Friday, December 17, 2010

Рассказ старшего садовника : தலைமைத் தோட்டக்காரர் சொன்ன கதை



மூலம் : அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி 



திப்புக்குரிய நா-வின் தோட்டத்து சாலையில் பூ விற்பனை நடந்து கொண்டிருந்தது. வாங்குவதற்கு மிகச்சிலரே வந்திருந்தனர் -- , என் பக்கத்து வீட்டு நிலச்சுவான்தார், ஒரு இளம் மர வணிகன் அப்புறம் நான். வேலைக்காரர்கள் எங்களால் வாங்கப் பட்டவற்றை எல்லாம் கட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த போது நாங்கள் சாலையின் முகப்பருகே அமர்ந்து பல தலைப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ஏப்ரல் மாத காலைவேளையில் தோட்டத்தில் அமர்ந்து தூய காற்றில் பறவைகளின் சத்தங்களுக்கிடையே பூக்களை வாங்குவதை ரசிப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது. 

தலைமைத் தோட்டக்காரர், மிக்ஹில் கர்லோவித்ச்வயதானவர் மதிக்கப் பட வேண்டியவர், மழிக்கப்பட்ட முகமும், விலங்குகளின் ரோமத்தால் செய்யப்பட மேலாடையும் அணிந்து, வாங்கப்பட்ட பொருட்கள் ஏற்றப் படுவதை மேற்பார்வை பார்த்துக்கொண்டே ஏதாவது புதுத் தகவல் அறிந்து கொள்ளலாம் என்று நாங்கள் பேசுவதையும் கவனித்துக் கொண்டு இருந்தார்.  அவர் புத்திசாலியாகவும், நல்ல மனம் கொண்டவராகவும் இருந்தார், எல்லோராலும் மதிக்கப்பட்டார். என்ன காரணத்தாலோ சிலர் ஜேர்மன்காரராகவே அவரைப் பார்த்தனர், இத்தனைக்கும் அவரது தந்தை ஸ்வீடன்காரர், தாய் ரஷ்யன் அவர் ஆர்தோடக்ஸ் சர்ச்சுக்குச் செல்பவர். அவருக்கு ரஷ்யன், ஸ்வீடிஷ் மற்றும் ஜேர்மன் ஆகிய மொழிகள் தெரியும். இந்த மொழிகளில் அவர் நிறையப் படித்திருக்கிறார். சொல்லப் போனால் அவருக்குப் புத்தகங்கள் கடன் கொடுப்பதும் இலக்கியம் பற்றிப் பேசுவதும்எடுத்துக் காட்டாக -இப்செனைப் பற்றிப் பேசுவதும் போல மகிழ்ச்சி தருவது வேறொன்றும் இல்லை. 

அவரிடமும் குறைகள் இருந்தன, ஆனால் அவை அறியாமையால் தான், தன்னை தலைமைத் தோட்டக்காரர் என்று அழைத்துக் கொண்டார், இருப்பினும் அவருக்குக் கீழே எந்தத் துணைத் தோட்டக்காரரும்  இல்லை,  பேசும் போது அவரது முகம் அதிகப்படியான மரியாதையைக் காட்டும், தான் பேசும் போது எதிர்க் கருத்து இருக்கக் கூடாது  என்றும் கவனமுடனும் மரியாதையுடனும்  அவை கேட்கப் படவேண்டும் என்றும்  நினைப்பார்.
"நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால் அந்த இளைஞன் ஒரு பரம அயோக்கியன்", என் பக்கத்து வீட்டுக் காரர் தண்ணீர் பீப்பாயை எடுத்துச் செல்லும் கருப்பு முகம் கொண்ட ஒருவனைப் பார்த்துச்  சொன்னார். "போன வாரம் நகரத்தில் திருட்டுக் குற்றத்துக்காக விசாரணை செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டான். எதோ அவன் மன நோயாளி என்று சொல்லித்  தீர்ப்பு வாசித்தார்கள், ஆனால் பாருங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறான் என்று. இப்பெல்லாம் ரஷ்யாவில் இது மாதிரி நிறையத் தீர்ப்புகள் வருது, நிறையக் குற்றவாளிகள் விடுதலையாகிறார்கள், இதெல்லாம் நல்லதுக்கு இல்லை. இப்படிச் செய்தால் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்குற்றவாளிகள்  தண்டிக்கப் படாததால் தீர்ப்புகள் தவறாகின்றன.  ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், 'கொடுமையும் குழப்பமும் மலிந்த இந்தக் காலத்தில் நாம் குற்றவாளிகளின் கருணையைத் தான்  வேண்ட வேண்டும்.' "

"ஆமாம்" , வணிகர் ஒத்துக் கொண்டார். "இதே போல அடிக்கடி குற்றவாளிகள் விடுவிக்கப் படுவதால நாட்டில் கொலையும் கொள்ளையும் அதிகமாகீருச்சு. விவசாயிகளைக் கேட்டுப் பாருங்க!" 

மிக்ஹில் கர்லோவித்ச் எங்களிடம் திரும்பிச் சொன்னார், "நண்பர்களே என்னைப் பொறுத்தவரை குற்றம் செய்யவில்லை அப்படீன்னு விடுவிக்கப்  பட்டவங்களை நான் சந்திக்க ஆசைப்படுகிறேன். நீதிக்கும் நேர்மைக்கும் நான் பயப்படலை குற்றம் செய்யவில்லைன்னு ஒருத்தன் சொல்றபோது நான் மாறுதலுக்காக மகிழ்ச்சியடைகிறேன். நீதிபதி விடுவிக்கிறதால தப்புப் பண்றாருன்னு என் உள் உணர்வு சொன்னால் கூட நான் வெற்றிமிதப்பில் மகிழ்ச்சியடைகிறேன். நீதிபதிகள் மனிதனுக்கும் மேலேயா சாட்சிகள் மேலவும் ஆதாரங்கள் மேலவும் வாதங்கள் மேலவும் நம்பிக்கை வைக்கிறது? அதுக்கும் மேல மனிதர்கள் மேல வைக்கணும். அது மாதிரி செய்ய கடவுளை நம்பி உணர்கிறவர்களால் தான் முடியும். " 

"நல்ல சிந்தனை" , நான் சொன்னேன். 

"ஆனால் அது புதியதல்ல. எனக்கு நினைவிருக்கு ஒரு கதையைப் பற்றி,  ரொம்ப நாள் முந்தி கேட்டது . அது ரொம்ப நல்ல கதை." , தோட்டக்காரர் புன் முறுவலுடன் சொன்னார், "என் பாட்டி எனக்குச் சொன்னது, என் அப்பாவோட அம்மா, நல்ல பொம்பளை. ஸ்வீடிஷில் அதை எனக்குச் சொன்னார்கள். அது நம்ம மொழியில் சொன்னா நல்லா இருக்குமா அப்படீன்னு தெரியலை."

மொழியைப் பற்றி என்ன கருத்துதானே முக்கியம் சொல்லுங்கள் என்று நாங்கள் அவரை அந்தக் கதையைக் கூறச் சொல்லி வற்புறுத்தினோம். மிக்க மகிழ்ச்சியடைந்தார், வேண்டுமென்றே பைப்பைப் பற்ற வைத்துக் கொண்டு கோபத்துடன் வேலையாட்களைப் பார்த்துக் கொண்டு ஆரம்பித்தார். 

"ஒரு சிறிய நகரத்தில், மரியாதைக்குரிய வயதான பெரியவர் இருந்தார், அவர் பேரு தாம்சனோ  வில்சனோ -- பேரா முக்கியம்? அவர் எல்லோராலும் மதிக்கப்ப்படும்படியான மருத்துவராக இருந்தார். அவர் தனியாகவும், மற்றவர்களோடு பழகாமலும், தன தொழிலுக்கு தேவைப்படும்போது மட்டும் பேசுபவராகவும் இருந்தார். யாரையும் போய்ப் பார்க்க மாட்டார், தனக்குத் தெரிந்தவர்களைப் பார்த்தால் தலையைச் சிறிது  ஆட்டுவார், மதிக்கப்படும் துறவியின் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். என்ன காரணம்னா அவர் படித்தவர், அந்தக் காலங்களில் படிச்சவங்க மத்தவங்களை மாதிரி இருக்கமாட்டாங்க. அவங்க அல்லும் பகலா சிந்திச்சுகிட்டோ  , படிச்சுகிட்டோ , மத்தவங்க நோய்களை குணப்படுத்திகிட்டோ   இருப்பாங்க, மத்ததெல்லாம் அவுங்களுக்கு தூசு மாதிரி, ஒரு வார்த்தையைக்  கூட வீணாக்க மாட்டாங்க. அந்த நகரத்துல இருந்தவங்களுக்கேல்லாம் இது புரிஞ்சதால, அவரை யாரும் சும்மா போய்ப் பார்த்துத் தொந்தரவு செய்ய மாட்டாங்க. அவுங்க ரொம்ப சந்தோசத்துல இருந்தாங்க  கடவுள் நமக்கு இப்படி ஒருத்தரை அனுப்பி நம்ம நோய்களைக் குணமாக்குறார்னு.  இப்படி ஒருத்தர் நம்மளோடு இருக்கிறார்னு பெருமைப் பட்டாங்க.  'அவருக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை' அப்படீன்னு சொல்லுவாங்க. 

"ஆனா, அது மட்டும் போதாது. 'அவர் எல்லாரையும் விரும்பினார். ' அப்படீன்னும் அவங்க சொல்வாங்க. அவரது நெஞ்சுக்குள்ளே ஒரு நல்ல தேவதை குடி இருந்துச்சுன்னும் சொல்லலாம். அந்த நகர மக்கள் அவருக்கு அன்னியமானவங்களா இருந்தாலும், அவரோட மக்களா இல்லாட்டிப் போனாலும், அவங்களை எல்லாம் தன்னோட குழந்தை மாதிரி பார்த்துகிட்டார். தனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தாலும், இருமிகிட்டே இருந்தாலும் காய்ச்சல்ல அவதிப்பட்டாலும் வேறு யாருக்காவது உடம்பு சரியில்லைன்னு வந்து கூப்பிட்டா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மேடு பள்ளம்னு பார்க்காம ஓடிப் போய் மருத்துவம் பார்ப்பார். சோறு தண்ணி மழை வெய்யில்னு எதையும் பார்க்க மாட்டார், ஏதாவது நோயாளிகள் இறந்துட்டாங்கன்னா அவங்க சொந்தக்களோட இவரும் கண்கலங்குவாரு  இறுதிச்சடங்கில் கலந்துக்குவாரு,

"நகரத்துல இவர் இல்லாமல் ஒண்ணுமே முடியாதுன்னு நினைச்சாங்க, இவர் இல்லாத போது இதுக்கு முந்தி எப்படி இருந்திருக்கும்னு ஆச்சரியப் பட்டாங்க. அந்த மரியாதைக்கு எல்லை இல்லாமல் இருந்தது. குழந்தைங்க முதல் பெரியவங்க வரை, நல்லவன் கெட்டவன், யோக்கியன் அயோக்கியன்--எல்லாரும் அவரை மதிச்சாங்க, அவரது மதிப்பு என்னன்னு அத்தனை பேருக்கும் தெரிஞ்சு இருந்தது. அந்த நகரத்துலயும் சுத்துவட்டாரத்துலயும்  

அவருக்கு மரியாதையைக் குறைக்கிற மாதிரி யாரும் நடந்துக்க மாட்டாங்க அதைப் பத்திக் கனவுல கூட நினைச்சுப் பாக்க  மாட்டாங்க. அவர் வீட்டை விட்டு வெளிய வந்தார்னா கதவு ஜன்னலைப் பூட்ட மாட்டார், யாரும் திருட மாட்டாங்கன்னு தெரியும், திருடன் கூட தனக்கு கெடுதல் செய்ய மாட்டார்னு நம்புவார் .தன்னோட வேலையா அவர் நேரம்காலம் பாக்காம தனியா சாலைகளிலும் காட்டு வழியாவும்  மலைகள் மேலயும் நடந்து போவார், அங்கெல்லாம் திருடங்க இருப்பாங்க, இருந்தாலும் அவரை யாரும் ஒன்னும் செய்ய மாட்டாங்க. 

"ஒரு தடவை காட்டு வழியா அவர் வந்துட்டு இருந்த போது கொள்ளைக்காரங்க அவர் மேல பாஞ்சாங்க, யார்னு தெரிஞ்சதும்,  தொப்பிகளைக் கழற்றி மரியாதையா நின்னாங்க, அவருக்கு சாப்பிடக் கூடக் கொடுத்தாங்க, அவர் பசியில்லைன்னு சொன்னதுக்கு விலகி வழிவிட்டு அவரைப் பாதுகாப்பாகக் கூட்டிகிட்டு வந்து நகர எல்லை வரை விட்டாங்க. விதி பாருங்க அந்தத் திருடங்களுக்குக் கூட ஒரு நல்லவனுக்கு சேவை செய்ய வச்சிருக்கு. ம்ம்ம் பாட்டி சொல்லீருக்காங்க குதிரைகள் மாடுகள் நாய்கள் கூட அவரைத் தெரிஞ்சு வச்சிருந்துதுன்னு , அவரைப் பார்த்தா அவைகளும் சந்தோசப்ப்படுமாம். 

இந்த மாதிரி ஒரு நல்லவர் ஒவ்வொரு கெட்டதில இருந்தும் மக்களைப் பாது காத்தவர் அயோக்கியன் திருடன் கூட இவருக்கு கெடுதல் செய்ய நினைக்க மாட்டான் அப்படிப்பட்டவர் ஒரு நாள் காலைல கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். ஒரு நீரோடையில மண்டை உடைஞ்சு ரத்த வெள்ளத்துல கிடந்தார், அவர் முகத்துல  ஆச்சரியப் பட்டுப் பார்க்குற மாதிரி உணர்ச்சி தெரிஞ்சுகிட்டு இருந்தது , ஆமா, பய உணர்ச்சி இல்லை ஆச்சரிய உணர்ச்சி தான் கொலையாளியைப் பார்த்த போது அவருக்கு அச்சமில்லை ஆச்சரியம்தான் இருந்துச்சு. நீங்க புரிஞ்சுக்குவீங்க அந்த நகரத்துலயும் சுத்துவட்டாரத்துலயும் எவ்வளவு துக்கம் படிஞ்சிருக்கும்னு. எல்லாரும் வேதனைப் பட்டாங்க, கண்களை நம்பமுடியாம இருந்தாங்க,  எப்படி ஒருத்தனால இவரைக் கொல்ல முடிஞ்சுதுன்னு ஆச்சரியப் பட்டாங்க. விசாரணை  செஞ்ச நீதிபதிகள் அவரோட உடலைப் பார்த்த பின்னாடி சொன்னாங்க , 'இங்க கொலை செய்யப் பட்டதற்கான அடையாளம் இருக்கு. ஆனால் நம்ம டாக்டரைக் கொல்ல இந்த உலகத்துல இருக்குற எந்த மனிதனுக்கும்  மனசு வராது, அதுனால இந்த வழக்கு கொலை வழக்கு அல்ல, இந்த தடயங்கள் முக்கியமானவை அல்ல, இருட்டில் அவர் தடுமாறி விழுந்து உயிர் போகும் அளவுக்கு அடிபட்டு எதிர்பாராத விபத்து நடந்து போச்சு.'

"நகரமே இதுக்கு ஒத்துகிச்சி. டாக்டர் புதைக்கப் பட்டார். கொடுமையான மரணத்தைப் பத்தி அதுக்கப்புறம் யாருமே பேசலை. டாக்டரைக் கொலை செய்யுமளவுக்கு இருக்கிற இறக்கமேயில்லாத காட்டுமிராண்டியை அந்த நகர மக்கள் மறந்தே போனாங்க. திருடனும் ஒருநாள் அகப்படுவானில்லையா?"

"திடீர்னு ஒருநாள், நீங்க ஆச்சரியப் படுகிற மாதிரி, கொலை காரனைப் பிடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்துச்சு. ஒரு அயோக்கியன், பல தடவை  சிறைக்குப் போயிட்டு வந்தவன், தன்னோட அருவருக்கத்தக்க வாழ்க்கையால எல்லாராலும் வெறுக்கப் பட்டவன், குடிக்கிறதுக்காக டாக்டரோட பொருட்களை விற்க முயற்சி செஞ்ச போது பிடிபட்டான். கேள்விகள் கேட்டபோது, குழம்பிப்போனான்முன்னுக்குப் பின்னா  பேசினான், அவனோட வீட்டைச் சோதனை போட்ட போது அவனது படுக்கைக் கடியில் ரத்தக் கறை பட்ட சட்டை ஒன்னும் டாக்டரோட தங்கக் கத்தியும் கிடைச்சது. அதுக்கப்புறம் என்ன ஆதாரம் வேணும்? அவனை சிறையில் அடைச்சாங்க. நகர மக்கள் ஆத்திரப் பட்டாங்க, ஆனா அதே நேரம் என்ன சொன்னாங்கன்னா 

"நம்ப முடியலை. அப்படி இருக்காது. தப்பு நடக்காமப் பாத்துக்கங்க, உங்களுக்குக் கூடத் தெரியும்  தடயங்க தவறாக் கூட இருக்கும்! "

"விசாரணையின் போது கொலைகாரன் குற்றத்தை ஒத்துக்கலை. எல்லா ஆதாரங்களும் அவனையே குற்றம் சாட்டியது. தடயங்களின் படி அவன் தான் குற்றவாளி என்று உறுதியா நம்பமுடிஞ்சுது இந்த மண் கருப்புன்னு சொன்னா எப்படி மறுக்கமுடியாதோ அப்படி. ஆனா நீதிபதிகள் ரொம்ப எச்சரிக்கையா இருந்தாங்க, ஒவ்வொரு ஆதாரத்தையும் பத்துத் தடவை பார்த்தாங்க. சாட்சிகளை நம்பிக்கை இல்லாமல் விசாரிச்சாங்க, முகம் சிவந்தாங்க தண்ணி குடிச்சாங்க......விசாரணை காலையில ஆரம்பிச்சா சாயந்திரம் வரைக்கும் நடந்தது "

"குற்றம் சாட்டப்பட்டவரே", தலைமை நீதிபதி கொலைகாரனைப் பார்த்துச் சொன்னார்,"இந்த நீதிமன்றம்  டாக்டர் -- இன்னாருன்னு சொல்லி---நீதான் அவரைக் கொன்றது என்று உறுதியாகத் தீர்மானிக்கிறது, அதற்காக  உனக்கு...."

" மரண தண்டனை விதிக்கப்படுகிறது...என்று  தலைமை நீதிபதி சொல்லவந்தார் , ஆனால் அவரது கைகள் தீர்ப்பு எழுதப்பட்ட காகிதத்தின் மேல் தானா விழுந்தது. தனது நெற்றியிலே வழியும் வேர்வையைத் துடைத்துக் கொண்டு கத்தினார், "

"இல்லை! கடவுளே நான் தப்பாச் சொன்னா என்னை தண்டியுங்கள், ஆனால் அவன் குற்றவாளி இல்லை. என்னால ஒத்துக்கொள்ள முடியாது, நம் நண்பரும் மருத்துவருமான அவரைக் கொல்ல யாருக்கும் மனது வராது. அந்த அளவுக்கு யாரும் தரங்கெட்டுப் போக மாட்டார்கள்"

"அந்த மாதிரி யாரும் இருக்க முடியாது" , இன்னொரு நீதிபதியும் சொன்னார். 

"வேண்டாம்.  அவனைப் போகச் சொல்லுங்க" , கூட்டமும் கத்தியது. 

"கொலைகாரனை எங்கு வேண்டுமானாலும் போ , என்று விடுவித்தார்கள். ஒருத்தர் கூட இந்தத்  தவறான தீர்ப்பைக் குறை சொல்லவில்லை. என் பாட்டி சொன்னாங்க  மனிதகுலத்துக்கு நம்பிக்கை ஊட்டியதற்காக அந்த நகரத்தில் இருந்தவங்க செஞ்ச பாவத்தை எல்லாம்  கடவுள் மன்னிச்சாருன்னு.  மக்கள் மனித உருவில் தன்னைக் காணும் போதெல்லாம் அவர் மகிழ்ச்சியடைகிறார்,  மனிதத் தன்மை குறைந்து நாயை விடக் கேவலமாகப் போகும் போதெல்லாம் அவர் துக்கப் படுகிறார். குற்றவாளி விடுவிக்கப் பட்டதனால் அந்த நகர மக்களுக்கு கெடுதல் வேண்டுமானால் நடந்திருக்கலாம், நினைச்சுப் பாருங்க , ஒரு மனிதன் மேல நம்பிக்கை வெச்சு , அந்த நம்பிக்கை வீண் போகலைன்னு சொன்னா எவ்வளவு உயர்ந்த சிந்தனைகள் எல்லாருக்கும்  வரும், ஒருத்தரை ஒருத்தர் மதிக்கவும் அன்புகாட்டவும் தூண்டும், ஒவ்வொருத்தரையும், அது தான் முக்கியம். "

மிக்ஹைல் கர்லோவித்ச் தனது கதையை முடித்த போது என் பக்கத்து வீட்டுக்காரர் எதிர்த்து எதோ சொல்ல முற்பட்டார், ஆனால் தலைமைத் தோட்டக்காரர்சைகை காட்டினார் தனக்கு எதிர்த்துப் பேசுவது பிடிக்காது என்பது போல, பின் பெருமிதத்துடன் நடந்து அவர் பொருட்கள் ஏற்றப்படும் வண்டியினை நோக்கிச் சென்றார். 


*******

1 comment:

  1. \\கொடுமையும் குழப்பமும் மலிந்த இந்தக் காலத்தில் நாம் குற்றவாளிகளின் கருணையைத் தான் வேண்ட வேண்டும்\\

    காலம் கடந்து நிற்கும் தீர்க்கதரிசனமான கண்ணோட்டம்

    இன்றைய மருத்துவரைக் கனவில் கூட நினைத்துப் பார்க்கும் தைரியம் யாருக்கும் இருக்கும் என்று நினைக்கமுடியவில்லை.

    பணமே குறிக்கோளாய் வாழும் இவர்களின் வசத்தில் ஆன்மாவைக் கூட விற்கமுடிந்தால் விற்றுவிடுவார்கள்.

    இதுபோன்ற உயர்ந்த ஆன்மாக்களைக் கதைகளில் மட்டுமே படிக்க முடிவது காலத்தின் சாபம்.

    வரைந்ததற்கு ..வாழ்த்துக்களும்..பாராட்டுக்களும்...

    ReplyDelete