி செய்வீங்கன்னு சொன்னார். இங்க பாருங்க ,ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா, எனக்கு ஐம்பது வயசாகுது. இந்த வயசில எல்லாருக்கும் வளர்ந்த குழந்தைங்க இருக்கும், என்னுடைய நிலைமை இப்ப பாதுகாப்பானது. இருந்தாலும், எனக்குன்னு ஒரு மனைவியும் குழந்தைகளும் வேணும்னு நான் நினைக்கிறேன். நான் உங்க கிட்ட என்ன சொல்றேன்னா எனக்குப் போதுமான அளவுக்கு சம்பளம் வருது, அதோடல்லாமல் என் வாழும் முறையால கொஞ்சம் பணத்தை வங்கியில போட்டும் வச்சிருக்கேன். நான் எதார்த்தமான அமைதியான  மனிதன். கட்டுப் பாடான வாழ்க்கையை வாழ்ந்திட்டு வர்றேன். என் வாழ்க்கை மத்தவங்களுக்கு எடுத்துக்காட்டு போல இருக்கு.

ஆனால், எனக்கிருக்கிற  குறை என்னன்னா, எனக்குன்னு ஒரு வாழ்க்கைத் துணை இல்லை, ஒரு குடும்ப வாழ்க்கை இல்லை. எதோ அகதியாட்டம் திரியறேன், எந்த நிம்மதியும் இல்லாமல் நாடோடியைப் போல ஒவ்வொரு இடமாப் போறேன். எனக்குன்னு ஆறுதல் கூற யாரும் இல்லை. எனக்கு உடம்பு சரியில்லைன்னா, தண்ணி கொடுக்கக் கூட ஆள் இல்லை, இப்படியே சொல்லிக் கொண்டு போலாம். இதை எல்லாம் விட, ல்யுபோவ் க்ரிகோரியேவ்னாகல்யாணமான ஆண்களுக்கு சமுதாயத்தில இருக்கிற மரியாதை பிரம்மச்சாரிங்களுக்குக் கிடையாது. நான் படிச்சவன், பணம் இருக்கு, ஆனால் ஒரு விதத்தில என்னைப் பாருங்க, நான் யார்? சொந்த பந்தங்கள் இல்லாத மனிதன். போலிஷ் சன்னியாசிகளைக் காட்டிலும் பரவாயில்லாமல் இருக்கேன். அதனாலதான் நான் திருமண வாழ்க்கையில நுழைஞ்சிரலாமுன்னு இருக்கேன். அதாவது தகுந்த பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் செஞ்சுக்கலாமுன்னு."

"நல்ல செய்தி தான்", பெருமூச்சுடன் திருமண ஏற்பாட்டாளர் சொன்னாள்.

"நான் தனியானவன். இந்த நகரத்தில எனக்கு யாரையும் தெரியாது. இங்கிருக்கிற எல்லாருமே எனக்குப் புதியவங்க, நான் எங்க போறது, யார் கிட்டக் கேட்கிறது ? அதனால தான் செம்யோன் இவநோவித்ச், மத்தவங்களுக்குச் சந்தோசம் தரக்கூடிய இந்த வேலையில இருக்கிற  உங்களைப் பார்க்க ஆலோசனை சொன்னார். அதனாலதான், ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா, என்னோட வருங்கால வாழ்க்கையைச் சரி செய்யறதுக்கு , உங்க உதவி வேணும்னு ரொம்ப வேண்டிக்கிறேன். இந்த நகரத்தில இருக்கிற கல்யாணம் பண்ணிக்கிற மாதிரியான நிறையப் பெண்களை உங்களுக்குத் தெரியும், எனக்கு உதவி செய்யறது உங்களுக்கு சுலபமா இருக்கும்னு நினைக்கிறேன்."

"என்னால முடியும்......."

"கொஞ்சம் வைன் சாப்பிடுறீங்களா?"

பழக்கப்பட்டவள் ஆனதால் குவளையை உயர்த்தி  வாயருகே கொண்டு சென்று கண் இமைக்காமல் ஒரே மடக்கில் குடித்தால்.

"என்னால முடியும்,", திரும்பவும் சொன்னாள், "எந்த மாதிரிப் பொண்ணு உங்களுக்குப் பிடிக்கும், நிகோலாய் நிகொலயித்ச்?"

"எனக்குப் பிடிக்கனுமா? பொண்ணோட விதி என்கிட்ட அனுப்புது."

"சரி, அது உங்க விதிப் படி ஆகட்டும், ஆனால் ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருப்பம் இருக்கும் உங்களுக்கே தெரியும். ஒரு சிலருக்குக் கருப்பு பிடிக்கும் ஒரு சிலருக்கு சிவப்பான பொண்ணு பிடிக்கும். "

"பாருங்க, ல்யுபோவ் க்ரிகோரியேவ்னா," ஸ்டைட்ச்கின், பெருமூச்சுடன் அமைதியாகச் சொன்னார், "நான் வந்து எதார்த்தமானவன், என்னைப் பொறுத்த அளவுக்கு அழகு வெளித்தோற்றம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். உங்களுக்கே தெரியும் அழகுங்கிறது குவளையோ தட்டோ அல்ல, அழகான மனைவி பல நேரங்களில ஆயாசத்தைத் தான் கொடுப்பாள். நான் ஒரு பொண்ணை என்ன கண்ணோட்டத்துடன் பார்க்கிறேன்னா , வெளியில எப்படித் தெரிகிறாள் அப்படீன்னு இல்லை, அவள் மனசுல எப்படி இருக்கிறாள் அப்படீன்னு  தான். அவளுக்குன்னு ஒரு மனசு அப்புறம் சகல  தகுதிகளும். இன்னும் கொஞ்சம் வைன்.... ஒத்துக் கொள்ளக் கூடியது தான், ஒருத்தனுடைய மனைவி கொழுக்குன்னு இருக்க வேண்டியது தான். ஆனால் ரெண்டு பேரின் சந்தோசத்துக்கு  அதுமட்டும் போதாது , அறிவும்  முக்கியம். உள்ளதைச்  சொன்னா, ஒரு பொண்ணுக்கு அறிவு தேவை இல்லை, இருந்துதுன்னா தன்னைப் பற்றி அவள் பெருமைப் பட்டுக் கொண்டே இருப்பாள். எல்லா வகையான யோசனையையும் மண்டைக்குள்ள வச்சுக்குவா. படிக்காமல் இந்தக் காலத்தில இருக்க முடியாது, உண்மைதான், ஆனால் படிப்புங்கிறது வேற. பெருமைதான், மனைவி பிரெஞ்சு பேசுறாள், ஜேர்மன் பேசுறாள் அப்படீங்கறது, ரொம்பப் பெருமை. ஆனால் அதுல என்ன பிரயோசனம் சட்டைக்கு பட்டன் வைக்கத் தெரியலைன்னா? நான் படிச்சவன், உங்களோட இங்க இருக்கிற மாதிரித்தான், இளவரசன் கனிதேளின் வந்தாலும் இருப்பேன்.
என்னோட பழக்க வழக்கங்க எல்லாம் சாதாரணமானது. நான் விரும்பறது எல்லாம் ஒரு சாதாரணப் பொண்ணைத் தான் , பேரழகியை அல்ல. அதை எல்லாம் விட அவள் என்னை மதிக்கணும், அதே மாதிரி அவளை நான் சந்தோசமா வச்சுக்கணும்."

"நிச்சயமா."

"சரி, இப்ப முக்கியமானது என்னன்னா... எனக்குப் பணக்காரப் பொண்ணுங்க வேண்டாம். பணத்துக்கு ஆசைப் பட்டு கட்டிக்கிற அளவுக்கு நான் மோசமானவன் இல்லை. வீட்டோட மாப்பிள்ளையா  இருக்க விருப்பம் இல்லை. அவளைக் கண்கலங்காம வச்சுக்கணும், அதை அவள் உணரனும். ஆனால் ஏழைப் பொண்ணும் எனக்கு வேண்டாம். நான் ஒன்னும் தியாகி அல்ல, வாழ்க்கை கொடுக்கிறதுக்கு. அதனால ஏழைப் பொண்ணை ஏத்துக்க முடியாது. உங்களுக்கே தெரியும் விலை வாசி எல்லாம் ஏறிப் போச்சு, பிற்பாடு குழந்தைங்க வந்துடும். "

"வரதட்சணையோடு வர்ற பொண்ணு பாக்கலாம்," திருமண ஏற்பாட்டாளர் சொன்னாள்.

"இன்னும் ஒரு குவளை வைன்..."
ஐந்து நிமிடங்கள் கடந்தது.

திருமண ஏற்பாட்டாளர் பெரு மூச்சு விட்டாள், தலைமைக் காவலரை ஏற இறங்கப் பார்த்தாள்.

"சரி, இப்ப நீங்க சொல்லுங்க. எனக்கு சில பேரங்கள் இருக்கு. ஒருத்தி பிரெஞ்சுக்காரி இன்னொருத்தி கிரேக்கக்காரி. பணமும் இருக்கு."
சிறிது யோசனைக்குப் பிறகு ஸ்டைட்ச்கின் சொன்னார்:

"வேண்டாம், நன்றி. உங்க வசதிக்காக என்னைக் கேட்க விடுங்க. ஒரு பொண்ணுக்கு நீங்க எவ்வளவு கேட்பீங்க?"

"நான் பெரியதா ஒன்னும் கேட்கறது இல்லை. இருபத்தி ஐந்து ரூபிள்கள் அப்புறம் வழக்கம் போல ஒரு செட் துணி , நான் கண்டிப்பா உங்களுக்கு நன்றி சொல்வேன். ஆனால் வரதட்சனையின்னு சொன்னா அது வேற கணக்கு. "

ஸ்டைட்ச்கின் தனது நெஞ்சின் மீது கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியானார். சில நிமிடங்கள் அமைதிக்குப் பிறகு சொன்னார்:
"அது அதிகம் தானே..."

"இல்லை, அதிகமானது அல்ல, நிகோலாய் நிகொலயித்ச். அந்தக் காலத்தில நிறைய கல்யாணங்கள் நடந்தது, குறைந்த காசுக்குப் பண்ணிக் கொடுத்தோம், இப்பப் பாருங்க என்ன பெரிசா நாங்க சம்பாதிக்கிறோம் ? ஐம்பது ரூபிள்கள் சம்பாதிச்சாலே இப்பப் பெரிசு தான் தெரிஞ்சுக்கிங்க.  அதுவும் கல்யாணங்களில் மட்டுமல்ல."

ஸ்டைட்ச்கின் திருமண ஏற்பாட்டாளரை அதிசயமாகப் பார்த்தார், தோள்களைக் குலுக்கிக் கொண்டார்.

"ம்ம்ம்.. ஐம்பது ரூபிள்கள் கொஞ்சம்னு சொல்றீங்களா?" கேட்டார்.

"ஆமாம், கொஞ்சம் தான். அந்தக் காலத்தில நாங்க நூறு ரூபிளுக்கும் மேல சம்பதிச்சோம்."

"ம்ம்ம்... இந்த வேலையில இவ்வளவு சம்பாதிக்க முடியும்னும் நான் நினைச்சுக் கூடப் பாக்கலை. ஐம்பது ரூபிள்கள். எல்லாராலையும் அப்படிச் சம்பாதிக்க முடியாது. இன்னும் கொஞ்சம் வைன் எடுத்துக்கங்க..."

திருமண ஏற்பாட்டாளர், கண்ணிமைக்காமல் கோப்பையைக் காலி செய்தாள். ஸ்டைட்ச்கின் அவளை உச்சி முதல் பாதம் வரை அமைதியாகப் பார்த்துவிட்டு சொன்னார்:
"ஐம்பது ரூபிள்கள். அப்படீன்னா வருஷத்துக்கு அறுநூறு ரூபிள்கள். இன்னும் கொஞ்சம் குடிங்க..இந்த வருமானம் இருக்கிற போது, பாருங்க, ல்யுபோவ் க்ரிகோரியேவ்னாஉங்களுக்கு என்ன கஷ்டம் நீங்களே ஒரு மாப்பிள்ளையைத் தேடிக்கிறதுக்கு?"

"எனக்கா," அவள் சிரித்தாள், "நான் வயசானவள்."

"அப்படிச் சொல்லாதீங்க. உங்களுக்கு என்ன? அழகா இருக்கீங்க. வடிவான முகம். சிவப்பா இருக்கீங்க. அப்புறம் எல்லாம் இருக்கு உங்க கிட்டே. "

திருமண ஏற்பாட்டாளர் தர்ம சங்கடத்தில் இருந்தாள். ஸ்டைட்ச்கின்னும் தர்ம சங்கடத்தில் இருந்தார், அவள் அருகில் அமர்ந்தார்.

"இப்பவும் நீங்க கவர்ச்சியாகத் தான் இருக்கீங்க. " அவர் சொன்னார்; "உங்களுக்கு  ஒரு எதார்த்தமான, நல்ல கணவன் அமைஞ்சா உங்க சம்பாத்தியத்தோட சந்தோசமா இருக்கலாம்."

"என்ன பேசறீங்கன்னு உங்களுக்குத் தெரியுதா, நிகோலாய் நிகொலயித்ச் ?"

"ஆமாம், கெட்டது ஒன்னும் சொல்லலையே..."

அமைதியாகச் சில நேரம் சென்றது. ஸ்டைட்ச்கின் சத்தமாக மூக்கைச் சிந்தினார். திருமண ஏற்பாட்டாளருக்கு முகம் சிவந்திருந்தது,வெட்கத்துடன் அவரப் பார்த்துக் கேட்டாள்:
"அப்புறம் நீங்க எவ்வளவு சம்பாதிக்கிறீங்க, நிகோலாய் நிகொலயித்ச்?"

"நானா? எழுபத்தி ஐந்து ரூபிள்கள், அதல்லாமல் டிப்ஸ்.... அப்புறம் நாங்க முயல்களாலையும் ஆதாயம் அடைவோம்."

"வேட்டைக்குப் போவீங்களா?"

"இல்லை. எங்களுக்குள்ளே நாங்க சொல்லுவோம்  டிக்கெட் வாங்காம வர்ற பயணிகளை முயல்கள்னு."

இன்னொரு நிமிடமும் அமைதியாகச் சென்றது. ஸ்டைட்ச்கின் எழுந்து அந்த அறையில் பெரிய எதிர்பார்ப்புடன் நடந்தார்.

"எனக்கு இளம் மனைவி வேண்டாம்," அவர் சொன்னார். "நான் நடுவயசுக்காரன், எந்த மாதிரி எதிர்பார்க்கிறேன் என்றால்.... உங்களை மாதிரி...."

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது...." தனது சிவந்த முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு களிப்புடன் சிரித்தாள்.

"இதுல ரொம்ப யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? என் மனசுல நீங்க இருக்கீங்க, உங்களது தகுதி எனக்குப் போதுமானதா இருக்கு. நான் எதார்த்தமானவன், அமைதியானவன் , நீங்க என்னை விரும்பினால்....இதை விட எது சிறந்தது? என்னை நீங்க அனுமதிக்கணும் உங்களைக் கல்யாணம் செஞ்சுக்க கேட்கிறதுக்கு."

திருமண ஏற்பாட்டாளர் ஒரு துளி கண்ணீர் விட்டால், சிரித்தாள், அவளது ஒப்புதலைத் தெரிவிப்பது போல ஸ்டைட்ச்கினின் கோப்பையை மெல்ல இடித்தாள்.

"நல்லது," மகிழ்ச்சியான ரயில்வே காவலாளி சொன்னார், "இப்பொழுது எந்த மாதிரி வாழ்க்கையை நான் உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் அப்படீன்னு சொல்ல என்னை நீ அனுமதிக்கணும் .... நான் கறாரான, எதார்த்தமான, மரியாதைக்குரிய மனிதன். பெருந்தன்மையா எல்லாத்தையும் எடுத்துக்குவேன். என் மனைவியும் கறாரா இருக்கணும், அப்புறம் புரிஞ்சுக்கணும் அவளது சேவை இந்த உலகத்திலேயே எனக்குத் தான்னு."

அவர் உட்கார்ந்தார், நீண்டதாக  மூச்சு ஒன்றை  விட்டார், அப்புறம் தனது மணமகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவளிடம் குடும்பப் பொறுப்பு, மனைவியின் கடமைகள் பற்றி விவரிக்க  ஆரம்பித்தார்.

*****

Saturday, February 12, 2011

Счастье : ஆனந்தம்






மூலம் : மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ்
தமிழில் : மா. புகழேந்தி


ஷாஷா, ஒரு விலை மகள், ஒரு காலத்தில் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்த அவளது முகம் இப்போது பொலிவிழந்து கன்னம் ஒட்டி, பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவளது வாழ்க்கைவாழ்க்கை என்று சொல்லிகொள்ளும் அனைத்தையும் இழந்திருந்தது.அது ஒரு கொடுமையான பிழைப்பாகவே இருந்தது.

கொடுமையான நாள். பகல் தனது வெம்மையையும் வெளிச்சத்தையும் மெல்ல மெல்ல இழந்து, நம்பிக்கையற்ற இரவில் கரைந்தது, இரவோ முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருந்தது.  பட்டினியும் குளிரும் அவளது வனப்பான மார்பையும் வாளிப்பான உடலையும் மெலியச் செய்து எலும்பும் தோலுமாக, நாய் கூடக் கவ்வாத உடலாக  மாற்றியிருந்தது.

தொட்டால் ஒட்டிக்கொள்ளும் இருட்டு நேரங்களில் பெரிய வீதி முதல் வெட்ட வெளி வரை எல்லா இடங்களிலும் அவள் தன்னுடைய அழகை அசிங்கமான, அழுக்கான, கேவலமான, மோசமான எல்லோருக்கும் விற்றிருக்கிறாள்.

இப்போது அவள், நகரத்துக்கு வெளியே, ரயில்வே பணிமனைக்கும் அப்பால், கொட்டும் பனியால் மூடப்பட்ட மேடு பள்ளங்களை எல்லாம், தாண்டி நிலவொளியில் நின்று கொண்டிருந்தாள். அங்கு அமைதியாக இருந்தது. தூரத்தில் தொடராக விளக்குகள் மெலிதாகத் தெரிந்தன. கரு நீல நிற வானத்துக்குக் கீழே தந்திக் கம்பங்கள், பனியால் மூடப்பட்டதால் நிலவொளியில் மின்னிக் கொண்டு, நின்று கொண்டிருந்தன. காற்று குளிராகவும் வறண்டும் வீசியது. பொறுத்துக் கொள்ளவே முடியாதவாறு குளிர், துணி மூடாத உடல் பகுதிகளைப்   பதம் பார்த்துக் கொண்டிருந்தது. தோல் வெடித்து ரத்தம் வருவது போல் இருந்தது. அவளது முகத்தருகே மூச்சுக் காற்றில் மூடு பனி  உருகி நீராவி யாகிக் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.

ஷாஷா ஐந்து நாட்களாக வருமானம் இன்றி இருந்தால், தனது அறையில் இருந்த பார்ப்பதற்கு சற்றே சுமாராக இருந்த ஓர் ஆடையை உடுத்திக் கொண்டு இப்போது ஆள் பிடிக்கக் கிளம்பி இருந்தாள்.

தனியாக நின்று கொண்டிருந்தாள். அது அன்னியமாக இருந்தது, சாலை நிலவொளியில் பாலைவனம் போல ஆளரவம் இன்றி வெறிச்சோடிக்கிடந்தது.

அவளது கால்கள் பனியால் மரத்துக் கொண்டிருந்தது. கால்கள் வலிக்கத்தொடங்கின.

இரக்கமற்ற வறுமையும் தனிமையும் அவளை வாய்விட்டுக் கதறத் தூண்டின. அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. யாரும் அவளது கண்ணீரைக் காண வில்லை. நிலா நீல வானத்தில் தலைக்கு மேலே தூய்மையாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

யாரும் வரவில்லை, கைவிடப்பட்ட நிலையில் விவரிக்க முடியாத துயரத்தில், உலகமே கேட்க, பெரும் ஓலமிட்டுக் கதற வேண்டும் என்று துடித்தாள், கடுமையான குளிரில் அவளால் அமைதியாக, பற்களை இறுக்கிக் கடித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது.

சாகவேண்டும், சாக மட்டுமே வேண்டும் - அமைதியாகத் தொழுதாள்.

மங்கலான வெளிச்சத்தில், தூரத்தில் கருப்பு ஆண் உருவம் ஒன்று வருவது  தெரிந்தது. அருகில் வந்தான், அவனது வருகையால் காலடியில்  பனி நொறுங்குவது தெளிவாகக் கேட்டது.  அவன் அருகில் இருக்கும் தொழிற்சாலையில் பணிபுரிபவன் என்று யூகித்தாள்.  சாலையின் ஓரத்தில் நின்று கொண்டாள், உணர்ச்சியற்றுப் போன தன் கைகளை ஆடைகளுக்குள் மறைத்துக் கொண்டு தோள்களை குலுக்கிக்  கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள்.

அவளது உதடுகள் மரத்துப் போய் இருந்தது, அவள் பேச முடியாதோ என்று அச்சப்பட்டாள்.

"சார் " , அவள் கிசு கிசுத்த குரலில் கூப்பிட்டாள். வழிப்போக்கன் திரும்பிப் பார்த்துவிட்டுத் தன் வழியே நடக்க ஆரம்பித்தான், அவனின் முன்னும் பின்னும் ஓட்டமும் நடையுமாக கூடவே சென்றாள் ,"சார்...வாங்க...இதுல என்ன இருக்கு...வாங்க போலாம்....நீங்க நான் ராத்திரி நேரம் வேற என்ன வேணும், வாங்க....". வழிப்போக்கன் அவளைப் பொருட் படுத்தவில்லை, இருகியமுகத்துடன், உணர்ச்சியே இல்லாமல், சென்று கொண்டிருந்தான்.

ஷாஷா மீண்டும் அவனைப் பின்தொடர்ந்தாள். தோள்களைக் குலுக்கியபடி முனகிக் கொண்டு கிறங்க வைக்கும் குரலில் பேசினாள்," பாக்கமாட்டீங்களா..வாங்க போலாம், பக்கத்திலேயே இடம் இருக்கு...".

நிலவு உயரே மிதந்து கொண்டிருந்தது. அவளின் குரல் அன்னியமாக இருந்தது. "சரி தான் வாங்க....", ஷாஷா அவசரமாக நடந்து கொண்டு அவனை விடாது அழைத்துக் கொண்டிருந்தாள். "உங்களுக்கு வேண்டாம்னா பரவாயில்லை... வேறு ஏதாவது செஞ்சுக்கங்க..... இருபது கொபெக்குகள் மட்டும் கொடுங்க...". அமைதியாக வழிப்போக்கன் நடந்தான், தன் முன்னே எதுவும் இல்லாதது போல, எதையும் அவன் பார்க்காததைப் போலகேட்காததைப் போல. ஷாஷாவின் குரல் உடைந்தது, அழுகை வந்தது,  கண்களில் நீர் வழிந்தது...திடீரென ,கடைசி முயற்சியாக அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றியது..."சார் இந்தக் குளிருல உங்க முன்னாடி, துணியில்லாமல் நிர்வாணமா, அஞ்சு நிமிஷம் நிக்கிறேன். எனக்கு நீங்க அஞ்சு கொபெக்குகள் கொடுத்தாப் போதும்...."

வழிப்போக்கன் சட்டென நின்றான். அவனது கண்கள் ஒளிர்ந்தன. சிறிதாகச் சிரித்தான், விகாரமாக  இருந்தது. அவன் முன் போய் நின்றாள்.

குளிரில் நடுங்கியபடி கைகளால் முகத்தைத் துடைத்துக் கொண்டே சிரிக்க முயன்றாள்.
--- நீ விரும்பினால் ஐந்து ரூபிள்களே தருவேன் , வழிப்போக்கன் சொன்னான்.
ஷாஷா குளிரில் நடுங்கியபடி நம்பமுடியாமல் அமைதியாகப் பார்த்தாள்.
--- இதப் பார் துணியை அவிழ்த்துப் போட்டு  நில்லு. உன்னைப் பத்துத் தடவை அடிக்கப் போறேன். விழுகிற ஒவ்வொரு அடிக்கும் ஐம்பது கொபெக்குகள் கொடுப்பேன். உனக்கு வேணுமா?

சொல்லிவிட்டுச் சிரித்தான். தடுமாறியபடி இருமினான்.

--- குளிருது...ஷாஷா சொன்னாள், ஆச்சரியம், அச்சம், பட்டினியால் தூண்டப்பட்ட பேராசை,அவநம்பிக்கை அனைத்தும் அவளைச் சூழ்ந்து கொண்டது, காய்ச்சல் கண்டவள் போல் உணர்ந்தாள்.

---உனக்கு என்னன்னு தெரியாது... அஞ்சுக்கு அந்தக் குளிர விடு....
---வலிக்கிற அளவுக்கு நீ அடிப்பாயா... ஷாஷா முணுமுணுத்தாள் .. இன்னும் அவளால் முடிவு செய்ய முடியவில்லை.
--- ஆமாம்   வலிக்கும். நீ துடிப்பாய்...அஞ்சு ரூபிள் வேணும்னா அப்படித்தான்... வழிப்போக்கன் நடையைக் கட்டினான், காலடியில் பனிகள் நொறுங்கும் சத்தம் கேட்டது.

ஷாஷா உள்ளே நடுங்கினாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ---அஞ்சு கொபெக்குகள் கொடுங்க... என்றாள். 

வழிப்போக்கன் கண்டு கொள்ளாமல் நடந்தான். ஷாஷா அவன் கையைப் பற்ற நினைத்தாள். அவன் வெடுக்கென்று கையை இழுத்துக் கொண்டான். கோபத்தில் எட்டு வைத்தான். ஷாஷா பின் தொடர்ந்தாள். கெஞ்சினாள். அழுதாள்.
வழிப்போக்கன் நின்றான். திரும்பினான். அவன் முகம் பிரகாசமானது.

---சரி அவன் கிசுகிசுத்த குரலில் சொன்னான்.
ஷாஷா குழப்பமுடன் நின்றாள், முட்டாள்தனமாக இருந்தது அவள் சிரிப்பு, பிறகு தயக்கத்துடன் உடைகளைக் களைய ஆரம்பித்தால். குளிரில் உறைய ஆரம்பித்தாள். அவனிடமிருந்து பார்வையை அகற்ற முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் முகம் உணர்ச்சியற்று விகாரமாகத் தெரிந்தது.
---அப்படித்தான் ... அப்புறம் பார் உனக்கு காசு... அவன் கரகரத்த குரலில் சொன்னான்.

கடுமையான குளிர் அவளது வெற்றுடம்பை நாலாபுறமும் ஊடுருவியது. தோலை முற்றாகக் கிழித்துக் கொண்டிருப்பது  போல் இருந்தது. மூச்சுவிட சிரமப் பட்டாள்.
---சீக்கிரம் அடி.. ஷாஷா முணுமுணுத்துக் கொண்டே அவனுக்குத் தன் பின் புறத்தைக் காட்டினாள்.


அவள் பிறந்த மேனியாக நின்று கொண்டிருந்தாள். அது முழுதும் வித்தியாசமாக இருந்தது. இரவில், நிலவொளியில் உறைந்து கொண்டு, பனிக்கு நடுவே பிறந்த மேனியாக.


---சரி, கொடூரமான குரலில் சொன்னான், ---பார்நேரா நில்லு . அஞ்சு ரூபிள்கள்  நீ போடற சத்தத்துக்கு ஒண்ணுமே இல்லை.
---சரி அடி , மெதுவாக முணுமுணுத்தாள். பனியால் வெடித்துக் கொண்டிருக்கும் உதடுகளைக் கடித்தாள். தசைகளைச் சுருக்கிக் கொண்டாள்.

வழிப்போக்கன் நின்றான். திடீரென ஒரு பிரம்பை எடுத்தான். தனது அத்தனை பலத்தையும் ஒன்று திரட்டி ஓங்கி அவளது பின் புறத்தில் அடித்தான். அவளது பின் புறம் சுருங்கியது. வலி அவளது உடல் முழுக்கப் பரவி மூளை வரை சென்றது. அவளுக்கு அந்த வயல், நிலா, வழிப்போக்கன், வானம், மொத்த உலகம் எல்லாம் சேர்ந்து ஒன்றாகத் தெரிந்தது.
வலியால் அலறினாள். ஷாஷா சில அடிகள் முன்னே ஓடினாள்.  அடி விழுந்த இடத்தை இரண்டு கைகளினாலும் பற்றினாள்.

--- கைகளைக் கொண்டு மூடாதே. அவளைத் துரத்திக் கொண்டு பின்னால் சென்றான்.
 
ஷாஷா அழுந்தத் துடைத்தவாறே கைகளை எடுத்தாள். இரண்டாவது அடி உடனடியாக விழுந்தது. தாங்கிக் கொள்ள முடியாத வலியைத் தந்தது. பரிதாபமாகக் கத்தியபடி குப்புற விழுந்தாள்.

அடுத்தடுத்து அடிகள் அவளது வெற்றுடம்பின் மீது விழுந்தது. அடியின் வேகத்தில் அவள் பனியில் புதைந்தாள். ஏறக்குறைய மயக்கம் அடைந்தாள். ஷாஷா கடும் பனியில் ஊர்ந்தாள்.

---ஒன்பது அவன் கரகரத்த குரலில் எண்ணினான், மின்னல் தாக்கியது போல அடுத்த அடி அவளின் மேல் விழுந்தது. பாம்பு போல சுருண்டு  கொண்டாள். வயிற்றின் மேல் அந்த அடி விழுந்தது. அடிபட்ட இடங்கள் கந்திக் கொண்டு வந்தன. அவளது இடுப்பு எலும்புப் பகுதி நிலா வெளிச்சத்தில் காயத்தைக் காட்டியது. எல்லா இடமும் அடிபட்டிருந்தது. பேதைப்  பெண் இப்போது தனது மார்பைக் காட்டினாள்.

---பத்து அவன் வெறி கொண்டு அடுத்த அடியைக் கொடுத்தான். அவள் நினைவிழந்தாள். உடனடியாக நினைவு திரும்பியது.

---சரி எந்திரி நாயே ...அவன் கரகரத்த  குரலில் சொன்னான்.
---அப்புறம் பணத்தை வாங்கிட்டுப் போ.
நிலா உயரே சுடராக ஒளி விட்டுக்   கொண்டிருந்தது. பனியும் அமைதியான வயல் வெளியும்.

ஷாஷா தடுமாறியபடி கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்தாள். வெள்ளை உடம்பில் பாம்பு ஊர்வது போல அடிபட்ட இடங்கள் நீலம் பூத்துத் தெரிந்தது. அவளுக்கு இப்பொழுது குளிர் தெரியவில்லை. ஆயாசமாக உணர்ந்தாள். தலை சுற்றியது, வலி உடல் முழுக்க பரவி இருந்தது. உடல் எரிச்சல் எடுக்கத் தொடங்கியது. நனைந்து விட்ட உடலை துணியால் துடைத்து விட்டுக் கொண்டாள். அவள் உடுத்திக் கொண்டாள். அவன் அவளது கைகளில் எதையோ திணித்து விட்டுப் போனான். அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அதற்குள் அவன் எட்டு வைத்து மூடு பனிக்குள் ரொம்ப தூரம் சென்று விட்டான். அவனது உருவம் கருப்பாகத் தூரத்தில் மறைந்து  கொண்டிருந்தது. அவள் கைகளைப்பிரித்து என்ன கொடுத்து விட்டுப் போனான் என்று பார்த்தாள்.

தனது அழுக்கான கைகளுக்குள் பொன்னிறத்தில் மின்னும் ஐந்து ரூபிள்களைப் பார்த்தாள்.

---அஞ்சு ரூபிள்கள். ஷாஷா நினைத்துப் பார்த்தாள். திடீரென ஓர் உற்சாக வெள்ளம் அவளுள்ளே பெருக்கெடுத்தது. ஆனந்தத்தில் குதித்தாள். கெட்டியாகப் பணத்தைக் கைகளில் பற்றிக்கொண்டு நடுங்கும் கால்களுடன் நகரத்தை நோக்கி ஓடினாள். அவளது ஆடை எதிலோ மாட்டிக்  கொண்டு கிழிந்தது. அதையெல்லாம் கவனிக்க அவளுக்கு நேரமில்லை. மகிழ்ச்சியால் பாடிக்கொண்டு ஓடினாள். உணவு, கதகதப்பு, ஓய்வு, அப்புறம் வோட்கா.

இந்த நினைப்பு அவளுக்குப் பேரானந்தத்தைக் கொடுத்தது. அவனைப் பற்றியோ அவன் கொடுத்த அடிகளைப் பற்றியோ  அவள் நினைக்கவில்லை.
---நல்லதுதான் மோசமில்லை --அவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள். அவன் மீது வெறுப்போ கோபமோ இப்போது அவளுக்கு இல்லை. 

ஆனந்தம் அவளைத் தொற்றிக் கொண்டது. சிறிய வீதிகளில் இரவு நேரத் தேநீர்க் கடைகளின் விளக்கு வெளிச்சத்தில் உற்சாகமாக நடைபோட்டாள்.
*****