Thursday, December 9, 2010

лотерейный билет : பரிசுச் சீட்டு




மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி


இவான் த்மிற்றித்ச் - நடுத்தர வர்கத்து மனிதன், ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு  ரூபிள்கள் வருமானத்துடன் சந்தோசமாக தனது  குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தான், இரவு உணவு முடித்த கையோடு சோபாவில் அமர்ந்து அன்றைய செய்தித் தாளைப் படித்துக் கொண்டு இருந்தான். 

" இன்றைய செய்தித் தாளைப் படிக்க மறந்து விட்டேன்" என்று அவனது மனைவி  மேசையை துடைத்துக் கொண்டே சொன்னாள்.  "லாட்டரி  முடிவுகள் ஏதாச்சும் போட்டிருக்கா? "

"ஆமாம்! நீ வாங்கிய டிக்கட்  இன்னும் குலுக்கப்படலையா?  " கேட்டான் இவான்.
"இல்லை. இந்த செவ்வாய் தான் வாங்கினேன்"
"நம்பர் என்ன?"
"வரிசை 9499 நம்பர் 26"
"சரி பார்ப்போம்... 9499 அப்புறம் 26"

இவானுக்கு  லாட்டர்யின் மேல் நம்பிக்கை இல்லை. வழக்கமாக அவன் லாட்டரி முடிவுகளை பார்ப்பதே இல்லை. ஆனால் இப்போது வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லாததாலும் கண் முன்னே செய்தித்தாள் இருப்பாதலும்  விரல்களை முடிவுகளின் மேல் ஓட விட்டான். உடனடியாக அவன் கண்களில் இரண்டாவது வரிசையிலேயே 9499 என்ற எண்கள் தென் பட்டது. கண்களை நம்பமுடியாமல் செய்தித்தாளைக் கால்களுக்கு இடையில் நழுவ விட்டான்.
அவனது அடி வயிற்றுள் யாரோ குளிர் நீரை வைத்தது போல் உணர்ந்தான். கடுமையாகவும் இனிப்பாகவும் இருந்தது.
"மாஷா 9499  இருக்கு!" நடுங்கும் குரலில் சொன்னான்.
அவனது அச்சமுற்ற வெளிறிய முகத்தைக் கண்ட அவள் அது 
வேடிக்கையாக கூறப்பட வில்லை என்பதை உணர்ந்தாள்.

"9499?" மடித்த துணியை மேசையின் மேல் போட்டபடி வெளிறிய முகத்துடன் கேட்டாள்.

"ஆமாம் ஆமாம், மெய்யாலுமே அது இருக்கு"
"டிக்கெட்டின் நம்பர் இருக்கா?"
"ஆமாம், நம்பர் கூட இருக்கு. பொறு பொறு ....இல்லை... நான் என்ன சொல்கிறேன் என்றால் வரிசை எண் அதில் இருக்கு... எப்படியோ நீ புரிஞ்சுக்கணும் ...."
ஒளிர்வான  பொருளைக் காட்டினால் குழந்தைகள் எப்படி மகிழுமோ அப்படி  தனது மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான்  . அவனது மனைவியும் புன்னகைத்தாள். அவனைப் போலவே அவளும் மகிழ்ந்தாள், அவன் டிக்கெட் நம்பரைச் சொல்லாமல், வரிசையை மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தான், வெற்றி பெற்ற டிக்கெட்டின் நம்பரை கண்டுகொள்ள அவன் முயற்சி செய்யவேயில்லை.

இதைப்போல அதிர்ஷ்டத்தை நம்பி கனவு காண்பது இனிமையானது.
"இது நம்ம வரிசை" நீண்ட அமைதிக்குப் பிறகு இவான் த்மிற்றித்ச் பேசினான். "நமக்கு பரிசு விழுவதற்கு வாய்ப்புகளிருக்கு. இது ஒரு வாய்ப்பு தான், ஆனால்  அது இருக்கு"
"சரி இப்பப் பார்"

"கொஞ்சம் பொறு! நிறைய முறை நாம் ஏமாந்து இருக்கிறோம். இது மேலிருந்து இரண்டாவது வரிசையில் இருக்கு, அப்படீன்னா பரிசு எழுபத்தி ஐந்து ஆயிரம் ரூபிள்கள். அது பணம் அல்ல வலிமை, மூலதனம். இன்னும் ஒரே நிமிஷத்தில் நான் கண்டு பிடிப்பேன் அதோ 26 . நான் சொல்றேன் நாம மெய்யாலுமே ஜெயிச்சிட்டோமா? "

கணவனும் மனைவியும் சிரித்தார்கள், ஒருவருக்கு ஒருவர் அமைதியாகப் பார்த்துக் கொண்டார்கள்.

பரிசு விழுந்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, சந்தோசத்தில் குழம்பிப்போனார்கள், இதை அவர்கள் கனவிலும் எதிர்பார்க்க வில்லை, எதுக்கு அவ்வளவு பணம், என்ன வாங்கப் போகிறார்கள், எங்கே போவார்கள் செலவு செய்ய . அவர்களது சிந்தனையில் 9499 மற்றும் 75,000  மட்டுமே நிலைத்து இருந்தது அதில் வரும் ஆனந்தத்தை அவர்கள் முழுதுமாக உணரவில்லை. 

இவான் த்மிற்றித்ச் கைகளில் செய்தித்தாளை வைத்துக் கொண்டு பலமுறை இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் நடை பழகினான், இப்போது தான் அவன் அந்த மகிழ்ச்சியின் கனவில் ஆட்பட ஆரம்பித்தான் . 

"நமக்கு பரிசு விழுந்தால் அது புது வாழ்க்கையின் ஆரம்பம், ஒரு பெரும் மாற்றம். டிக்கெட் உன்னுடையது, என்னுடையதாக இருந்தால், முதல்ல இருபத்தி ஐந்து  ஆயிரத்துக்கு ஒரு தோட்டம் வாங்குவேன், உடனடிச் செலவுக்கு பத்தாயிரத்தை ஒதுக்கிக்குவேன், புது சாமான்கள், கடனை அடைக்க , ஊரைச் சுற்ற... மீதி நாற்பதாயிரத்தை வங்கியில் போட்டு வைத்து வட்டி வாங்கிக்  கொள்வேன்..."

"ஆமாம் தோட்டம் வாங்கணும், நல்லது தான்" தனது மடியில் கையைவைத்துக் கொண்டு அவன் மனைவி  சொன்னாள்.

"டுலாவிலோ ஒர்யோல் மாகாணத்திலோ அதை வாங்கலாம், நமக்கு கோடை அரண்மனை வேண்டாம் அதில் எந்த வருமானமும் இல்லை."

அவனது நினைவில் புதிது புதிதாக கற்பனைகள் உதித்தது ஒன்றை விட ஒன்று சிறந்ததாக வந்தவண்ணம் இருந்தது.

கற்பனையில் தோன்றிய காட்சிகளில் அவன் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் இருந்தான், கத கதப்பாக உணர்ந்தான் , இன்னும் வெம்மையாக உணர்ந்தான். அங்கே அவன் பனிக்கட்டியின் குளிர்ச்சியைப் போல் உள்ள சூப்பினை அருந்திய பின்பு நீரோடையின் அருகில் மல்லாந்து எலுமிச்சம் மர நிழலில் படுத்து இருப்பதாக கனவு கண்டான். அங்கே சூடாக இருந்தது. அவனது சிறு குழந்தைகள் மகனும் மகளும் அவனுக்கு அருகில் உருண்டு புரண்டு  மணலில் குழி தோண்டி புல்வெளியில்பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். அவன் செல்லமாக சலித்துக்கொண்டு இருந்தான், யோசிக்க ஒன்றுமே இல்லை, அலுவலகத்துக்கு நாளை செல்ல வேண்டுமா, நாளை மறுநாள் செல்ல வேண்டுமா, இல்லை அதற்கு அடுத்தா...ஓய்வெடுத்துக் களைத்துப்  போயிருந்தான்.. வயலுக்குப் போகவா, காட்டினுள் சென்று காளான் பறிக்கவா, மீன் பிடிப்பவர்களை பார்க்காவா.. கதிரவன் மறையும் போது, துண்டினைக் கட்டிக்கொண்டு நீராடச்சென்றான், ஓய்வாக உடைகளைக் களைந்து மெதுவாக வெற்று மார்பினை தேயத்துவிட்டுக்கொண்டே ஒளி ஊடுருவாத சோப்புத் தண்ணீரில்  அமிழ்ந்தான். நீரில் , நீந்தும் மீன்களையும் 
தலையாட்டும் நாணல்களையும் கண்டான்.

குளித்த பிறகு இனிப்பான டியும் பால் உருளைகளும்....பிற்பகலில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சிறிது நேர உரையாடல் அல்லது சின்ன நடை.
"ஆமாம் தோட்டம் வாங்குவது நல்லது "  அவனது மனைவியும் சொன்னாள் அவளும் கனவினில் இருந்தால், அவளது முகமும் கனவுகளால் ஆட்கொள்ளப் பட்டு இருக்கிறாள் என்பதைக் காட்டியது.
இவான் த்மிற்றித்ச் கற்பனையில் கண்டான், குளிர்கால மழை அதன் குளிரான மாலை நேரங்கள், புனித மார்டினின் கோடை...இந்த முறை தோட்டத்தில் ஆற்றோரம் நீண்ட தூரம் நடை செல்ல வேண்டும், குளிர் எடுக்குமளவுக்கு, பிறகு வோட்கா குடிக்க வேண்டும் உப்பிட்ட காளான் சாப்பிட வேண்டும், ஊருகாயாக்கப்பட்ட வெள்ளரியினைத் தின்ன வேண்டும்அப்புறம் மறுபடியும் குடிக்க வேண்டும்.. குழந்தைகள் தோட்டத்திலிருந்து அப்போது தான் பறிக்கப்பட்ட காரட்டையும் முள்ளங்கியையும் மண் மணம் மாறாமல் எடுத்துக் கொண்டு ஓடிவர வேண்டும். அவன் ஓய்வாக சோபாவில் படுத்துக் கொண்டு படம் போட்ட புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு இருக்கவேண்டும் அல்லது தனது கோட்டை சோம்பலுடன் கழற்றிக் கொண்டு இருக்க வேண்டும்...
மேகமூட்டத்துடன் கூடிய இருளான கால நிலை  புனித மார்ட்டினின் கோடைக்குப் பின் வரவிருக்கிறது. அல்லும் பகலும் மழை இருந்து கொண்டே இருக்கும். மரங்கள் அழுதே விடும், காற்று ஈரமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். 
நாய்கள், குதிரைகள், வாத்துக்கள் எல்லாம் ஈரமாக இருக்கும், இழிபிறவிகள். 
யாரும் எங்கேயும் போக முடியாது. பல நாட்கள் முடங்கியே இருக்க வேண்டும். ஜன்னல் வழியே பார்ப்பதைத் தவிர ஒன்றுமே செய்ய முடியாது. 

இவான் த்மிற்றித்ச் கற்பனையை நிறுத்திக் கொண்டு மனைவியைப் பார்த்தான்.
"நான் வெளிநாடு போகப் போகிறேன். தெரிஞ்சுக்க மாஷா "  அவன் சொன்னான்.
"குளிர் காலத்தில் வெளிநாடு செல்வது எவ்வளவு இன்பமானது, தெற்கு நோக்கிப் போக வேண்டும், பிரான்ஸ் அல்லது இத்தாலி அல்லது இந்தியா ....
"நானும் வெளிநாடு போவேன்" அவன் மனைவி சொன்னாள். "டிக்கெட் நம்பரைப் பாருங்க சீக்கிரம்"
"பொறு பொறு"

அறையில் நடந்து கொண்டே சிந்திக்கலானான். அவள் வெளிநாடு சென்றால் என்ன ஆகும்? தனியாகப் பயணம் போனால் சந்தோசமாக இருக்கும். இந்தப் பெண்ணுடன் தூரமாகப் போனால் எந்நேரமும் குழந்தைகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பாள் வெறுப்பாக இருக்கும். இவான் த்மிற்றித்ச் தனது மனைவியைப் பற்றி நினைத்துப் பார்த்தான் ரயிலில் மூட்டை முடிச்சுகளுடன், எந்நேரமும் எதையோ ஒன்றைப் பற்றிக் குறைப் பட்டுக்கொண்டே இருப்பாள், ரயிலில் வந்ததால் தனக்கு தலை வலிக்கிறது என்பாள் தனது பணம் எல்லாம் செலவு ஆனது என்பாள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் தண்ணீருக்காகவும் ரொட்டி வெண் ணைக்காகவும் ஓடிக்கொண்டு இருக்க வேண்டு.... அவள் விருந்து உண்ண சம்மதிக்க மாட்டாள் ஏன் என்றால் அது செலவு பிடிக்கும் என்பாள்.
அவன் மனைவியைப் பார்த்த படியே நினைத்தான் "இவளைக் கூட்டிக்கொண்டு போகக்கூடாது..நம்மை வெறுப் பேத்துவாள் .   ஆனால் என்ன செய்வது லாட்டரி டிக்கெட் அவளுடையது தானே! அவள் வெளிநாடு போவதால் என்ன பிரயோசனம்? அறைக்குள்ளேயே முடங்கிக்கொள்வாள். என்னையும் வெளியே போக விட மாட்டாள். எனக்குத் தான் தெரியுமே !  "

அவனது மனைவிக்கு வயதாகிவிட்டதாக   வாழ்வில் முதல் முறையாக அறிந்தான், சமைத்து சமைத்து அவளது உடல் முழுக்க அதே வாசம், அவன் இன்னும் இளமையாக புதியதாக ஆரோக்கியமாக இருக்கிறான்இன்னும் ஒரு முறை திருமணம் செய்யலாம் போல் இருக்கிறான்,
'சே என்ன நினைப்புடா இது? " அவன் நினைத்துக் கொண்டான், "அவள் மெய்யாலுமே வெளிநாடு போவாளா?அங்கே சென்று என்ன செய்யப் போகிறாள்? நான் கனவில் தான் போக முடியுமா? உண்மையில் அவளுக்கு என்ன தெரியும் நேப்பில்சுக்கும் க்ளினுக்கும் என்ன வித்தியாசத்தைக் காண்பாள்? "
அவள் என்  கூடத்தான் வந்தாகணும். நான் அவளை அண்டியே இருக்கணும். எல்லாப் பெண்களையும் போல அவள் பணம் கைக்கு வந்ததும் பூட்டி வைப்பாள். என் கைக்குக் கிட்டாமல் பணத்தை ஒளித்து வைத்துக் கொள்வாள். 
 அவளது உறவுக்  காரங்களுக்கு   செலவளிப்பாள். இவான் த்மிற்றித்ச் அவளது உறவுகளைப் பற்றிச் சிந்திக்கலானான். பரிசு விழுந்த செய்தி கேட்டதும் அவளது அண்ணன்மார், அக்காள்மார், அத்தைமார், மாமன்மார் எல்லாரும் பிச்சைக்காரர்களைப் போல இங்கே வந்து குழுமுவார்கள். பொய்யான புன்னகையுடன் குசலம் விசாரிப்பார்கள். வெறுக்கத்தக்க மக்கள்  அவர்கள். என்ன கொடுத்தாலும் இன்னும் வேண்டும் என்பார்கள். மறுத்தால் எல்லாவகையான கேடும் அடைய சாபம் கொடுப்பார்கள்.

இவான் த்மிற்றித்ச் இப்போது தனது உறவுகளை நினைத்தான், அவர்களது முகங்கள் அதே அளவு வெறுக்கத்தக்கவை. "அவர்களும் ஊர்வன  போலத்தான்!" நினைத்துக் கொண்டான்.

இப்போது அவனது மனைவியின் முகத்தையும் நினைத்தான் அதுவும் அதே அளவுக்கு வெறுப்பைத் தந்தது. அவனது இதயத்தில் அவள் மீது கோபம் பொங்கியது. மோசமாக எண்ணினான். 

"அவளுக்குப் பணத்தைப் பற்றி என்ன தெரியும்? கஞ்சப் பிசிநாரி. அவளுக்குப் பரிசு விழுந்தால் எனக்கு என்ன நூறு ரூபிள் தான் தருவாள். மீதியைப் பூட்டி வைத்துக் கொள்வாள். "

இப்போது அவனது மனைவியைப் புன்னகை இல்லாமல் வெறுப்புடன் பார்த்தான், அவளும் அவனை நோக்கினாள். அதே அளவு கோபமும் வெறுப்பும்  அவளிடமும் இருந்தது. அவளும் அவளுக்குண்டான பகல் கனவினைக் கண்டுகொண்டு இருந்தாள்.  அவளுக்கும் திட்டங்கள் இருந்தது. அவளது வெளிப்பாடுகளில், தனது கணவனின் கனவு என்ன என்பதை அவளும் அறிந்து இருந்தாள். யார் முதலில் பரிசினைக் கைப்பற்றுவது என்று முடிவு செய்து இருந்தாள். 

"அடுத்தவரது செலவில் பகல் கனவு காண்பது இனிமையானது! " அவளது கண்கள் மின்னின. 'வேண்டாம் முயற்சி செய்யாதே"
அவளது பார்வையின் பொருளை  அறிந்து கொண்டான். வெறுப்பு அவனது நெஞ்சில் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. திரும்பத் தனது மனைவிக்கு ஆத்திரமூட்ட மீண்டும் செய்தித்தாளைப் படித்தான், அவளை புண்படுத்த வேண்டி சத்தமாக வெற்றி கொண்டவனைப் போல நான்காம் பக்கத்தைப்  படித்தான்,
"வரிசை 9499 நம்பர் 46  அனால் 26  அல்ல "

வெறுப்பும் நம்பிக்கையும் ஒரு சேர காணாமல் போனது. இவான் த்மிற்றித்ச்இற்கும் அவனது மனைவிக்கும் தெளிவானது அவர்களது அரை சிறியதாக  இருந்துள்ளது என்று. இரவு உண்ட உணவு செரிபடாமல் வயிற்றில் தங்கி இருக்கிறது. மாலை நேரங்கள் நீண்டதாகவும், சலிப்பூட்டக்கூடியதாகவும் தெரிந்தது. 

"சனியன் பிடித்தது இதுக்கு என்ன அர்த்தம்?" இவான் த்மிற்றித்ச் மோசமாக நையாண்டி செய்தான். "எங்க கால் வச்சாலும் குப்பையும் கூளமுமா இருக்கு. வீட்டைக் கூட்டவே இல்லை போல இருக்கு. யாருக்கும் உள்ள இருக்கப் பிடிக்காது. வெளியே போலாம்னு இருக்கு. எனக்கு நிரந்தரமா ஒரு தண்டனை வேணும். இப்பவே வெளிய போய் கண்ணில் தெரியும் முதல் மரத்திலேயே தூக்கு போட்டுக்கிறேன்."


1 comment:

  1. \\பரிசு விழுந்த செய்தி கேட்டதும் அவளது அண்ணன்மார், அக்காள்மார், அத்தைமார், மாமன்மார் எல்லாரும் பிச்சைக்காரர்களைப் போல இங்கே வந்து குழுமுவார்கள். பொய்யான புன்னகையுடன் குசலம் விசாரிப்பார்கள். வெறுக்கத்தக்க மக்கள் அவர்கள். என்ன கொடுத்தாலும் இன்னும் வேண்டும் என்பார்கள். மறுத்தால் எல்லாவகையான கேடும் அடைய சாபம் கொடுப்பார்கள்.\\

    உலகில் உள்ள பெண்களும்,உறவினர்கள் கூட ஒரே மாதிரியானவர்கள் தானா? மக்களின் மனங்களை படம் பிடித்துள்ளது தான் எழுத்தாளர்களின் வெற்றியோ?!!!....

    \\"அவர்களும் ஊர்வன போலத்தான்!\\

    எல்லோரும் பாம்புகள் போல் விடம் கொண்டவர்கள் தானோ?!!!.....

    யாரைத்தான் நம்புவதோ...பேதை நெஞ்சம்.....!!!

    தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்

    ReplyDelete