Wednesday, December 1, 2010

В усадьбе : ஒரு கிராமத்து வீட்டில்


மூலம் : அன்டன் செக்ஹோவ்
மொழிபெயர்ப்பு : மா. புகழேந்தி



ரஷ்ய கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்த தரையின் அறையின் குறுக்கும் நெடுக்குமாக பவெல் இல்யித்ச் ரஷேவித்ச் மெதுவாகவும் மென்மையாக நடந்து கொண்டே பேசிக்கொண்டிருந்தார். அறையின் சுவரிலும் கூறையிலும் அவரது நீண்ட நிழலும் நகர்ந்து கொண்டு இருந்தது. அதை நீதித்துறையில் பணியாற்றும் அவரது விருந்தினர் மெய்யர் சோபாவில் அமர்ந்து கொண்டு புகைத்தவாறே கவனித்துக்கொண்டு இருந்தார். சுவர் கடிகாரத்தின் முள் ஏற்கனவே பதினொன்றைத் தொட்டு இருந்தது. பக்கத்துக்கு அறையில் மேசைகள் நகர்த்தும் ஒலி மெதுவாகக் கேட்டுக்கொண்டு இருந்தது

ரஷேவித்ச் சொல்லிக்கொண்டு இருந்தார் " நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசுங்கள் ,சமத்துவம் சகோதரத்துவம் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். சமத்துவத்தின் பார்வையில் , பன்றி மேய்க்கும் மிட்கா முதல் கோதே மற்றும் மாவீரன் பிரெடெரிக் ஆகியோர் அனைவரும் மனிதர்கள் தான். ஆனால் உங்களது நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுங்கள், உண்மையை தைரியமாக எதிர் கொள்ளுங்கள், உயர் குடிப்பிறப்பு என்பது உங்களால் உணரக்கூடிய தத்துவம் தான். எந்தப் பெண்மையினாலும் கண்டறியப்பட்டதல்ல. உயர் குடிப்பிறப்பு என்பது ஒரு வரலாற்று நியாயம், அதை புரிந்து கொள்ள மறுப்பது மானை அறிந்து அதன் கொம்பை அறியாமல் இருப்பபதற்கு சமம். ஒருவன் காரண காரியங்களை ஆராய்ந்து அறிய வேண்டும். நீங்கள் சட்டம் படித்தவர் அதனால் மனித உரிமைகளை பேசுவீர்கள், சமத்துவம் சகோதரத்துவம் போன்ற மாயைகளை பற்றி உளருவீர்கள். ஆனால் நான் டார்வினால் தெளிவாக்கப்பட்டவன். மேல்சாதி உயர் குடிப்பிறப்பு போன்றவை வெற்று வார்த்தைகள் அல்ல."

ரஷேவித்ச் உணர்ச்சிப்பெருக்குடன் பேசிக்கொண்டுபோனார். அவரது கண்கள் மின்னின அவரது மூக்குக்கண்ணாடி மூக்கின்மேல் நிற்க முடியாமல் தவித்தது, அவர் தனது தோளை குலுக்கிக்கொண்டு ஆவேசமாகப் பேசிக்கொண்டு வேகமாக கண்களை சிமிட்டிக்கொண்டு இருந்தார், தனது சாம்பல் நிற தாடியை இருகைகளாலும் தடவிய படி கண்ணாடி வழியே பார்த்தார். அவரது வேகத்துக்கு அவர் அணிந்திருந்த உடுத்து பழசுபட்ட குட்டையான மேலங்கியும் கால் சட்டையும் ஈடு கொடுக்க முடியாமல் தவித்தது. உயரமான அவருக்கு அவரது நீண்ட தலை முடி ஒரு கவிஞனையோ ஒரு பாதிரியாரையோ நினைவு படுத்தியது, அது அவருக்கு ஒரு பாதிக்கப்பட்ட இளைஞனை காண்பது போல் காட்டியது. அவர் கால்களை விரித்து நின்று பேசியபோது அவரது நிழல் சுவற்றில் ஒரு கத்தரிக்கோலைப் போல தோன்றியது.
அவர் பேசுவதில் மகிழ்ச்சி அடைபவர். எப்போதும் தான் உண்மையையும் புதுமையையும் பேசுவதாக எண்ணிக்கொள்பவர். மெய்யர் முன்பாக அவருக்கு புதுப்புது எண்ணங்களும் தத்துவங்களும் தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டு இருந்தது. மெய்யரை கருணை உள்ளவராக கண்டார் , மெய்யரின் இளமை, ஆரோக்கியம், நல்ல பழக்க வழக்கங்கள் நாகரிகமாகவும் நேசிக்கத் தக்கவையாகவும் இருந்தது. அதற்கும் மேலாக தனது குடும்பத்தின் மேல் மரியாதையை யும் நல்லுறவையும் மெய்யர் கொண்டுள்ளார் என்பதையும் அவர் அறிந்து இருந்தார்.

ரஷேவித்ச் தனது நண்பர்களால் விரும்பப் பட்டவர் அல்ல. இவருடன் பழக அவர்கள் அஞ்சினர். இவருடைய மனைவியை பேசியே சவக்குழிக்கு அனுப்பினார் என்றும் பிறர் வெறுக்கும்படி அர்த்தமற்று தர்க்கம் செய்பவர் என்றும் இவர் ஒரு தேரை என்றும் இவரது நண்பர்கள் இவரின் முதுக்குப் பின்னால் இவரைப்பற்றி பேசுவது இவருக்கே தெரியும்.
மெய்யர் இந்த மாவட்டத்துக்கு புதியவரானதால் ரஷேவித்ச் மற்றும் அவரது மகள்களுடன் மட்டுமே பழகி இருந்தார். இவர்களது வீட்டுக்கு மட்டுமே அவர் அடிக்கடி வருவார். இங்கு வருவது மட்டுமே மெய்யருக்கு தனது குடும்பத்துடன் இருப்பது போல் நிம்மதி அளித்தது. ரஷேவிட்சும் மெய்யரை விரும்பினார், தனது மூத்த மகள் கென்யாவுக்கு இளமையாகவும் நல்ல பழக்கங்களும் கொண்ட மெய்யர் கணவனாக வேண்டும் என்றும் எண்ணினார்.
இப்போது தனது உற்சாகமான புது பிரசங்கத்தை குதூகலத்துடன் மெய்யர் முன் செய்துகொண்டு இருந்தார். மெய்யரைப் போன்ற ஒரு நல்லவனுக்கும் தனது மகளுக்கும் திருமணம் என்று எண்ணிய போது மேலும் உற்சாகம் பொங்கியது. தனது கவலைகள் எல்லாம் இனி எப்படியோ விலகிவிடும் என்று மகிழ்ந்தார். கவலைகள் ஒழிக! வங்கிக்கு இரண்டு காலாண்டுகளாக கட்டாமல் விட்ட தவணையும் வட்டியும் இரண்டாயிரம் ரூபிளுக்கு மேல் வந்துவிட்டது. அதை நினைத்து சற்றே கலங்கினார்.
மீண்டும் மீண்டும் உற்சாகம் பொங்க பேசினார் " எனது அறிவுக்கு சந்தேகமில்லாமல் தெரிகிறது அஞ்சா நெஞ்சன் ரிச்சர்ட் பிரெடெரிக் பார்பரோசா போன்றோர் வலிமையானவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருந்தனர் அவர்களது திறமைகள் அவர்களது சந்ததிகளுக்கு செல்லும், அவர்களது மகன்களுக்கு உரிய கல்வியும் பயிற்சியும் அளித்தால் அந்தத்திறமைகள் அவர்களிடம் காப்பாற்றப்படும், அதே போல் அவர்களும் இளவரசிகளை மணந்து கொண்டால் இவர்களது திறமைகளும் இவர்களது சந்ததிகளைச்சென்றடையும், இப்படியே சென்றால் முடிவில் இவர்களது திறமைகள் அனைத்து சந்ததியினரின் ஊணிலும் உயிரிலும் கலந்து விடும். எனவே தான் சொல்கிறேன் மேல் சாதி மக்கள் எந்தக் காரணம் தொட்டும் கீழ் சாதியினருடன் சம்பந்தம் செய்துகொள்ளக்கூடாது. மேல் தட்டு இளைஞர்கள் தங்கள் கலப்படமில்லாத ரத்தத்தை அவ்வாறே தலைமுறை தலைமுறைக்கும் காப்பாற்றி கொண்டு செல்ல வேண்டும். அந்தக் காரணங்களுக் காகத்தான் ஆண்டாண்டு காலமாக கீழ்தட்டு மக்களை மேல் சாதியினர் ஒதுக்கியே வைத்துள்ளனர். ஆம் நண்பரே! அதனால் தான் சாதாரண சமையல்காரனின் மகன்களால் நமக்கு இலக்கியத்தையோ கலையையோ அறிவியலையோ சட்டத்தையோ தர முடிவதில்லை. இதனால் தான் மனித குளம் மேல் சாதியினருக்கு கடமைப்பட்டு இருக்கிறது. இயற்கையின் வரலாற்றினை இந்தக் கண்ணோட்டத்தில் பாருங்கள், சொபகேவித்ச் போன்ற சாதாரண பிரபுக்கள்கூட மிகச்சிறந்த பதினைந்துக்கும் மேற்பட்ட அருங் காட்சியகங்களைக் கட்டிய வணிகர்களை விட மேலானவர்களாக இருக்கிறார்கள் .இப்போது உங்களது விருப்பத்தைச் சொல்லுங்கள்! நான் தாழ்த்தப் பட்ட ஒருவன் அல்லது சமையல்காரன் ஒருவனுடன் கைகுலுக்க மறுக்கவா அல்லது அவனுடன் சேர்ந்து உட்கார்ந்து உணவு அருந்தவா? நான் மறுப்பதால் இயற்கையின் நியதியை நேர்த்திசெய்கிறேன் அல்லவா?"

ரஷேவித்ச் அசையாமல் நின்றுகொண்டு தடியைத் தடவியபடி இருந்தார் அவரது நிழலும் சுவற்றில் ஒரு விரிக்கப்பட்ட கத்தறிக் கோலைப் போல அப்படியே அசைவற்று இருந்தது.
தனது கால் சட்டைப்பையில் கைகளை விட்டவாறே சாய்ந்து நின்றார் பிறகு பாதத்தின் முன் நுனியில் நின்று பேசத் தலைப்பட்டார் " இப்போது அன்னை ரஷ்யாவை எடுத்துக்கொள்ளுங்கள், யாரெல்லாம் அவளது சிறந்த குடிமக்கள்? சிறந்த ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்கள்...யார் அவர்கள்? அவர்கள் எல்லாம் உயர் சாதியினர், பிரபுக்கள். புஷ்கின், லேர்மொண்டோவ், துர்கேநோவ், கோன்ட்சேரோவ், டால்ஸ்டாய்... இவர்கள் யாரும் வெட்டியானின் பிள்ளைகள் அல்லர்."

" கோன்ட்சேரோவ் ஒரு வணிகர்" என்றார் மெய்யர்.

“சரி அதை அப்புறம் பார்க்கலாம், கோன்ட்சேரோவின் மேதாவித் தனம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதல்ல. சரி இப்போது நாம் பெயர்களை விட்டு விடுவோம் மற்ற விஷயத்துக்கு வருவோம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எடுத்துக் காட்டாக கீழ் மகன் ஒருவனை கவனியுங்கள் அவனை இது வரை அவன் அறிந்து இராத ஓரிடத்துக்கு அனுமதியுங்கள் கல்வி கற்கவோ அல்லது இலக்கியம் கற்கவோ அல்லது நீதி மன்றத்தின் உள்ளோ அனுமதியுங்கள் அவன் என்ன செய்கிறான் என்று பாருங்கள். அவன் நுழைந்த இடத்தை சின்னா பின்னப் படுத்தி சீரழித்து சிறப்பினை மங்கச்செய்து அருமை பெருமைகளை ஒழித்துக்கட்டி விடுவான். அவன்கள் இலையுதிர்கால் ஈக்களைப் போல செத்து ஒழியட்டும். தெய்வ அருளால் அப்படி அவர்கள் ஒழிய வில்லை என்றால் இந்த இழி பிறப்புகள் மனித நாகரீகத்தின் அனைத்துப் பெருமைகளையும் சிதைத்து விடுவார்கள்.”
"இப்போது சொல்லுங்கள் இந்த கீழ் சாதி மக்கள் என்ன நமக்கு செய்து இருக்கிறார்கள் இவர்களால் யாருக்கு என்ன நன்மை?" ரஷேவித்ச் இப்போது அசாதாரணமான அச்சமடையக்கூடிய வாறு முறுவலித்தார், "எந்த இலக்கியமும் இதுவரை இந்த இழி பிறவிகளைப் போற்றியதில்லை. இப்போதுள்ள மக்கள் எந்த ஒரு லட்சியமோ கொள்கையோ கொண்டவர்கள் இல்லை. இப்போதுள்ள மக்களில் பெரும்பாலோர் முன்னேற்றவாதியாக சிந்தனாவாதியாக தெரிகிறார்கள் ஆனால் அவர்களை ஒரே ஒரு ரூபிளுக்கு வாங்கி விடலாம். அவர்கள் முன் உங்களது பணப்பையை காட்டி விடாதீர்கள் அதை அவர்கள் பிடுங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்." ரஷேவித்ச் கண்சிமிட்டி சத்தமிட்டு சிரித்தார். “என்ன அவர்களது நீதி? எங்கேயிருக்கிறது அவர்களது கொள்கை?”
ரஷேவித்ச் திரும்பிக் கதவினைப்பார்த்தார், "இப்போது யாரும் மனைவியால் கணவனது உடைமைகள் திருடப்பட்டதைக் கண்டு ஆச்சரியப்படுவதில்லை. என்ன ஒரு கேவலம். இப்போது சின்னப் பெண்கள் எல்லாம் காதலனைத் தேடிக்கொள்கிறார்கள். செல்வந்தர்களுக்கு இப்போது இருக்கும் நாடகக் கொட்டகைகள் இந்த மாதிரி சின்னப் பெண்களை தங்களது மனைவிமார்களுக்கு பதில் அந்திப் பொழுதில் கூட்டிச்செல்ல வசதியாக இருக்கிறது. தாய்மார்கள் தங்களது மகள்களை விற்கிறார்கள். கணவன்மார்களிடம் அவர்களது மனைவி க்கு என்ன விலை என்று கேட்கிறார்கள். பேரம் நடக்கிறது... "

இதுவரை அசையாமல் அமைதியாக சோபாவில அமர்ந்து இருந்த மெய்யர் சட்டென்று எழுந்து தனது கடிகாரத்தைப் பார்த்தார்.
"மன்னிக்க வேண்டும் போவெல் இல்யித்ச் நான் கிளம்ப நேரமாகிவிட்டது" என்றார் .
ஆனால் தன்னுடைய உரையை இன்னும் முடிக்காத போவெல் இல்யித்ச் மெய்யர் தோளைச் சுற்றி கையைப்போட்டு மீண்டும் அமரச்செய்தார் இரவு உணவு அருந்தாமல் செல்லவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொண்டார்.
மீண்டும் மெய்யர் உட்கார்ந்து பொறுமையின்றி கேட்கத்தொடங்கினார் , இப்போது தான் ரஷேவிட்சின் உண்மையான முகத்தையும் அறியலானார் . அவரது முகம் சிவக்க ஆரம்பித்தது. அந்த நேரத்தில் வேலைக்காரப் பெண் வந்து இரவு உணவுக்கு செல்லுங்கள் என்று இளம் பெண்கள் வேண்டு கிறார்கள் என்றாள். சற்றே சலிப்புடன் மெய்யர் முதலாவதாக வெளியேறினார். உணவு மேசையில் ரஷேவிட்சின் இருமகள்கள் கென்யா மற்றும் இறைதா ஆகியோர் காத்துக்கொண்டு இருந்தனர், ஒருவள் இருபத்து நான்கு வயதும் அடுத்தவள் இருபத்தி இரண்டு வயது மாக இருந்தனர், வெளுத்தும் கரு நிறக் கண்களுடனும் ஒரே அளவு உயரத்துடனும் இருந்தனர். கென்யா கூந்தலை தாளக் கட்டி இருந்தால். இறைதா தூக்கி வாரி சீவி தலைக்குமேல் முடிந்து இருந்தாள்.
சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு கோப்பை கசப்பு மதுவை இருவரும் அருந்தினர். இதற்கு முன் அவர்கள் குடித்ததே இல்லை என்பது போலும் எதேச்சையாக காற்றை விழுங்கியவர்கள் குழப்பமடைவது போல் வெடிச்சிரிப்பு சிரித்தனர்.
"குறும்பு வேண்டாம்" என்றார் ரஷேவித்ச்.
அவர் தானே பேசவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் முன் வேறு யாராவது பேசினால் பொறாமைப்பட்டார்.
மெய் யெ ரை அன்புடன் பார்த்தவாறே பேச ஆரம்பித்தார் ரஷேவித்ச் "இப்படித்தான் நண்பரே நமது இதயத்திலுள்ள கனிவினாலும் கால ஓட்டத்தின் பின்னால் உள்ளோம் என்று சந்தேகப்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தாலும் நாம் வட்டிக்கு விடுவோரிடத்திலும் சத்திரத்திலுள்ளவனிடத்திலும் நாம் சமத்துவம் சகோதரத்துவம் பேசுகிறோம். இப்போது தெரியும் அப்படி இருப்பது எவ்வளவு குற்றமென்று. மனித குல நாகரிகம் ஒரு முடியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. என் இனிய நம்பரே இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் இந்த கீழ் சாதி மக்களால் இக்கால ஹுனர்களால் நமது மூதாதையர்களால் கட்டிக்காப்பாற்றப்பட்ட அனைத்து நல்லவைகளும் அழிந்து போகும். "
இரவு உணவை முடித்தபின் அனைவரும் ஒய்வு அறைக்குச் சென்றனர். கென்யாவும் இறைடாவும் மெழுகு விளக்கினை ஏற்றி விட்டு பியானோவில் இசைக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்களது தந்தை மீண்டும் பேச ஆரம்பித்தார் எப்போது நிறுத்துவார் என்று தெரிய வில்லை. தனது மகள்களின் சந்தோசத்தை விட புத்திசாலியாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு பேசுவதில் இன்பம் கொள்ளும் தலைக்கனம் பிடித்த தந்தையின் நிலையை எண்ணி இரு மகள்களும் வருந்தினர். இந்த வீட்டுக்கு வந்த ஒரே இளைஞன் மெய்யர் தான் அந்த இளைஞனும் அவர்களது அழகை கவனிக்க இடம் கொடுக்காமல் தந்தையால் ஆட்கொள்ளப்பட்டு ஒரு அடி கூட நகர் முடியாமல் இருக்கிறானே என்று வெம்பினர்.

" எப்படி மேற்கின் அனைத்து பிரபுக்களும் ஒன்று சேர்ந்து மங்கோலியர்களை விரட்டினார்களே அவ்வாறே நாம் ஒன்று சேர்ந்து காலம் கடப்பதற்கு முன் இந்த கீழ்மக்களை முறியடிக்க வேண்டும். அனைவரும் ஒரு சபதம் ஏற்போம். இது வரை இருந்தது போதும் இனி வேண்டாம் இந்த தயவு தாட்சண்யம். " இப்போது ரஷேவித்ச் குரலை உயர்த்தி மத போதகரைப் போல தனது வலது கையைத் தூக்கி வைத்து பேசலானார். "அகோர முகம்கொண்ட இழிபிறவிகளே நான் இப்போது போவெல் இல்யித்ச் அல்ல அஞ்சா நெஞ்சன் ரிச்சர்ட் ஆக்கும் உங்களது கூண்டுக்குச் செல்லுங்கள் நாய்களே என்று கூக்குரலிட்டு அவர்களது அகோர முகத்தில் துப்புவேன் "
மெய்யர் திரும்பிக்கொண்டார். "என்னால் அப்படி செய்ய முடியாது" என்றார்.
"ஏன் முடியாது? " என்று புத்துணர்ச்சியுடன் ரஷேவித்ச் கேட்டார். ஒரு நீண்ட தர்க்கத்தை எதிர்பார்த்து மீண்டும் கேட்டார் "ஏன் முடியாது ?"
"ஏனென்றால் நானும் கீழ் சாதிக் காரன் தான் " என்றார் மெய்யர் இதைச்சொல்லும் பொது அவரது கண்கள் நீரினால் மின்னின கழுத்து புடைத்தது முகம் சிவப்பேறி இருந்தது.
"எனது தந்தை ஒரு கூலித்தொழிலாளி அதனால் எந்தக் கேவலமும் இல்லை என்று நினைக்கிறேன் " உடைந்து போன வறட்டுக குரலில் சொன்னார் மெய்யர்
.
ரஷேவித்ச் பயந்து போனார். கையும் களவுமாகப் பிடிபட்டது போல் உணர்ந்தார், மெய்யரைப் பரிதாபமாகப் பார்த்தார். என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார்.
வலிக்கும் அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு மேயெரின் குரல் ஒலித்தது " ஆம் நான் கீழ் சாதிக் காரன் தான். எனக்கு அதில் பெருமையே" என்றார்.
அதன் பின்னே நாற்காலிகள் மேலும் மேசையின் மேலும் இடித்துக்கொண்டு மெய்யர் தடுமாறியபடி வேகமாக முன் அறைக்குச் சென்றார். அவரது வண்டி வருவதற்கு முன்னே வாசலுக்குச் சென்று காத்து இருக்கலானார்.
"நீங்கள் இருளில் தான் இன்றிரவு செல்ல வேண்டும். நிலவு உதிக்க பின்னிரவு ஆகும் " முனு முனுத்த படி பின்னால் நின்றார் ரஷேவித்ச்.
இருவரும் படியில் குதிரைகள் பூட்டபபடுவதற்காக காத்து இருந்தனர். குளிராக இருந்தது.
தனது கட்டினை உடுத்தியவரே மெய்யர் சொன்னார் "அதோ ஒரு விண்கல்"
"ஆகஸ்ட் மாதத்தில் நிறைய விழும்" என்றார் ரஷேவித்ச்.
குதிரைகள் கதவு முன் வந்தபோது ரஷேவித்ச் வானத்தை தீவிரமாக பார்த்தபடி பேசினார் " பிலேமொரியன் தத்துவத்தின் படி...."

தனது விருந்தினர் செல்வதைப் பார்த்தபின் தோட்டத்துக்குள் சென்றார், இருளில் அசைந்தபடி நம்பமுடியாமல் நடந்ததை எண்ணி வேதனைப்பட்டார். எத்தனை பெரிய முட்டாள் தனம். வெட்கமும் வேதனையும் அவரைப் பிடுங்கித்தின்றது. முதலில் தன் விருந்தினர் என்ன சாதி என்பதை அறியாமல் இந்த விவகாரத்தை ஏன் பேச வேண்டும் ? இதே போல் தான் முன்னர் ஒருமுறையும் நடந்தது. ரயிலில் பயணம் செய்யும் போது ஜேர்மன் காரர்களை கண்டபடி திட்டிக்கொண்டு வந்தார் பிறகு தான் தெரிந்தது தன்னுடன் பயணித்த அனைவரும் ஜேர்மன் காரர்களே என்று. இப்போது மெய்யர். இனி மெய்யர் ஒருக்காலும் தனது வீட்டுக்கு வரமாட்டார் என்று கருதினார். இது போல் கீழே இருந்து வரும் அறிவு ஜீவிகள் எளிதில் அவமானங்களை மறக்கமாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்று கருதினார்.
"இது கொடுமை ,கொடுமை " என்று முணுமுணுத்தார். சோப்பினை தின்றது போல் கிறங்கினார், துப்பியபடி சொன்னார் "இது கொடுமை , கொடுமை".
தோட்டத்திலிருந்தபடியே வரவேற்பறையின் ஜன்னல் வழியே அவரால் பார்க்க முடிந்தது. கென்யா பியானோவிற்கு அருகில் இருந்தாள் அவளது முடி தாழ்ந்து இருந்தது. கென்யா வேகமாகப் பேசிக்கொண்டு இருந்தாள், இறைதா அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு சிந்தனை வயப்பட்டவளாக இருந்தாள். இப்போது அவளும் வேகமாகப் பேசத் ஆரம்பித்தாள். அவளது முகம் ஆத்திரத்தில் சிவந்து அதிர்ந்து கொண்டு இருந்தது. ஒரே நேரத்தில் இருவரும் பேசினார்கள். ரஷேவிட்சால் ஒரு வார்த்தையைக்கூட கேட்கமுடியவில்லை அனாலும் தன்னைத்தான் திட்டுகிறார்கள் என்று உணர்ந்து இருந்தார். கென்யா அநேகமாக தனது தந்தை மீது புகார் கூறிக் கொண்டு இருந்தாள், வீட்டுக்கு வரும் ஒவ்வொரு நல்ல மனிதரையும் தனது தந்தை பேசியே விரட்டி விடுகிறார் இப்போது கூட தமக்குத் தெரிந்த ஒரே நபரான தனக்கு வரனாக வேண்டிய ஒருவரையும் துரத்தி விட்டார். இப்போது அந்த அப்பாவி யின் மனம் என்ன பாடு படுகிறதோ, இந்த மாவட்டத்திலேயே அவருக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய இடம் ஏதும் இல்லையே என்றும் கவலை கொண்டாள். . கென்யா தனது கைகளை நம்பிக்கையற்று விரக்தியில் வீசினால் . இறைடா வும் தங்களது தேவையற்றுப் போன வாழ்க்கையைப் பற்றியும் வீணாகிப் போன தங்களது இளமையைப் பற்றியும் கசப்புடன் பேசிக்கொண்டு இருப்பாள். ரஷேவித்ச் தனது அறைக்குத் திரும்பி வந்து படுக்கையில் உட்கார்ந்து தனது உடைகளைக் களைய ஆரம்பித்தார். தான் ஒடுக்கப் பட்டதாக இப்போது உணர ஆரம்பித்தார். இப்போதும் சோப்பை விழுங்கியது போலவே உணர்ந்தார், வெட்கப்பட்டார். உடைகளைக் கலைந்த பின் கவனித்தார், நீண்டு மெலிந்த உறுதியானதுமான வயதான தனது கால்களைப் பார்த்தார் தேரை என்று இவரைப் பற்றி மற்றவர்கள் கிண்டல் செய்வதை ஒத்துக்கொண்டார். ஒவ்வொரு வாதத்தின் போதும் தான் அவமானம் அடைவதை உணர்ந்தே இருந்தார். எப்படியோ, எதேச்சையாகவோ அல்லது விதிப்படியோ உற்சாக மாக ஆரம்பிக்கும் ஒவ்வொரு வாதமும் மென்மையாக நட்போடு ஆரம்பித்தாலும் எப்படி நல்ல நோக்கோடு ஆரம்பித்தாலும் சரி பெரும் விதண்டா வாதமாகவும் திட்டுவதிலும் முடிகிறது, என்று எண்ணினார். தன்னை ஒரு சிந்தனா வாதியாக எண்ணிக்கொண்டாலும் உலகம் வேறு விதமாக பார்க்கிறது. சுத்தமாகவும் உண்மையாகவும் அவர் அறிவியலையும் கலையையும் எதிர்த்தே பேசிவந்தார், இத்தனைக்கும் அவர் கற்றறிந்தவர் அல்ல. தனது ஊருக்கு வெளியே என்ன நடக்கிறது என்று கூட தெரியாதவர். எந்த நூலையும் கல்லாதவர்.
அவர் யாருக்காவது பாராட்டுக் கடிதம் எழுதினால் கூட அதில் ஏதாவது ஒரு திட்டும் சொல் கலந்து இருக்கும். என்ன ஆச்சரியம் என்றால் உண்மையில் அவர் உணர்ச்சி வசப்படக்கூடிய ஒரு மனிதர், அடிக்கடி கண்ணீர் விடுவார். அவரை ஏதேனும் ஒரு பேய் பிடித்து ஆட்டலாம், அவரது விருப்பத்துக்கு மாறாக செயல்களைச் செய்ய வைக்கலாம்.
"இது கொடுமை ,கொடுமை " என்று பெருமூச்சு விட்டார். "இது கொடுமை ,கொடுமை " என்று புலம்பினார்.
அவரது இரு மகள்களும் தூங்க வில்லை. யாரோ சிரிப்பதும் அழுவதுமாக தெரிந்தது யாரோ யாரையோ தேறுவதாக தெரிந்தது, யாரோ பேய் பிடித்தது போல் கூச்சலிட்டார்கள் அது அனேகமாக கென்யா வாக இருக்கலாம். இப்போது இறைடா கூட தேம்பினாள். வேலைக்காரி வெறுங்காலுடன் மேல் தளத்துக்கும் கீழ் தளத்துக்கும் பல முறை ஓடிக்கொண்டு இருந்தாள்.......
"என்ன கொடுமை இது அடக் கடவுளே " என்று அங்கும் இங்கும் பேரு மூச்சு விட்டபடி திரும்பத் திரும்ப கூறிக்கொண்டு இருந்தார்.
தூங்கும் பொது கேட்ட கனவு கண்டார். அறையின் மத்தியில் நிர்வாணமாக நின்று கொண்டு சொடுக்குப் போட்டு பேசுவது போல் கனவு கண்டார். "அவர்களது அகோர முகத்தில்! அவர்களது அகோர முகத்தில்! அவர்களது அகோர முகத்தில்!"
திடீரென தூக்கத்திலிருந்து விழித்தார். தவறாகப் புரிந்து கொள்வது எவ்வளவு மோசமானது என்று எண்ணிக் கலங்கினார் .
இனி எப்போதும் மெய்யர் தனது வீட்டுக்கு வர மாட்டார் என்பது அவருக்கு உடனடியாக கவலையை ஏற்படுத்தியது..
அவருக்கு இப்போது புரிய ஆரம்பித்தது வங்கிக்கு தவணைகளும் வட்டியும் கட்ட வேண்டும், தனது மகள்களுக்கு மாப்பிள்ளைகள் தேட வேண்டும், உணவும் உடையும் தேடிக்கொள்ள வேண்டும், அதற்கும் மேலாக உடல்நலக் குறைவும் முதுமையும் வாதிக்கிறது, விரைவில் குளிர் காலம் வர இருக்கிறது, விறகுகளும் தீர்ந்து கொண்டு இருக்கிறது. எத்தனை கவலைகள்...
காலை ஒன்பது மணிக்கும் மேலானது. ரஷேவித்ச் உடுத்திக்கொண்டு மெல்ல டீயும் இரண்டு துண்டு ரொட்டிகளும் சாப்பிட்டார். அவரது மகள்கள் இருவரும் அவருடன் சேர்ந்து உணவருந்த வரவில்லை அவர்கள் இவரைச் சந்திக்க விரும்பவில்லை என்று தெரிந்தது, இதை அறிந்து வேதனைப் பட்டார். அவர் தனது அறையில் அமர்ந்து தனது மகள்களுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தார். அவரது கைகள் நடுங்கின கண்கள் வலித்தன. தனக்கு வயதாகி விட்டது, தன்னை யாரும் விரும்ப வில்லை என்றும் , தன்னை மன்னிக்குமாறும் மறந்துவிடும் படியும் கெஞ்சி எழுதினார், தான் இறந்து விட்டால் எந்த சிறப்பும் செய்யாமல் புதைத்து விடும் படியும் அல்லது ஹர்கோவ் இல் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு உடலை தானமாக வழங்கிவிடும் படியும் எழுதினார். ஒவ்வொரு வரியையும் கசப்போடும் அடுத்தவர்களை குற்றம் சாட்டும்படியும் இருப்பதாக இருந்தது.
"தேரை" பக்கத்து அறையில் இருந்து ஒரு சத்தம் கேட்டது. அவரது மூத்த மகளது குரல் "தேரை" ஆத்திரத்தில் நடுக்கத்துடன் வெளிப்பட்டது.
"தேரை" இப்போது அவரது இளைய மகளும் எதிரொலியைப் போலக் கத்தினாள்.
"தேரை."

1 comment:

  1. \\ஒவ்வொரு வாதத்தின் போதும் தான் அவமானம் அடைவதை உணர்ந்தே இருந்தார்\\

    ஆம்.வாதங்கள் கசப்பை உருவாக்குவதுடன்,
    மதிப்பையும் கெடுத்துவிடுகிறது.

    ஆனால் இதுபோன்ற கல்லுக்குள்ளேயே வாழும் ”தேரை”கள் சரித்திரத்தில் நிஜத்தில் நிறைய காணமுடிகிறது.

    ஆனால் சாதிக்கலப்பு என்னவோ பெரும்பாலும் உயர்ந்தவர்கள் என நினைக்கும்,மற்றவர்களும் அதைக் கொண்டே தன்னை மதிக்கப்படவேண்டும் என ஆளுமை செய்துவந்த ஆதிக்க சாதியினரால் தான் தொடங்கி இருக்கவேண்டும்.

    தோற்றால் நிர்வாணமாகி வீர மரணம் அடைந்த ரஜபுத்ரர்கள் கூட காட்டுமிராண்டிகள் என வர்ணிக்கப்பட்ட மங்கோலியர்களின் வழிவந்த மொகலாய சாம்ராஜ்ய அதிபதியான அக்பரின் மாமன்மார்களும் மச்சினர்களும் ஆனது வரலாறு.

    ஏனெனில் உலகளாவிய அமெரிக்க ஏகாதிபத்தியம்,
    பூர்ஷ்வாக்கள்,லூயி இன்னுமுள்ள சீனத்தின் வல்லாதிக்கம் போன்றதே நமது நாட்டின் தீண்டாமையும்.

    ஏனெனில் வலுத்தவன் இளைத்தவனை ஏய்ப்பதும்,சுரண்டுவதும் தான் இந்நாட்டின் வழக்கம்.

    உயர்சாதியினர் செய்தால் அது இராஜதந்திரம் என்றும் கீழ்சாதியினன் செய்தால் கேப்பமாரித்தனம் என்றும் சாதீயப்புத்தி என்றும் கொள்ளப்படும்.

    வாதங்கள் ஒருபுறம் இருப்பினும்,தாங்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு இது போன்ற பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை மொழியாக்கம் செய்து வெளியிடுவது ஒரு சேவை என்றே எம்மால் கொள்ளப்படுகிறது.தமிழன் தனது நேரத்தை தங்களைப் போன்ற தமிழ்ச் சேவை செய்தால் வரலாற்றுக்கு வழிகாட்டுவதாக அமையும்.

    அதேவேளை, தங்களின் எழுத்து நடை மிகத் தேர்ந்த எழுத்தாளர் போன்று உள்ளது.மொழியாக்கத்திற்கு தாங்கள் பட்ட உழைப்பின் களைப்பை எங்களின் பின்னூட்டங்கள் களைந்து உற்சாகமூட்டும் என்றே எண்ணுகிறேன்.

    அதுசரி தங்களின் ”புகழின் கல்வெட்டுக்கள்”என்ற தளம் பயன்பாட்டில் உள்ளதுதானே?

    மீண்டும் புதிய முகத்துடன் வந்திருக்கும் தங்களை வரவேற்பதுடன்,தமிழுக்கு இன்னும் புதிய செல்வம் சேர்க்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

    வாழ்த்துக்களுடன் ஒரு தமிழ்நேசன்

    ReplyDelete